search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக இளைஞரணி"

    • பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
    • எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது.

    விழாவுக்கு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தளப் பக்கங்களை தொடங்கி வைத்தார். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தள பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் இளைஞரணி 44 ஆண்டுகள் முடிந்து 45-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்கு அணிகள் இருப்பது தி.மு.க. வுக்குதான். தி.மு.க.வில் பல அணிகள் இருந்தாலும் அதில் முதல் அணியாக இளைஞரணி உள்ளது.

    சேலத்தில் வெற்றிகரமாக இளைஞரணி மாநாட்டை நடத்தி காட்டினீர்கள். அதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்தார். இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்தார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதே போலவே தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

    இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ், அண்ணாதுரை இருவரும் டெல்லி சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் 15 நாட்கள் தங்கி பணியாற்றினீர்கள்.

    முதலமைச்சர் இப்போது கோட்டையில் இருந்தாலும், அவரது எண்ணம் இங்குதான் இருக்கும். நேற்று நள்ளிரவு 11 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இளைஞரணி நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

    எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதை தான் அவரும் விரும்புவார். ஏனென்றால் அதற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவ தற்கு இளைஞரணிதான் காரணம்.

    இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பொறுப்புகளில் வருவதற்கு இளைஞரணிதான் அடித்தளம். இளைஞரணிக்கு சமூக வலைதள பக்கம் தொடங்கியுள்ளோம். இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அரசியல் களம் எவளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூக வலைதளம் முக்கியம்.

    சட்டமன்ற தொகுதிகளில் நூலகம் தொடங்கி வருகிறோம். இதுவரை 50 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் விரைவில் தொடங்கப்படும். முதலமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பலர் முன்மொழிந்தீர்கள்.

    ஊடகங்களில் வரும் கிசு... கிசு..., வதந்திகள் உண்மையாகி விடும் என்ற எண்ணத்தில் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பேசுகிறீர்கள்.

    துணை முதலமைச்சர் குறித்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறினேன். எந்த பதவிக்கு வந்தாலும் இளைஞரணியை மறந்து விட மாட்டேன். அதுதான் எனது மனதுக்கு பிடித்தமானது.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படி உழைத்தோமோ அதுபோன்று 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். அந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெண்கள் அதிக அளவு வாக்களித்து இருக்கிறார்கள். அது தி.மு.க. வுக்கு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது.

    இதற்கு காரணம், விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை திட்டமாகும். எனவே அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி 2026-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம்.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். அந்த எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள், எந்த பொறுப்புக்கு சென்றாலும் சனாதனத்தை மறக்க மாட்டேன் என்று பேசினீர்கள் உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா? என்று கேட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறும்போது, பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

    நீட் தேர்வு குறித்த மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நீட் தேர்வுககு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழக அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

    • 45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி.
    • அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    45-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது தி.மு.க. இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதிக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
    • பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் உங்களின் பொறுப்பு மாற்றப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    * பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.

    துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுகவினர் பேசி வருகிறார்கள். இளைஞரணி பதவியே மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.
    • எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான்.

    * பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.

    * பிரதமர் மோடியின் வருகையை நிராகரித்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.

    * பாஜக பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது.

    * திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு காரணம்.

    * சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026-லும் தொடர உறுதியேற்போம்.

    * திமுக இளைஞரணியினர் சமூக வலைதங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திற்கு என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

    * எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    * இல்லம் தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

    * நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம்.
    • இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026லும் தொடர உறுதியேற்போம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

    திமுக இளைஞர் அணி 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக கழக இளைஞர் அணி 44 ஆண்டுகளை நிறைவுசெய்து, 45-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நீண்ட வரலாற்றில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலில், இளைஞர் அணிச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

    திமுக இளைஞரணி செயற்பாடுகளில் உற்சாகத்துடன் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.

    நாம் ஆற்றிய பணிகளும் ஏராளம், காத்திருக்கும் கடமைகளும் ஏராளம் என்பதை உணர்ந்து, 2026-இல் மீண்டும் நம் திராவிட மாடல் ஆட்சி அமைய உறுதியேற்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட வாரியாக கருத்து கேட்டு வந்தனர்.

    கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்கள்.

    அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கூறும்போது யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும். கோஷ்டி பிரச்சினைகளை தேர்தலுக்கு பிறகு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அவர்களிடம் தனியாக கருத்து கேட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

    அதன்படி இப்போது வருகிற 14-ந் தேதியும், 15-ந் தேதியும் தி.மு.க. இளைஞரணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தாங்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழகப்பணிகள் குறித்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    14-ந் தேதி மாலை சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதே போல் மண்டலம் 2-ல் இடம் பெற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அன்றைய தினம் பார்த்து பேசுகிறார்.

    15-ந் தேதி காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்டங்கள் வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மண்டலம் 4-ல் உள்ள மாவட்ட அமைப்பாளர்கள் 15-ந் தேதி பங்கேற்க உள்ளனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து பேசுவதுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படம் சிறிய அளவாக சுருக்கம் கண்டுவிட்டது.
    • உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்ட போஸ்டர்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

    இதற்காக மாவட்டச் செயலாளர் கூட்டத்தை அண்மையில் கூட்டிய அவர், கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.

    அத்துடன் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.2) கூட்டத்தையும் மண்டல அளவில் நடத்த தொடங்கிவிட்டார். இது ஒருபுறம் இருக்க இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி செயல்பாடுகளில் இப்போது தீவிரம் காட்ட தொடங்கி விட்டார்.

    எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை இருக்கிறதோ அந்த மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக அழைத்து கட்சி பிரச்சினைகளை கேட்டறிகிறார். மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து பேசுகிறார்.

    அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை நேரில் பார்த்து தெரிந்து கொள்கிறார்.

    தி.மு.க.வில் அமைச்சர் உதயநிதியின் 'கை' வேகமாக ஓங்கி வருவதால் முன்பு இருந்ததைவிட அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து உள்ளது.

    உதயநிதி வருங்கால தலைவர் என்பதால் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அவருக்கு அதிக மதிப்பும், மரியாதையும் கொடுப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

    முன்பெல்லாம் இளைஞர் அணியினர் மட்டுமே வைக்கும் வரவேற்பு பேனர்களில் கருணாநிதி மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இணையாக உதயநிதியின் போட்டோவை அச்சிட்டனர். ஆனால் இப்போது மாவட்ட அளவில் நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவருடைய படங்களும்தான் பெரிய அளவில் காணப்படுகிறது.

    பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படம் சிறிய அளவாக சுருக்கம் கண்டுவிட்டது.

    உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் பிரமாண்ட போஸ்டர்கள் இடம் பெறுவதை காண முடிகிறது.

    ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பக்குவம் அடைந்துவிட்ட காரணத்தால் அவரை தலைவருக்கு இணையான அந்தஸ்தில் வைத்து மாவட்டச் செயலாளர்கள் அணுகி வருகின்றனர். அதற்கேற்ப அவரது அணுகுமுறையும் மாறியுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40-ல் 10 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு 30 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் குறைந்தபட்சம் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை உதயநிதிதான் தீர்மானிப்பார் என தெரிகிறது. அதிலும் இளைஞரணியில் இருந்து 5 பேரை வேட்பாளராக நிறுத்துவதற்கு பரிந்துரைப்பார் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    எந்தெந்த ஊர்களில் இளைஞரணி நிர்வாகிகள் கட்சிக்காக திறமையாக உழைக்கிறார்களோ, அவர்களை தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பார் என்றும் தகவல்கள் வருகின்றன.

    இதன் காரணமாக இப்போதே மூத்த அமைச்சர்களும், முன்னணி தலைவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது வாரிசுகளுக்கு எம்.பி. சீட்டு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சீட்' கொடுக்க முன்வந்தாலும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் ஒவ்வொருவரும் மிக பவ்வியமாக நடந்து கொள்வதை காண முடிகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
    • நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம், கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு, வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய இளைஞர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். கலைஞர் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுவது, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிப் பாசறை உள்ளிட்ட இளைஞர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×