search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட கழிவு"

    • மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி, சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
    • மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சேர்ந்தே இருப்பது... குப்பை மேடும் கோபுரங்களும்...

    சேராது இருப்பது... சுத்தமும், சுகாதாரமும்...

    கண்டு கொள்வது... கடற்கரையும் காதலர்களும்... கண்டுகொள்ளாதது... கண்ட கண்ட இடங்களில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதை.

    இதுதான் சென்னையின் நிலை. அழகான நகரம் இப்படி அலங்கோலப்படுத்தப்படுவது தடுக்கப்படுமா? இந்த நகரத்தின் அழகு மீட்டெடுக்கப்படுமா? என்ற ஏக்கம் சென்னை வாசிகளிடம் நெடு நாளாகவே இருக்கிறது. ஆனால் அழகை மீட்பதற்கு பதில் நாளுக்கு நாள் சிதைத்து தான் வருகிறார்கள்.

    நகரம் விரிவடைந்தது. கூடவே நிழல் போல் நரக சூழலும் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். விரிவாக்கத்தின் அடையாள ரேகை போல் குரோம்பேட்டையில் இருந்து துரைப்பாக்கம் வரை 200 அடி ரேடியல் ரோடு உருவாக்கப்பட்டது.

    இந்தச் சாலை அமைந்த பிறகு அந்தப் பகுதியில் வளர்ச்சி மின்னல் வேகத்தில் உயர்ந்தது.

    அதே நேரம் மிகப்பெரிய நீர் நிலையாக இருந்த ஏரி சாலை அமைக்கப்படுவதற்காக பாதி அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டது.

    மிச்சமிருந்த ஏரி குப்பை கொட்டும் வளாகம் போல் மாறிவிட்டது.

    குப்பைகள் கட்டிட கழிவுகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டு இப்போது அந்த ஏரி குப்பை மலையாக மாறி இருக்கிறது. அங்கிருந்து துரைப்பாக்கம் வழியாக பள்ளிக்கரணை சென்றால் மிகப் பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது. லட்சக்கணக்கான டன் குப்பை குவிந்து சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை போல் உயர்ந்து காட்சியளிக்கிறது.

    இந்த குப்பை கிடங்குகள் காரணமாக சதுப்பு நில பகுதி முற்றிலும் பாழ்பட்டு கிடக்கிறது. இந்தப் பகுதி ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்த பகுதி மழை பெய்தால் தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசும்... வெயில் அடித் தால் நெருப்பு பற்றிக் கொள்ளும். அதில் இருந்து வெளியேறும் புகை வழியாக துர்நாற்றம் வரும். இப்படி ஆண்டு முழுவதும் இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.

    12 ஏக்கர் பரப்பளவில் நான் கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் போல் நீர் நிரம்பி காணப்பட்டது செம்மஞ்சேரி ஏரி. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும்.

    அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டது. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி கட்டிட இடிபாடுகளை கொட்டி கட்டாந்தரை போல் ஆக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. அதற்கு விதிப்படி தேவையான இடத்தை ஏரியில் இருந்து எடுத்து சுற்றுச் சுவரும் கட்டப்பட்டு உள்ளதாக பசுமை தாயகம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமார் கூறினார். அந்த பகுதி யில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயும் இந்த ஏரியில் கொண்டு விடப்பட்டு உள்ளது. ஏற்கனவே தூர்ந்து போன ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் வரும் போது அந்த கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளை மூழ்கடிக்கும் என்கிறார்கள்.

    தற்போது கெட்டப்படும் கட்டிட கழிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் பிளாட் போட்டு விற்கப்படும் என்கிறார்கள். இப்படித்தான் சோழிங்கநல்லூரில் பல குட்டைகள் காணாமல் போய்விட்டதாக ஆதங்கப்பட்டார் நிர்மல்குமார்.

    தென் சென்னையிலேயே இப்படியென்றால் வட சென்னையை கேட்க வேண்டியதில்லை. ஏற்க னவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கொடுமையை அந்த பகுதி வாசிகள் அனுபவித்து வருகிறார்கள்.

    இதேபோல் மிகப்பெரிய நீர் ஆதாரமான ரெட்டேரி ஏரியும் கட்டிட கழிவுகளை கொட்டும் வளாகமாக மாற்றப்பட்டது. பொது மக்கள் போராட்டத்தால் ஓரளவு குறைந்தாலும் ஏரியை சுற்றி ஏராளமான கட்டிட கழிவுகள் லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் கட்டிட கழிவுகளை இந்த பகுதியில் கொட்டுகிறார்கள். அதை பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்துவதில்லை.

    ரெட்டேரி ஏரியின் தென் கரையோரம் பெரம்பூர்-ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உர உற்பத்தி மையத்தை ஒட்டியுள்ள 3 இடங்களில் கட்டிட இடிபாடுகள் மட்டு மில்லாமல் ஏராளமான கழிவுப் பொருட்களும் இந்த பகுதியில் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது.

    இதனை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    புதிய நீர் நிலைகளை உருவாக்குவது கடினம். இருக்கும் நீர் நிலைகளை யாவது பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாமே.

    • மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
    • போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, சாலை ஓரங்களில் போஸ்டர் ஒட்ட தடை, கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இது நீடிப்பதால் சென்னை நகரின் அழகு சீர்கெட்டு வருகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபராதம், வழக்கு, எச்சரிக்கை என அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளது.

    இதைத் தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.

    இவற்றின் மூலம் மாதம் ரூ.63 லட்சம் வசூலிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த மே 12-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை குப்பைகொட்டியோரிடம் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம், கட்டிட கழிவு கொட்டியோரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 165, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது 674 வழக்கு மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது தொடர்ந்து நீடிக்கிறது. மாதத்திற்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது. போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனாலும் பொதுமக்களிடம் பெரிய அளில் மாற்றம் இல்லை. எனவே பள்ளி, கல்லூரி அளவிலும், பொதுமக்களிடமும் குப்பைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

    ×