search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் இருக்கை"

    • தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3.44 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
    • மேலும் 1.50 கோடி ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம். பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1.50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தியாக 'தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ்மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன். வளமையைப் பாரெங்கும் தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத பறைச்சாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

    கடல்கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தி 12.12.24 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப. மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டில் உலகின் தலைவிதியை மாற்றும்.
    • எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாஷிங்டனில், இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ரொனால்ட் ரீகன் மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    அமெரிக்காவுக்கான எனது அரசு முறை பயணத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பல வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முதல் விமானப் போக்குவரத்து, உற்பத்திக்கான பயன்பாட்டு பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், விண்வெளித்துறை உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது மிகவும் நம்பகமான பங்காளிகளாக முன்னேறி வருகின்றன.

    இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டில் உலகின் தலைவிதியை மாற்றும். இரு நாட்டு உறவு என்பது வசதிக்கான விஷயம் அல்ல. உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான ஒரு நம்பிக்கை ஆகும்.

    இந்த கூட்டாண்மை ஒரு சிறந்த உலகத்திற்கான பகிரப்பட்ட கருத்து ஆகும். இந்தியாவில் முதலீடு செய்ய அமெரிக்க வாழ் இந்திய தொழில் அதிபர்கள், வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    இன்று இந்தியா 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்து சாதனை படைத்துள்ளது. உலகின் பிரதான முதலீட்டு இடமாக இந்தியா உள்ளது.

    நீங்கள் வேகமாக வளரும் நன்மையை பெற வேண்டிய நேரம் இதுவாகும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம்.

    உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ்மொழி. அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ் இருக்கை நிறுவப்படும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் மூலம் இந்தியா, 100 மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

    பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்படும். எச்1பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×