search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவுகள்"

    • என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின.
    • சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

    வரலாறு...

    இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதைவிட எதிர்கால தேடல்களே மேலோங்கி இருக்கிறது. பலருக்கு இன்னும் தனது குடும்ப பரம்பரை பற்றியே தெரியாமல் இருப்பதுதான் வேதனை. அன்றைய காலத்தில், 7 தலைமுறைகளை அறிந்து வைத்திருந்தார்கள். தந்தை - தாய், பாட்டன் - பாட்டி, பூட்டன் - பூட்டி, ஓட்டன் - ஓட்டி, சேயோன் - சேயோள், பரன்-பரை என்று அதை வரிசைப்படுத்தினார்கள்.

    ஆனால், இன்றைக்கு 3-வது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி கூட யாருக்கும் தெரியவில்லை. கடந்த காலங்களில் சொந்த ஊரிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஏராளம். பெரிய வீட்டில் மரங்கள் சூழ்ந்திருக்க, தாத்தா - பாட்டி, பெரியப்பா - பெரியம்மா, சித்தப்பா - சித்தி, அத்தை - மாமா, அவர்களின் பிள்ளைகள என ஆரவாரத்துக்கும், ஆசுவாசத்துக்கும் பஞ்சம் இருக்காது.

    என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே ஒரு கூட்டு கிளிகளாக இருந்த கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின. "நாம் தான் சொந்த ஊரில் கஷ்டப்படுகிறோம். நம் பிள்ளையாவது நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கட்டுமே" என்று, முதலில் பெற்றோர் விருப்பத்துடன் படிப்புக்காக வெளியூருக்கு செல்லும் குழந்தைகள், பிறகு படித்து முடித்து அங்கேயே வேலையைத் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். திருமணமான பிறகும், வெளியூரிலேயே குடும்பத்துடன் தங்கிவிடுகிறார்கள். இப்படித்தான் கூட்டு குடும்பங்கள் எல்லாம் எங்கெங்கோ தனிக்குடும்பங்களாக பிரிந்து சிதறி கிடக்கின்றன. 

    சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடினமான பணியில் இருக்கும் சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் போய்விடுகிறது. பெற்ற பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் வெளியூரில் இருக்க, சொந்த ஊரில் தனி மரமாய் ஏக்கத்துடன் காத்திருந்து முதுமையை கழிக்கும் பெற்றோர் ஏராளம்.

    தாய்-தந்தையுடன் வெளியூரில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தனது பூர்வீகத்தை பற்றியும், சொந்த பந்தங்களை பற்றியும் தெரியாமலேயே போய்விடுகிறது. தாயும், தந்தையும் வேலை.. வேலை.. என்று பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், பிறந்த மண்ணின் மகத்துவத்தை பிள்ளைகளிடம் எடுத்துச்சொல்வதற்கு கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.

    இப்போது கோடை காலம். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை காலம். இந்த நேரத்திலாவது, நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை சொந்த கிராமத்தில் தாத்தா - பாட்டி வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். நமக்குத்தான் விடுமுறை கிடைக்கவில்லை. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளாவது சொந்த ஊரில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகை செய்யலாம். அங்கு பெற்ற பிள்ளைகளுக்காக ஏங்கித் தவிக்கும் முதியவயதுடைய பெற்றோர், பேரப்பிள்ளைகளை பார்த்தாவது சற்று நெஞ்சம் குளிர்வார்கள். குழந்தைகளுக்கும் உண்மையான அன்பு, பாசம் கிடைக்கும்.

    காகிதத்தால் செய்யப்பட்ட பட்டம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், அதன்பிடி நூலின் அடிப்பகுதியில்தான் இருக்கிறது. அதுபோலத்தான், நாம் இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழ்ந்து வந்தாலும், நமக்கான பிணைப்பு நாம் பிறந்த சொந்த ஊருடன்தான் இருக்கிறது. எனவே, சொந்த மண்ணையும், மண்ணில் வசிக்கும் உறவுகளையும் பேணிக் காப்போம்.

    • நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.

    அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.

    18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

    இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

    நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

    ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.

    இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.

    55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.

    ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.

    டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.

    "3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    ×