search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2026-ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி
    X

    2026-ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி

    • பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
    • எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி 45-வது ஆண்டு தொடக்க விழா, தேனாம்பேட்டையில் உள்ள இளைஞரணி தலைமை செயலகமான அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடந்தது.

    விழாவுக்கு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தளப் பக்கங்களை தொடங்கி வைத்தார். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தள பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தி.மு.க.வில் இளைஞரணி 44 ஆண்டுகள் முடிந்து 45-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலேயே ஒரு இயக்கத்துக்கு அணிகள் இருப்பது தி.மு.க. வுக்குதான். தி.மு.க.வில் பல அணிகள் இருந்தாலும் அதில் முதல் அணியாக இளைஞரணி உள்ளது.

    சேலத்தில் வெற்றிகரமாக இளைஞரணி மாநாட்டை நடத்தி காட்டினீர்கள். அதற்காக மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்தார். இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் வந்தார். அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னேன். அதே போலவே தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் மோடி 1000 முறை வந்தாலும் பா.ஜனதாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

    இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்ற இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ், அண்ணாதுரை இருவரும் டெல்லி சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் 15 நாட்கள் தங்கி பணியாற்றினீர்கள்.

    முதலமைச்சர் இப்போது கோட்டையில் இருந்தாலும், அவரது எண்ணம் இங்குதான் இருக்கும். நேற்று நள்ளிரவு 11 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இளைஞரணி நிகழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவித்தார்.

    எங்களது இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதை தான் அவரும் விரும்புவார். ஏனென்றால் அதற்காக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவ தற்கு இளைஞரணிதான் காரணம்.

    இன்று அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பொறுப்புகளில் வருவதற்கு இளைஞரணிதான் அடித்தளம். இளைஞரணிக்கு சமூக வலைதள பக்கம் தொடங்கியுள்ளோம். இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அரசியல் களம் எவளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சமூக வலைதளம் முக்கியம்.

    சட்டமன்ற தொகுதிகளில் நூலகம் தொடங்கி வருகிறோம். இதுவரை 50 நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் விரைவில் தொடங்கப்படும். முதலமைச்சருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பலர் முன்மொழிந்தீர்கள்.

    ஊடகங்களில் வரும் கிசு... கிசு..., வதந்திகள் உண்மையாகி விடும் என்ற எண்ணத்தில் துண்டு போட்டு வைத்து கொள்வோம் என்ற எண்ணத்தில் பேசுகிறீர்கள்.

    துணை முதலமைச்சர் குறித்து ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டபோது எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பார்கள் என்று கூறினேன். எந்த பதவிக்கு வந்தாலும் இளைஞரணியை மறந்து விட மாட்டேன். அதுதான் எனது மனதுக்கு பிடித்தமானது.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படி உழைத்தோமோ அதுபோன்று 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். அந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெண்கள் அதிக அளவு வாக்களித்து இருக்கிறார்கள். அது தி.மு.க. வுக்கு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது.

    இதற்கு காரணம், விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை திட்டமாகும். எனவே அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி 2026-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம்.

    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். அந்த எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியை முடித்து விட்டு வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள், எந்த பொறுப்புக்கு சென்றாலும் சனாதனத்தை மறக்க மாட்டேன் என்று பேசினீர்கள் உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா? என்று கேட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறும்போது, பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.

    நீட் தேர்வு குறித்த மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் நீட் தேர்வுககு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழக அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

    Next Story
    ×