search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணறு வெட்டும் பணி"

    • பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் முருகன். இவரது விவசாய தோட்டத்தில் கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து மற்றும் வேலு ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள், தலைக்கவசம், வலைகள் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி சரளை கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கவாட்டு சுவற்றில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில் மஞ்சுநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலு காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அங்கிருந்தவர்கள் வேலுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து அங்கு வந்த சின்னகோவி லான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா(22) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ் மற்றும் மாரியப்பன் மகன் மனோஜ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வட மாவட்டங்களில் இருந்து கிணறு வெட்டும் பணிக்காக ஒவ்வொரு குழுவினராக வந்து இங்கு தங்கி அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிணறு ஆழப்படுத்தும் பணி உள்ளதா என கேட்டு அதை செய்து வருகின்றனர். அவர்களாகவே சென்று வேலை கேட்கும்போது வேலை கொடுப்பவர்கள் எந்தவித பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேலை வழங்குவதாக கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை முறைப்படுத்தி கிணறு ஆழப்படுத்தும் வேலைக்கான பணிகளை செய்யும்போது முறையான அனுமதி மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக உள்ளதா? என கவனித்து அதன் பின் அனுமதி வழங்கினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×