search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம் சட்ட வாரியம்"

    • பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாடு முழுவதும் வாக்கு சாவடிகளில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளிடம் அவர் உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி, 'நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக பொது சிவில் சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

    கோவா, குஜராத், உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று இரவு அவசரமாக ஆலோசனை நடத்தியது.

    பொதுசிவில் சட்டம் தொடர்பான சட்ட அம்சங்களை அவர்கள் விவாதித்தனர். 3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வக்கீல்கள், நிபுணர்களின் கருத்துக்களை கருத்தில் கொண்டு சட்ட ஆணையத்திடம் வரைவு முன்மொழிவை சமர்பிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-

    அனைவருக்கும் அவர்களின் மதம் மற்றும் மரபு சட்டங்களை பின்பற்றுவதற்கான பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் அரசியல் அமைப்பு வழங்குகிறது.

    ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுசிவில் சட்டம் குறித்த பிரதமரின் கருத்துக்கள் அரசியலமைப்பின் உணர்வோடு பொருந்தவில்லை. அரசியலமைப்புக்கு இது எதிரானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜாமியத் உலமா அமைப்பின் பிரதிநிதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

    பொதுசிவில் சட்டம் அவசியம் என்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே பொது சிவில் சட்டத்தை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    ×