search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் வாக்குவாதம்"

    • கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர்.
    • பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் குறைந்த விலையில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தணிகை, கார்த்திகேயன் மற்றும் சரவணப்பொய்கை குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கே.ஜி.எப்., பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். முன்னதாக கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர். ஆனால் கோவில் ஊழியர்கள் அறைகள் காலியாக இருந்தும் அறைகள் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அறைகள் ஒதுக்க முடியாது என கோவில் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தணிகை குடில்களில் அறைகள் காலியாக இருந்தும் வெளி மாநிலத்தவருக்கு அறை ஒதுக்க முடியாது என கூறி 3 மணி நேரம் குழந்தைகள் மற்றும் பெண்களை தரையில் அமர வைத்த கோவில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில பக்தர்கள் திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோவில் உயர் அதிகாரிகள் உடனடியாக பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கி உள்ளனர்.

    குடில்களில் பணிபுரியும் ஊழியர்கள் முகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்களில் அறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×