என் மலர்
நீங்கள் தேடியது "சேலம் பெரியார் பல்கலைக்கழகம்"
- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
- பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.
கருப்பூர்:
சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.
இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது.
- பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
கல்வியியல் துறையின் பொறுப்புத் தலைவராக இருந்த முனைவர் பெரியசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், துறையின் மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்கு தான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் பேராசிரியர் தகுதியை எட்டாதவர். அவர் கடந்த ஆண்டு தான் கல்வியியல் துறையில் பணியில் சேர்க்கப்பட்டார். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்வியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் அயல்பணி முறையில் வெங்கடேஸ்வரன் சேர்க்கப்பட்டார். விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராகத் தான் கருதப்பட வேண்டும். ஆனால், அந்த தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வெங்கடேஸ்வரன் அவரை எடப்பாடி கல்லூரியில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?
பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தகுதியும், அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன் துணைவேந்தருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி ஆகும். அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளையுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு வளர்க்கும் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதிலும் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்காமல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டப்படி பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த தங்கவேல் மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.
எனினும், பரிந்துரையை செயல்படுத்தாமல் துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு , மனுதாரர் 34 வருட அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எனவே பணியிடை நீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், இது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் முடிவெடுக்க வேண்டும் என இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி குறுக்கிட்டு முந்தைய பதிவாளர் தங்கவேலை பணியிட நீக்கம் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.
பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக குற்ற வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டார். முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை எனவும் அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
- பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
- பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
+2
- தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர்.
- பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு நடைபெற்ற அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.
இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.
அதன்படி தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சுந்தர் தயாள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருகிறார். கவர்னர் பல்கலைக்கழகத்திற்கு வரும் நேரத்தில் போலீசார் ஒருபுறம் சோதனை நடத்தி வருவதும், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருவதாலும் பல்கலைக் கழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
கவர்னர் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
- கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.
விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் அகிலா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். முனைவர் பட்டம் ஆய்வை நிறைவு செய்த 153 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வில் நிறைஞர் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
இதில் பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 31 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
மேலும் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42 ஆயிரத்து 915 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 978 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் படித்த 631 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் தங்கவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
விழாவில் பங்கேற்ற மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எந்த எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காததால் தானும் புறக்கணித்ததாக கூறினார்.
- தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்.
- பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது.
இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
முன்னதாக இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சேலம் மாநகர போலீசார், இந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டக்கூடாது. அவ்வாறு கருப்பு கொடி காட்டும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
ஆனாலும் அவர்கள் கருப்பு கொடியை காட்டியே தீருவோம் என கூறினார்கள். அவருக்கு கருப்பு கொடி காட்டுவது எங்களின் உரிமை என்றனர். இதனால் போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று காலை திட்டமிட்டப்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இதையடுத்து இன்று காலை சுமார் 11 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விழா நடக்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கூடாது என கூறி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கட்சி கொடிகள், கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் னர். அவர்கள் கவர்னர் வரும் சாலையில் வந்து விடக்கூடாது என்பதற்காக இரும்பு பேரிகார்டு அமைத்து அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக கவர்னரின் கார் வந்தது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் கார் சென்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாநகர துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.