search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதார் சிங் கண்டா"

    • திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

    சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில் ஆயுதங்கள் ஏந்தி சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித் பால் சிங்கை போலீசார் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் 36 நாட்கள் தப்புவதற்கு உதவியாக இருந்தவர் அவதார்சிங் கண்டா.

    அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியான இவர் இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய காலிஸ் தான் விடுதலை படையின் தலைவராக இருந்து வந்தார். இங்கிலாந்தில் வசித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இந்திய தேசிய கொடியை கீழே இறக்கி அவமரியாதை செய்ததோடு காலிஸ்தான் கொடியையும் ஏற்ற முயன்றனர்.

    இந்த போராட்டத்தில் அவதார் சிங் கண்டா முக்கிய பங்காற்றினார். இவர் சமீப காலமாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதார் சிங் கண்டா நேற்று இறந்தார்.

    திடீரென அவர் இறந்தது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அதனால் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அவதார் சிங் கண்டா சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இறந்த அவதார்சிங் கண்டா வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சீக்கிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து வெடிகுண்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்து வந்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களுள் மிக முக்கியமானதாக இவர் விளங்கி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு கல்வி விசாவில் இங்கிலாந்து சென்ற அவர் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.

    ×