என் மலர்
நீங்கள் தேடியது "பத்திர எழுத்தர்கள்"
- பத்திர எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
பல்லடம் :
பல்லடத்தில் பத்திர எழுத்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லடம் சார் -பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வரும் ஜூன் 12-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து பல்லடம் பத்திர எழுத்தர்கள் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம்,வழக்கறிஞர் சக்திவேல் ஆகியோர் கூறியதாவது:- பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது. லஞ்சம் பெறுவதற்காக, பல்வேறு காரணங்களை கூறி பத்திரப்பதிவுகளை தாமதப்படுத்து கின்றனர்.மேலும் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. கொடுக்க மறுப்பவர்களுக்கு உரிய நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பதும், பொருத்தம் இல்லாத காரணங்களை கூறி நிராகரிப்பதும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நியாயம் கேட்டால், பத்திர எழுத்தர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையாக பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும். லஞ்சம், முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பத்திரப்பதிவு அலுவலர்கள் கூறியதாவது :- முறையாக ஆவணங்கள் வைத்தால் கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்து தரப்படுகிறது. கோவில் நிலம், மூலப் பத்திரம் இல்லாமல் இருப்பது. பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது போன்ற தவறுகள் உள்ள ஆவணங்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுகிறது. அதுவும் ஒரு சிலர் மட்டும் அதுபோன்ற பத்திரங்களை தாக்கல் செய்கின்றனர். தவறு உள்ள பத்திரங்களை பதிவு செய்தால், எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தவறு இல்லாமல் பத்திரங்கள் வரும் பட்சத்தில் பத்திரப்பதிவு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.