search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் டப்பா"

    • தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.
    • நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே சேரன் மாநகரில் குமுதம் நகர் உள்ளது.

    இந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது. அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையைவிட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையைவிட்ட நாயால் அதன்பின்னர் வெளியே எடுக்க முடியவில்லை.

    இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் ஒரு இடத்தில் படுத்தபடியே கிடந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என நினைத்து பல முறை அதனை அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

    நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் நேற்று குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.

    தொடர்ந்து அவர்கள், குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.

    10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

    ×