search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு காவல் துறை"

    • கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.
    • தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50-வது பொன்விழா ஆண்டினை தமிழ்நாடு காவல் துறை கொண்டாடி வருகிறது.

    அந்த வகையில் மகளிர் காவலர்கள் மட்டும் பங்கு பெறும் சென்னை பழவேற்காடு கோடியக்கரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவினை பாய் மரப்படகு மூலம் கடக்கும் கடல் பயணம் இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த கடல் பயணத்திற்கு 25 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படும் இதன் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் இன்று தொடங்கியது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி கொடி அசைத்து பாய்மரப் படகு பயணத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அது தொடர்பான நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பாய்மர படகு பயண சாகச நிகழ்ச்சியை கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை பெண் காவலர்கள் மேற்கொள்வதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும்.

    இந்த பயணத்தை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்து 542 பெண்கள் பணியில் உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறை உயர் பொறுப்பில் பணி அமர்த்தப்பட்டனர்.

    பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

    மகளிர் காவலர்கள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 9 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    மகளிர் நலன் கருதி 'ரோல்கால்' என்கிற வருகையை காலை 7 மணியில் இருந்து 8 ஆக மாற்றி அறிவித்தார். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை கட்டப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். மகளிர் காவலர்களின் குழந்தைகளின் நலன் கருதி காப்பகம் அமைக்கப்படும், கலைஞர் காவல் பணி விருது, கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும், பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணி மாறுதல் வழங்கப்படும், துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இவை அனைத்தும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×