search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவாஸ்கனி எம்பி"

    • நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.
    • அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் நவாஸ்கனி எம்.பி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சரியாக 3 மணிக்கு விழா தொடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் 10 நிமிடத்திற்கு முன்பாக வந்ததால் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் சரியாக 3 மணிக்கு விழா மேடைக்கு நவாஸ்கனி எம்.பி. வந்தார். அப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை கண்ட அவர், நான் வருவதற்கு முன்பாகவே ஏன் நிகழ்ச்சியை துவங்கினீர்கள் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கேட்டார்.

    இதனை கண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி.யை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவாஸ்கனி எம்.பி. நான் வருவதற்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்குவதாக இருந்தால், உங்களை வைத்தே நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாமே? என்னை எதற்காக அழைக்க வேண்டும்? என கடுமையாக சாடினார்.

    இதனால் அமைச்சருக்கும், எம்.பி.க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் மேடையில் வைத்தே வாக்குவாதம் செய்தனர். ஒரு பக்கம் அமைச்சர், மறு பக்கம் எம்.பி., நடப்பதோ அரசு நிகழ்ச்சி என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார்.

    அப்போது அருகிலிருந்த நவாஸ் கனி எம்.பி.யின் ஆதரவாளர்கள் கலெக்டர் விஷ்ணு சந்திரனை தள்ளி விட்டனர். இதில் கலெக்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை அவரது உதவியாளர்கள் தூக்கினர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.இறுதியில் நிகழ்ச்சியை புறக்கணித்த நவாஸ் கனி வெளிநடப்பு செய்தார்.

    ஏற்கனவே மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் அரசு நிகழ்ச்சியில் நேருக்கு நேராக அமைச்சரும், எம்.பி.யும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

    இந்நிலையில் அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார், கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கலெக்டரை தள்ளிவிட்டதாக நவாஸ்கனி எம்.பி.யின் உதவியாளரான சாயல்குடியை சேர்ந்த விஜயராமு என்பவர் மீது போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது 506 (ii), 294 (பி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் விஜயராமுவை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரசு விழாவில் கலெக்டர் தள்ளி விடப்பட்ட விவகாரத்தில் எம்.பி.யின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×