என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருக்குர்ஆன்"
- அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
- மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.
ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
"இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.
மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.
அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.
இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.
திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.
இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.
"எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".
பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:
"நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).
மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).
பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.
"இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).
'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)
'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.
- கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
- பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.
மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் கொடூரமான நோய்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை.
பிறர் நன்றாக வாழ்ந்தால், மகிழ்ச்சியாக இருந்தால், வசதி வாய்ப்புகளோடு சுகமான வாழ்க்கையை அனுபவித்தால் அதை ஏற்றுக்கொண்டு வாழ்த்தும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.
ஒருவரது நிறைவான வாழ்க்கைக்கு காரணம் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் என்பதை மனித மனம் ஏற்க மறுக்கிறது. அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெறும் அளவுக்கு அவரது இறையச்சம், வணக்க வழிபாடுகள், நற்சிந்தனை, நற்செயல்கள் அமைந்துள்ளதை காணத் தவறிவிடுகிறார்கள்.
நாமும் இறையச்சத்துடன் வாழ்ந்து, நற்செயல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற வேண்டும் என்ற விருப்பத்தை வளர்க்க முன்வருவதில்லை. அதற்கு பதிலாக அந்த மனிதர் மேல் பொறாமை கொள்கிறார்கள். `அவருக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பான வாழ்வு கிடைத்துள்ளது' என்று வெறுப்பை வளர்க்கிறார்கள். வெறுப்பு பகை உணர்வை உருவாக்குகிறது.
உலக வாழ்க்கையில் இன்று மக்களிடம் காணப்படும் போட்டி, பொறாமைகள் காரணமாகத்தான் பல்வேறு மோதல்களும், பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொண்டால் அது அவனையே அழிக்கிறது. பொறாமை குணம் அவனது மனதில் தங்கி கோபத்தையும், குரோதத்தையும் வளர்க்கிறது. இது அவனது உடல் நலத்துக்கே தீங்காக முடிகிறது.
பொறாமை குணம் இருக்கும் இடத்தில் அமைதியும், சாந்தியும் இருப்பதில்லை. அது மனிதனை தீய வழியில் தள்ளிவிடுகிறது. இதனால் அவன் பாவங்களை செய்யவும், தவறான வழியில் நடக்கவும் முன்வருகின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பொறாமை கொள்வது நன்மைகள் அனைத்தையும் தின்று விடும், நெருப்பு விறகை தின்பதைப் போல'.
ஹஜ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 'நாங்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது 'சுவர்க்கத்திற்கு தகுதியானவர் ஒருவர் வருவார்' என்று நபி அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் பார்த்தோம், மதீனாவாசிகளில் ஒரு மனிதர் தொழுகைக்கு முன் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு (ஒளூ செய்து கொண்டு) தன் தாடியில் தண்ணீர் சொட்ட தனது இரு காலணிகளையும் வலது கையில் கொண்டு வந்தார். மறுநாளும் அதே மாதிரி சொன்னார்கள். அவரே வந்தார்.
மூன்றாம் நாளும் அவ்வாறே சொன்னார்கள். அவரே வந்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த அவையை விட்டு சென்ற பிறகு ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் அவரை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கே சென்று விட்டார்கள். அவரிடம் சொன்னார்கள், `நான் என் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி தாருங்கள்' என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் `தாராளமாக தங்கிக் கொள்ளுங்களேன்' என்றார்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் மூன்று நாள் அவருடைய வீட்டில் தங்கினார்கள். அதைப் பற்றி சொல்லும் பொழுது `அவரை இரவு நேரத்தில் நான் கண்காணித்தேன். அவர் விழித்திருந்து வணக்கம் புரிவதை நான் காணவில்லை. தூக்கத்தில் புரண்டு படுக்கும் பொழுது மட்டும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் கண்டேன். காலையில் பஜ்ரு நேரம் வந்தவுடன் பர்ளை நிறைவேற்றுகிறார். வேறு எந்த பெரிய வணக்கமும் இல்லை.
இதை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டு, நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கும் என் தந்தைக்கும் மத்தியில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை, ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவனவாசி என்று கூறினார்கள்.
தங்களிடம் என்ன தான் அமல் இருக்கின்றது என்பதை பார்ப்பதற்காகவும், அதை நான் பின்பற்றலாம் என்ற எண்ணத்திலும் வந்தேன். ஆனால் தங்களிடம் எந்த ஒரு பெரிய வணக்கத்தையும் காணவில்லை. விஷயம் அவ்வாறு இருக்க, பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களை சுவர்க்கவாசி என்று எப்படி கூறினார்கள்? என்று தெரியவில்லையே' என்று கூறிவிட்டு புறப்படலானேன்.
பின்னால் இருந்து என்னை அவர் அழைத்தார். அப்போது அவர் சொன்னார் 'நான் யாரின் மீதும் குரோதமோ, பொறாமையோ கொள்ளமாட்டேன். யாருக்கு எதை கொடுக்க இறைவன் நாடியிருக்கிறானோ அதை அவன் கொடுக்கிறான். நாம் ஏன் பொறாமை கொள்ள வேண்டும்' என்றார்.
உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், 'ஆம், இது தான் தங்களை சுவனவாசியாக ஆக்கிவிட்டது'. அவர் தான் சஃதிப்னு அபி வக்காஸ் என்ற நபித்தோழர் ஆவார்.
இந்த சம்பவம் அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாமல் இருந்தாலே சுவனம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
நபி (ஸல்) கூறினார்கள்: "பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்." (நூல்: புகாரி)
நம் மீது யாராவது ஒருவர் பொறாமை கொள்வாரேயானால் பொறுமையை மேற்கொள்ளவேண்டும், பழிவாங்கிவிடக் கூடாது. பொறுமையுடன் இருப்பது தான் பொறாமையை வெல்ல அருமருந்தாகும்.
- தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
- ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.
இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.
ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)
ஜகாத் கடமை?
தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.
தங்கம்-வெள்ளி
நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.
விளைபொருட்கள்
சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.
கால்நடைகள்
கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.
ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்
இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.
இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.
ஜகாத் பெற தகுதியானவர்கள்
இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:
1) வறியவர்கள்
2) ஏழைகள்
3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்
4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்
5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு
6) கடனாளிகள்
7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்
8) வழிப்போக்கர்கள்
ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)
எச்சரிக்கை
கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)
மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.
ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.
- உன்னத படைப்பாக மனிதன் திகழ்கின்றான்.
- திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.
இறைவன் எண்ணற்ற படைப்புகளை இந்த உலகில் படைத்துள்ளான். அவற்றில் உன்னதப் படைப்பாக மனிதன் திகழ்கின்றான். எந்தபடைப்புக்கும் கொடுக்காத ஒரு தனித்துவத்தை மனிதப் படைப்புக்கு இறைவன் கொடுத்துள்ளான். அதுவே சிந்திக்கும் திறனும், ஆற்றலும். சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தும் மனிதன் மனம்போன போக்கில் அலைகிறான். இறை கட்டளைகளுக்கு மாற்றமாக நடக்கின்றான்.
உலகத்தின் மீது கொண்டிருக்கும் மோகம் தான் சிந்தனைத் திறன் பழுதடைவதற்குக் காரணம். இதனால் மறுமையை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
அல்லாஹ் கூறுகின்றான்: ``பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளி நிறைந்த பெருங்குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது". (திருக்குர்ஆன் 3:14)
உலக ஆதாயங்களையே குறிக்கோளாகக் கொண்டு அனேகமானோர் அலைந்துகொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். மறுமை எனும் புதையலை அடைந்துகொள்ள வேண்டுமெனில் இம்மை வாழ்வில் சரியான விளைச்சலை நாம் விதைக்க வேண்டும். இது கட்டாயம்.
ஆனால் நம்முடைய தேடலும், சிந்தனையும் இம்மையை மையமாகக் கொண்டே சுழல்வதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.
நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் கொசுவின் இறக்கை அளவுக்கு ஈடாக இருக்கும் என்றிருந்தால், அவனை நிராகரிக்கும் நிராகரிப்பாளருக்கு அவன் ஒரு மிடர் தண்ணீரைக் கூட அருந்துவதற்குக் கொடுத்திருக்க மாட்டான்". (நூல்: அஹ்மத்)
இதன் அடிப்படையில் எது குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டும் என்பதை இந்த நபிமொழி அழகாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவேதான் மற்றொரு முறை நபி (ஸல்) கூறினார்கள்: "எவன் இம்மையை நேசிக்கிறானோ அவன் தன் மறுமையை அழித்துக்கொள்வான்.
எனவே மக்களே! நீங்கள் அழிந்துவிடக்கூடிய வாழ்க்கைக்குப் பகரமாக, நிலையான வாழ்வையே தேர்ந்தெடுங்கள். அதாவது மறுமையை உங்கள் குறிக்கோளாய் ஆக்கிக்கொள்ளுங்கள்".
இதனையே அல்லாஹ் இவ்வாறு உறுதிப்படுத்துகின்றான்: "(நபியே!) நீர் கூறும்: "இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு.
அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள். அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 3:15)
மனிதனின் சிந்தனைதான் செயல்வடிவமாக மாறுகிறது. அதன் அடிப்படையில்தான் அவன் தன் வாழ்வையும் அமைத்துக்கொள்கிறான். நன்மையான விஷயங்கள் குறித்து சிந்தித்தால் நன்மைகளைச் செய்வான். தீமைகளை சிந்தித்தால் துர்பாக்கியமே மிஞ்சும். சிந்தனையின் சிறப்பு குறித்து இறைவன் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக அறிவுறுத்துகிறான்.
"நபியே! இவர்களிடம் கூறும்: "நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன். நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித்தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்" (திருக்குர்ஆன் 34:46)
"இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் இம்மை - மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் 2:219,220)
"அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)
மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மதங்கள் சில வரையறைகளை வைத்திருக்கலாம். ஆனால் இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக அறிவுறுத்தி வழிகாட்டுகிறது, கற்றுக்கொடுக்கின்றது.
கற்றுக்கொள்வதன் மூலமும், கற்றுக்கொடுப்பதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான். அந்த பகுத்தறிவுதான் அவனை சிந்திக்க வைக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தைப் பொறுத்தவரை நல்ல சிந்தனையும் ஒரு வணக்கமே. நல்ல சிந்தனைதான் அடிப்படையில் இருந்தே ஒரு மனிதனை மாற்றுகிறது. எனவே சிந்தித்து செயல்படுவோம்!
- காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம்.
- மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
காதல், முறை தவறிய உறவுகள் போன்றவற்றில் சிக்கி இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் அவலம் அதிகமாக காணப்படுகிறது. காதல் என்பது ஓர் அபரிமிதமான நேசம். அந்த நேசத்தைக் கண்டறிவது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. தூய அறிவாலும், மாசற்ற உள்ளத்தாலும் உணர்வெழுச்சி பெற்று ஒருவரை ஒருவர் நேசிப்பது இன்று மிகமிகக் குறைவே.
காதல் என்ற பெயரில் நடப்பதெல்லாம் உடல் மீதான வேட்கையே. பெரும்பாலான காதலர்களின் வாழ்வு, திருமணத்திற்குப் பின் ஜொலிக்காமல் இருப்பதற்கான காரணம் இதுதான். சமூகத்தில் பரவி நிற்கும் `ஓடிப்போதல்' என்ற நோய்க்கு பெரும்பாலும் இந்த உடல் வேட்கையே காரணமாக அமைந்துள்ளது.
அதே சமயம் இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்ணை உடல் வேட்கையின்றி உண்மையாகவே திருமணம் செய்துகொள்ள விரும்புவதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.
அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்கும் முன்பு, ஓர் இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், அவரைத் திருமணம் செய்துகொள்வதாக அந்தப் பெண் உறுதியளித்தார். பிறகு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்று, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார் என்பது வரலாறு.
தனிமையில் சந்தித்தல்
அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருப்பதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. திருமண உடன்படிக்கை நடக்காதவரை மணம் முடிக்க அனுமதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் அந்நியப் பெண்ணே. திருமணம் செய்வதற்காக அவளைப்பார்ப்பதற்கு மட்டுமே இஸ்லாம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டதாகவே தொடர்ந்து இருக்கும்.
நபி (ஸல்) கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் எவரும் ஓர் அந்நியப் பெண்ணுடன் - அப்பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) எவரும் உடன் இல்லாதபோது - தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கின்றான்". (நூல்: அஹ்மத்)
தனித்திருப்பதால் ஏற்படும் ஆபத்து
மக்களில் பலர் தங்களது குடும்ப பெண்களை, திருமண ஆலோசனை மட்டுமே நடந்த அந்நிய ஆடவருடன் தனிமையில் இருப்பதற்கும், மனம்போன போக்கில் பேசிப்பழகவும், ஊர் சுற்றுவதற்கும் அனுமதிக்கின்றனர். இதன் பிரதிபலன் என்னவென்றால், பெண்ணுக்கு அவளுடைய கண்ணியம், மரியாதை, சில சமயம் கற்பும் நஷ்டமடைகின்றது.
இன்னும் சிலர் நேர்மாறாக உள்ளனர். திருமண ஆலோசனை வேளைகளிலோ, பெண் பார்க்கும் போதோ தன்னுடைய பெண் பிள்ளைகளை மற்றவர்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிப்பதில்லை. முதல் இரவில் தம்பதிகள் ஒருவரையொருவர் பார்ப்பதைத்தவிர அதற்குமுன் பார்க்க வேண்டிய தேவை இல்லை என்பதே இவர்களுடைய வாதம். முதன்முதலாக அந்த இரவில் திடீரென ஒருவரையொருவர் சந்திக்கும்போது மனதில் தோன்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக இருந்து விட்டால் அதுவே நிரந்தர கருத்து வேற்றுமைக்கும், பின்னர் பிரிவுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.
திருமணமே அழகு
பெரும்பாலும் பெற்றோர்களின் அலட்சியப் போக்கு, வறுமை, ஒழுக்கமின்மை என்பவை தவறுகளுக்கான காரணங்களாகத் திகழ்கின்றன. வயது வரும்போது அந்தந்த பருவத்திற்கே உரிய உணர்வுகள் உடலில் தோன்றுவது இயல்புதான். அவை கட்டு மீறாது, ஒழுங்குபடுத்தி மார்க்கம் சொன்ன வழியில் திருமணம் செய்வதுதான் அழகு.
மனிதன் தனது பாலுணர்வையும், இச்சையையும் தீர்த்துக் கொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையே திருமணம். மன உளைச்சலில் இருந்து மனிதனை அது தடுக்கிறது. பதற்றத்தில் இருந்து மனித மனங்களை சாந்தப்படுத்துகிறது. தடை செய்யப்பட்டவற்றை (ஹராமான) பார்க்கும் மனோபாவங்களில் இருந்து உள்ளங்களை அது திருப்புகிறது. இறைவன் அனுமதித்த வழிமுறையின் மூலம் அன்பும் மனநிறைவும் அடையும்படிச் செய்கின்றது.
திருக்குர்ஆன் இதனையே பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: "மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக!
மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன". (திருக்குர்ஆன் 30:21)
குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒருபோதும் கிடைப்பதில்லை. தற்காலிக இன்பத்திற்காக நிலையான இன்பத்தை இழந்து விடுவதும் மூடத்தனம். ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு திருமணத்தைவிடச் சிறந்த உறவு எதுவுமில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது புனிதமானது. அது ஓர் அறச்செயல். அதனை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்ளாமல் மணம் செய்து காதல் செய்வதே உகந்தது. அழகான பெண்ணை அல்லது ஆணை அடைவதல்ல காதல். அடைந்த மனைவியை அல்லது கணவனை அழகாக நேசிப்பதே காதல்.
- நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
- உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது.
மனிதனை நேர்வழிப்படுத்தி, இந்தப்பூமியில் அவன் எவ்வாறு வாழ வேண்டும், மறுமை வெற்றியை எவ்வாறு அடைவது என்பது குறித்து அழகிய முறையில் வழிகாட்டும் சிறந்த வேதம் திருக்குர்ஆன் மட்டுமே.
அரபி மொழியில் இந்த நூல் இருந்தாலும் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற ஒரு நூலைக் கொண்டு வாருங்கள் என்று அந்தக் குர் ஆனே சவால் விடுகிறது. அல்லது அந்த நூலில் எங்கேனும் ஒரு தவறையேனும் கண்டுபிடித்து விடுங்கள் என்றுகூட அறைகூவல் விடுகிறது. இந்த சவாலை சந்திக்கத்தான் யாராலும் முடியவில்லை. காரணம்- இது மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்டதல்ல, உண்மையில் இது இறைவேதமாகும்.
திருக்குர்ஆனை விமர்சிப்பவர்களைப்பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான்: "அவர்கள் குர்ஆனைப் பற்றி சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்". (திருக்குர்ஆன் 4:82)
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், திருக்குர் ஆன் விடுக்கும் ஒரே சவால் இதுதான்:
"நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்). (திருக்குர்ஆன் 2:23)
நூறு விழுக்காடு அது இறைவேதம் என்பதை திருக்குர்ஆன் (12:1) குறிப்பிடும் போது, "வேதக் கட்டளையாகும் இது" என்கிறது. மிக உயரிய லட்சியத்தின்பாலும் நேரான பாதையின்பாலும் மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக இந்தக் குர்ஆனை அல்லாஹ் இறக்கியருளினான், இதை விளக்கும் வசனங்களைக் காண்போம்.....
"இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்". (திருக்குர்ஆன் 41:2).
"நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் முகம்மது நபிக்கு அல்லாஹ் இறக்கியருளிய அதே முறையில் அதன் வசனங்களை இன்றும் மக்கள் ஓதுகின்றார்கள். செவிமடுக்கின்றார்கள். மனப்பாடம் செய்கிறார்கள். புரிந்துகொள்கின்றார்கள்". (திருக்குர்ஆன் 41:41).
"அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது". (திருக்குர்ஆன் 5:15)
"அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் (திருக்குர்ஆன்) மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்". (திருக்குர்ஆன் 5:16).
"உண்மையில் இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது. மேலும், இதனை ஏற்றுக்கொண்டு நற்செயல் செய்பவர்களுக்குத் திண்ணமாகப் பெரும் கூலி உண்டு என்று இது நற்செய்தி அறிவிக்கிறது". (திருக்குர்ஆன் 17:9)
இந்தக் குர்ஆனுக்கு என்று நோக்கங்களும் இலக்குகளும் இருப்பதைப் போன்றே; சரியான கொள்கை, இறைத்தன்மை, தூதுத்துவம், நற்கூலி, மனிதன் குறித்த யதார்த்தம், அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கண்ணியம், அவனது உரிமைகள் குறித்த முக்கியத்துவம், அதிலும் குறிப்பாக பலவீனமானவர்களின் உரிமைகள் குறித்தெல்லாம் குர்ஆன் விரிவாகப் பேசுகிறது. மனிதன் இறைத் தொடர்பில் இருக்க வேண்டும், அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அனைத்து விவகாரங்களிலும் அவனையே அஞ்ச வேண்டும் என்றும் இந்தக் குர்ஆன் தூண்டுகிறது.
உளத்தூய்மை குறித்தும் இந்தக் குர்ஆன் பேசுகிறது. உள்ளம் தூய்மை பெற்றுவிட்டால் சமூகம் தூய்மை பெறும் என்றும், உள்ளம் மாசடைந்தால் சமூகம் மாசடையும் என்றும் இந்தக் குர்ஆன் கூறுகிறது.
சமூகத்தின் கருவாக இருக்கும் குடும்ப அமைப்பு குறித்தும் குடும்பத்தின் தூணாக விளங்கும் பெண்ணிடம் நீதியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்தக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.
அவ்வாறே சீர்திருத்தம் செய்யும் சமூக உருவாக்கம் குறித்தும் வலியுறுத்துகிறது. மனித குலத்திற்கான அமானிதம் அந்த சமூகத்திடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் சாட்சியாளர்களாகத் திகழ வேண்டும். காரணம், ஏனைய மக்களுக்கு பயன் தருவதற்காகவும் அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகவும் மட்டுமே இவர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒருவருக்கொருவர் அறிமுகமாகுங்கள், வெறுக்காதீர்கள், சகிப்புத்தன்மையைக் கடைபிடியுங்கள், `இனவாதம் வேண்டாம், நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள், தீமையிலும், பகைமையிலும் பரஸ்பரம் உதவாதீர்கள் என்றும் மனித உலகை இந்தக் குர்ஆன் அழைக்கிறது.
மனப்பாடம் செய்தல், ஓதுதல், செவிமடுத்தல், வசனங்களை சிந்தித்தல், யோசித்தல், விளங்குதல், விளக்குதல் போன்றவற்றின் மூலம் இந்தக் குர்ஆனுடன் சிறந்த முறையில் நடந்துகொள்வது நம் மீது கடமையாகும். குர்ஆன் கூறும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் அது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையைத்தரும்.
அப்ராஸ் அமீன், திருச்சி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்