search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன பண மோசடி"

    • ஏற்றுமதி வர்த்தகம் போலவே வியாபாரிகள் மற்றும் பிரபல வியாபார நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்கின்றனர்.
    • புதிய ஆர்டர் வழங்குவது போல் ஆசைவார்த்தை பேசி இத்தகைய வியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

     திருப்பூர்:

    திருப்பூரில் பிராண்டட் தொழில் நிறுவனங்கள் தவிர மற்ற ஆடை உற்பத்தியாளர்கள், வியாபார நிறுவனம் மூலம் ஆடைகளை விற்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகம் போலவே வியாபாரிகள் மற்றும் பிரபல வியாபார நிறுவனங்களிடம் ஆர்டர் பெற்று ஆடை உற்பத்தி செய்கின்றனர்.எவ்வித முன்பணமும் இல்லாமல் ஆடைகளை தயாரித்து பணத்தை பெற்று சரக்கு அனுப்புவது வழக்கமாக இருந்தது. சில வியாபாரிகள் சுழற்சி முறையில் சரக்கை பெற்று பணத்தை கொடுத்து வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    நூல் விலையால் முடங்கிய உள்நாட்டு விற்பனை பனியன் தொழில் மீண்டும் எழும் போது வடமாநில போலி வியாபாரிகள் குறி வைத்து தாக்குவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.புதிய ஆர்டர் வழங்குவது போல் ஆசைவார்த்தை பேசி இத்தகைய வியாபாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

    உற்பத்தியாளர்களை கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன. இதுவரை திருப்பூருடன் தொடர்பில் இல்லாதவர்கள் புதிய வியாபாரிகளாக அறிமுகமாகினர். தொடக்கத்தில் நாணயம் மிக்கவர்களாக காட்டிக்கொண்டவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பனியன் சரக்கை பெற்றதும் தப்பிவிடுகின்றனர்.

    சமீபத்தில் 59 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் பனியன்களை வாங்கி விட்டு பணத்தை தராமல் காலம் கடத்தினர். தொடர்ந்து வற்புறுத்தல் காரணமாக அந்நிறுவனத்தினர் காசோலை கொடுத்தனர்.அவை அனைத்தும் வங்கிக்கு சென்று திரும்பியது தெரிந்தது. அவ்வகையில் மொத்தம் 13 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது தெரிந்தது.

    பாதிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வர்த்தக நிறுவனத்தின் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில், எஸ்.ஐ., தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர். முதல்கட்டமாக சென்னை அண்ணா நகரில் உள்ள வர்த்தக நிறுவனத்துக்கு சென்றனர்.அங்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. திருப்பூரில் உள்ள உற்பத்தி யாளர்களிடம் பெற்ற ஆடைகளை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மார்க்கெட்டில் சப்ளை செய்தது தெரிந்தது. அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

    சென்னை நிறுவனத்திடம் இருந்து பணம் கொடுத்து ஆடைகளை பெற்றதற்கான பில்களை அனைவரும் வைத்திருந்தனர். மோசடி தொடர்பாக 8கடைக்காரர்களை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் வழங்கி வந்தனர். இதுவரை யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    மோசடியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை சேர்ந்த 3 பேரும் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடம் 4 மாதங்களுக்கு ஆடைகளை வாங்கும் போது உடனுக்குடன் பணத்தை கொடுத்து வாங்கி, ஆரம்பத்தில் நம்ப வைத்தனர். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களை கூறியும் உள்ளனர்.இதனை நம்பிய உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் அவர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் திருப்பூரை சேர்ந்த ஏராளமான உற்பத்தியாளர்களிடம் ஆடைகளை வாங்கி கொண்டு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. விசாரணையில் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்த 3பேரின் பெயரும் பொய்யானது என்பதும் அவர்களின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. நன்கு திட்டமிட்டு நூதனமாக ஏமாற்றியுள்ளனர்.

    மோசடி தொடர்பாக அன்றாடம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மோசடி ஆசாமிகள் பெரிய நிறுவனத்திடமும் கைவரிசை காட்டியுள்ளது. சில நிறுவனங்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை.

    ஏமாற்றியவர்கள் குறித்து தொடர் விசாரணையில் 3 பேரில் ஒருவர் மீது கடந்த 2019ம் ஆண்டு மும்பையில் இதுபோன்ற மோசடி வழக்கு பதிவாகி உள்ளது. அங்கு வேறு ஒரு பெயர் உள்ளது. இவர்கள் இதையே வேலையாக கொண்டு பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது. இவர்கள் பிடிபடும் பட்சத்தில் தான் அவர்களின் உண்மையான விபரம் தெரியவரும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    ×