என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்"
- இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
- இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் 37 வயதான ஷிகர் தவான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் எனது பெயர் இடம் பெறாதது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு மனதை தேற்றிக் கொண்டேன். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பிடித்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன்.
இந்திய அணிக்கு நான் திரும்புவதற்கு தயாராக இருப்பேன். அதனால் தான் உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்திருக்க தொடர்ந்து பயிற்சி மேற்கொள்கிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கு நான் தயார். கிரிக்கெட்டை நான் இன்னும் அனுபவித்து விளையாடுகிறேன். இதே போல் பயிற்சியிலும் உற்சாகமாக ஈடுபடுகிறேன். இவை எல்லாம் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தேர்வாளர்களிடம் பேசவில்லை.
அடுத்த கட்டமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இதே போல் சயத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்.
இவ்வாறு தவான் கூறினார்.
'உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த சூர்யகுமார் யாதவை இறக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நம்மிடம் உள்ளது. அத்துடன் பரிச்சயமான மைதானம் மற்றும் சாதகமான உள்ளூர் சூழலில் நடப்பதால் இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது' என்றும் தவான் குறிப்பிட்டார்.
- ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார்.
- துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
மும்பை:
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். மும்பையில் நேற்று நடந்த இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசை நீண்டகாலமாகவே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. யுவராஜ்சிங்குக்கு பிறகு அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார். கணிசமான ரன்களும் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 4-5 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. அந்த வரிசையில் ஆடிய நிறைய வீரர்கள் காயமடைந்து இருப்பதும், பிறகு அந்த இடத்திற்கு புதிய வீரர்கள் வந்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது. இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.
கடந்த 4-5 ஆண்டுகளாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவது நமது நீண்டகால திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரர்கள் காயமடையும் போதோ அல்லது அணித் தேர்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் போதோ புதிய வீரர்களை கொண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதனால் தான் 4-வது பேட்டிங் வரிசையை பற்றி பேச வேண்டி இருக்கிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட இந்த வரிசையில் நிறைய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்திருக்கிறார்கள்.
இந்திய அணியில் எனக்கு உள்பட யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது. இதே போல் யாருக்கும் இடம் உறுதி என்று கூறிவிட முடியாது. தாங்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகிறோம் என்பது சில வீரர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் கடந்த 4 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெரிய அளவில் காயமடைந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள். நானும் ஒரு முறை காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறேன். காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்புவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டு தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
இன்னும் சில தினங்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய விவாதங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் அணியில் தானாகவே இடம் கிடைத்து விடாது. ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி இருக்கிறது. நிறைய வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு எது சரியான அணி கலவையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தரமான அணிக்கு எதிராக நமது சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்.
50 ஓவர் உலகக்கோப்பையை நான் வென்றதில்லை. அதை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது கனவாகும். அதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதை வெல்வதை விட மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது. உலகக் கோப்பையை தட்டில் வைத்து தந்து விட மாட்டார்கள். உண்மையிலேயே இதற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை நாங்கள் எல்லோரும் இதற்காகத்தான் போராடி வருகிறோம்.
ஒவ்வொருவரும் களத்திற்கு சென்று வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஏனெனில் நம்மிடம் சிறந்த அணி உள்ளது என்பதை அறிவோம். நமது வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களால் இதை செய்ய முடியும் என்ற உள்ளுணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கிறது.
அணியை வழிநடத்தினாலும் முதலில் நான் ஒரு பேட்டர். அதன் பிறகு தான் கேப்டன். அதனால் அணியில் எனது பங்களிப்பு பேட்டிங்கில் தான் அதிகம் உள்ளது. கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது தான். அதே நேரத்தில் நான் நிறைய ரன்கள் குவித்து அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்துகிறோம். இது உலகக் கோப்பை ஆண்டு. ஒவ்வொரு வீரரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.
இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவரை நான் இரு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். முதிர்ச்சியான வீரர் போல் செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் பேசும் போது, அவர் தனது பேட்டிங்கை நன்கு புரிந்து வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பந்தை எங்கு அடிக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இந்தியாவுக்கு ஆடிய கடந்த சில ஆட்டகளில் அதை நிரூபித்து காட்டி விட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது.
- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும்.
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவது இல்லை. ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன.
இந்த வருடம் 2023 ஆசிய மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 50 ஓவர் உலக கோப்பையில் 1992 முதல் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததால் இம்முறை உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க பாகிஸ்தான் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த வருடம் ஆசிய மற்றும் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து கௌரவத்தையும் மானத்தையும் காப்பாற்றுமாறு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது போன்ற சூழ்நிலையில் எப்போதுமே நீங்கள் உலக கோப்பையை வெல்கிறார்களோ இல்லையோ பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக் கூடாது என்பதை அனைவரும் விருப்பமாக இருக்கும். ஆனாலும் நீங்கள் உலக கோப்பையை வெல்வதே முக்கியமாகும். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அதை நாம் செய்வோம் என்று நம்புகிறேன்.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது நிச்சயமாக சுவாரசியமும் அதிகப்படியான அழுத்தமும் இருக்கும். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிவடையும் போது கண்டிப்பாக ஒரு திருப்திகரமான உணர்வு எங்களுக்கு இருக்கும். ஏனெனில் நான் விளையாடிய போது பெரும்பாலும் நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளோம். அந்த போட்டியில் எப்போதுமே எதிர்பார்ப்புகள் உச்சமாக இருக்கும். அத்துடன் பாகிஸ்தான் அணியுடனும் நாங்கள் சிலவற்றை பேசுவோம்.
என்று அவர் கூறினார்.
இருப்பினும் இரு அணிகளுக்கும் சமமாக பேசாத காரணத்தால் அவர் பேசிய அந்த வீடியோவை முதலில் டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் பின்னர் டெலிட் செய்து விட்டது.
- 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை.
- உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலக கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை:
உலக கோப்பை கிரிக்கெட்போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை வெற்றியை நான் அருகில் இருந்து பார்த்ததில்லை. 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை. பார்க்கவே அழகான உலக கோப்பைக்கு பின்னால் நிறைய மறக்க முடியாத நினைவுகளும், வரலாறும் இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை கையில் ஏந்த முடியும் என்று நம்புகிறேன்.
சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஒவ்வொரு இடத்திற்கும், மைதானத்திற்கும் செல்லும் போதும் ரசிகர்களின் ஆதரவு பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரியும். அது மட்டுமின்றி அது சாதாரண போட்டி அல்ல. உலக கோப்பை. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
நினைவில் உள்ள ஒவ்வொரு உலக கோப்பை போட்டி குறித்து கேட்கிறீர்கள். 2003-ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்பு வரை உண்மையிலேயே சிறப்பாக ஆடியது. பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் ரன்வேட்டை நடத்தினார்.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007-ம் ஆண்டு உலக கோப்பை நமக்கு நல்லவிதமாக அமையவில்லை. துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறி விட்டோம்.
2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் எல்லோருக்கும் மறக்க முடியாது ஒன்று. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு பந்தையும் வீட்டில் டி.வி.யில் கண்டுகளித்தேன். இந்த உலக கோப்பையில் எனக்கு இரு விதமான உணர்வு பூர்வமான விஷயங்கள் உண்டு. ஒன்று நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். அதனால் உலக கோப்பை போட்டியை பார்க்ககூடாது என்று முடிவு செய்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன். அடுத்ததாக இந்திய அணி கால்இறுதியில் இருந்து அருமையாக விளையாடி மகுடம் சூடியதை என்னால் மறக்க முடியாது.
அதன் பிறகு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் நானும் அணியில் இருந்தேன். இதில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அரைஇறுதி வரை முன்னேறினோம். இறுதி சுற்றை எட்ட எல்லா வகையில் முயற்சித்து பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
இப்போது மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். கடைசி கட்ட தடையை தாண்டி கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் நீங்கள் உலக கோப்பையை வென்று விட முடியாது. போட்டி நடக்கும் ஒன்றரை மாதங்களும் சிறப்பாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புது நாள். ஒவ்வொரு ஆட்டமும் புது தொடக்கம். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்று கிடையாது. ஒருநாள் கிடைக்கும் உத்வேகத்தை அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல முடியாது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது.
- ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்.
இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான உத்தேச 18 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அணி வருகின்ற தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசேனே இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியையும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, இதில் அணியின் புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஆரோன் ஹார்டி, தன்வீர் சங்கா மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Presenting your 18-player squad for the 2023 ODI World Cup, as well as two lead-in series against South Africa and India! ??? pic.twitter.com/h6jVWYJvMy
— Cricket Australia (@CricketAus) August 7, 2023
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார். அதே நேரத்தில், கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக, மிட்செல் மார்ஷ் அணிக்கு கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி:-
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, சீன் அபோட், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க் , ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லிஸ்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் டி20 அணி:-
மாட் ஷார்ட், டிம் டேவிட்ஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜான்சன், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட்.
- சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
- 2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி திவிரம் காட்டி உள்ளது. ஏனெனில் இந்தியா 2013-க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வாங்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். பும்ரா குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுபோக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.
அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
என்று கூறினார்.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
- போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது.
அகமதாபாத்:
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அந்த நகரிலுள்ள ஓட்டல்களின் பெரும்பாலான அறைகள் அந்த தேதிகளில் ஏற்கெனவே நிரம்பிவிட்டன.
இந்நிலையில் போட்டியையொட்டிய தினங்களில் அகமதாபாத்துக்குச் செல்லும் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு விமானக் கட்டணம் (சென்று வருவதற்கு) வழக்கமாக ரூ.10 ஆயிரம் அளவுக்கு இருக்கும். ஆனால், அக்டோபரில் அகமதாபாத்துக்குச் செல்ல விமான கட்டணமாக ரூ.45,425 செலுத்த வேண்டியுள்ளது. இது 3 மடங்குக்கும் அதிகமாகும்.
அக்டோபர் 14 முதல் 16 வரை இந்த டிக்கெட் கட்டண உயர்வு உள்ளது. வழக்கமாக சில மாதங்களுக்கு முன்னரே விமான டிக்கெட் பதிவு செய்தால் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள தேதியையொட்டி அகமதாபாத் செல்ல இப்போது டிக்கெட் பதிவு செய்தாலும் கட்டணம் ரூ.45 ஆயிரம் என்றே உள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து மும்பை, டெல்லி நகரங்களுக்கும் டிக்கெட் கட்டணங்கள் அன்றைய தினங்களில் சுமார் 3 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளன.
- இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது.
- இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தான் அணிக்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பவர் 19-ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
அக்டோபர் 11 ஆம் தேதி இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாக், அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பலவீனமானதாக இருக்கிறது. இது பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது.
முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி இருவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஜஸ்ப்ரித் பும்ரா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், அவர் தகுதியற்றவராக இருக்கிறார். இன்னும், தனது உடல் தகுதிக்கான பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறார். ஆகையால், அவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைவு தான்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், எங்களிடம் ஆபத்தான் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இப்போதைக்கு பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு இருப்பதாக நான் கூறுவேன்.
இந்தியா குறைவான ஸ்கோர் எடுத்தால், அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியாவை இதுவரையில் பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட வீழ்த்தியதில்லை. இதுவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 7 போட்டியிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.
- உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது.
- கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.
மும்பை:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகிறது.
உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இதைதொடர்ந்து சென்னை, பெங்களூரில் தாங்கள் விளையாடும் இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் நிராகரித்து இருந்தன.
இதனால் உலககோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியாகுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மும்பையில் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந்தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது.
அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறுகிறது. ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அதை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மற்றொரு அரைஇறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.
உலக கோப்பை போட்டிக்கான 48 போட்டிகளும் 10 நகரங்களில் நடக்கிறது. அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், தர்மசாலா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது.
- சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம்.
- வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.
மும்பை:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை மும்பையில் நாளை நடக்கும் ஐ.சி.சி. நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டியில் எந்த மாதிரியான இந்திய அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகுடம் சூடுவதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் சரியான கலவையில் அனுபவமும், இளமையும் கொண்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும். விரும்பிய வீரர்களை எடுப்பதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. முழுமையான, வலுமிக்க அணியாக களம் இறக்கும் போது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் இந்தியாவும் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கும்.
இந்திய அணியின் டாப்-6 வரிசை பேட்ஸ்மேன்களில் குறைந்தது இருவர் இடக்கை ஆட்டக்காரராக இருக்க வேண்டும். அப்போது தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அணியின் கலவையும் கச்சிதமாக அமையும். கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வரும் இளம் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார்.
ஆனாலும் இந்தியாவில் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களால் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் நிரப்ப முடியும். இன்னும் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கலக்கிய சாய் சுதர்சன், நேஹல் வதோரா ஆகியோரையும் சொல்லலாம். இப்போது முன்னணி வீரர்கள் சிலர் காயத்தில் உள்ளனர். அதனால் உலகக் கோப்பை போட்டிக்கான பட்டியலில் 15-20 வீரர்களை நாம் வைத்திருக்க வேண்டும். காயத்தில் சிக்கிய வீரர்கள் திரும்ப முடியாமல் போனால் மாற்று வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர். உண்மையிலேயே தன்னுடைய முழு திறமையையும் அவர் இன்னும் உணரவில்லை. சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் போது ரன்வேட்டையில் எந்த சாதனையும் முறியடிக்காமல் முடித்தால் நிச்சயம் ஏமாற்றம் அடைவேன். நான் பயிற்சியாளராக இருந்தபோது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம் பெறமாட்டார்.
அது எனக்கு வேதனையாக இருக்கும். அதன் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இப்போது தொடர்ந்து டெஸ்டிலும் விளையாடுகிறார். அந்த சமயத்தில் ரோகித் சர்மாவை எப்படி தவற விட்டதாக உணர்ந்தேனோ அதே போல் சஞ்சு சாம்சனையும் நினைக்கிறேன்.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் உடல்தகுதியை வைத்து பார்த்தால் அவரால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் வெள்ளைநிறப்பந்துகளில் விளையாடப்படும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பு, உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவர் வசம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், தற்போதைய உலகக் கோப்பை போட்டியில், அணியை ரோகித் சர்மா வழிநடத்த வேண்டும். அதில் எந்த கேள்வியும் இல்லை.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
- சென்னை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கான இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.
- சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறி மாற்றுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியது.
துபாய்:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. 10 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அனுப்பி வைத்து இருந்தது.
பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகளும் வெளியாகி இருந்தது. இதில் சென்னை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கான இடங்களை மாற்றுமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.
அந்த அணி ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 20-ந் தேதி பெங்களூரிலும், ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி சென்னையிலும் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. பெங்களூர் மைதானத்தில் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும் என்பதாலும், சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறி மாற்றுமாறு வலியுறுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யும், பி.சி.சி.யும் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் ஒன்றாக விவாதித்து இந்த முடிவை எடுத்தனர்.
2 இடங்களை மாற்ற இயலாது என்ற பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை போட்டி அக்டோபர் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறலாம். தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ந் தேதி சென்னையில் சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்