என் மலர்
நீங்கள் தேடியது "தாய்க்கு தாஜ்மஹால்"
- தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார்.
- இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர் சென்னையில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அப்துல் காதர் இறந்து விட்டார்.
இதையடுத்து ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்ததோடு இல்லாமல் குழந்தைகள் அனைவரையும் நல்லப்படியாக படிக்க வைத்தார். அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்தினார்.
அவரது ஒரே மகனான அம்ருதீன் ஷேக் தாவூத் பட்டப்படிப்பு முடித்து கொண்டு சென்னையில் தொழிலபதிராக உள்ளார். அவர் உயர்ந்த நிலையை அடைய ஜெய்லானி பீவி செய்த தியாகம் ஏராளம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை அவர் வளர்க்கபட்டபாட்டை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
இதனால் ஜெய்லானி பீவியின் மீது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத் மற்றும் மகள்கள் அனைவரும் மிகவும் பாசமாக இருந்தனர். மேலும் அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது தாயின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். தாயின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. அப்போது இறந்த தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு நினைவுச்சின்னத்தை சொந்த ஊரான அம்மையப்பன் கிராமத்திலேயே தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்தார்.
தொடர்ந்து நினைவு இல்லம் கட்டுமான பணிகள் தொடங்கி வேகமெடுத்தன. ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய பணி முடிவடைந்தது. ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் தயாரானது. நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்று பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம்மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது 10 மாணவ- மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் 1000 பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் இவ்வுலகில் காலம் காலமாக பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நினைவு இல்லத்தை ஏராளமானோர் பார்த்து செல்லும் போது இன்னும் தன்னுடன் தாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அம்ருதீன் ஷேக் தாவூத் கண்ணீர் மல்க தெரிவித்தார்.