search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனி மார்க்கெட்"

    • கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
    • தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டன. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகளும், 730 வார சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மாத வாடகையாக ரூ. 31,500-ம், வாய்ப்புத்தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படாமலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பகுதியில் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு 86 கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் முதல் பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி சந்தை முழுமையாக செயல்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.54 கோடி மதிப்பில் 4 தளத்துடன் 292 கடைகள் அடங்கிய புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.அங்கு ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

    இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் கடைகளை ஒதுக்குவதில் முன்னுரிமை தராமல் பொது ஏலத்தில் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததால் ஜவுளி மார்க்கெட் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக புதிய வணிக வளாகம் கடைகள் ஏலம் போகாமல் இழுப்பறி நீடித்து வந்தது.

    இதற்கிடையே புதிய வணிக வளாகம் கட்டுமான பணிக்கு முன்னரே அதன் அருகில் ஏற்கனவே கடை அமைத்துள்ள வியாபாரிகள் மாநகரா ட்சியின் அனுமதியின் பேரில் தற்காலிக கடை அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

    இதற்கு இடையே 60 நாளில் தற்காலிக கடைகளை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகத்தை ஏலத்தில் விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 60 நாள் கெடு முடிவு அடைந்ததால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்ய வலியுறுத்தி கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட்டனர். மேலும் கடைகளை காலி செய்ய தீபாவளி வரை அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் அமைச்சர் முத்துசாமியின் அறிவுறுத்தலையின்படி மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி அதிகாரிகள், ஜவுளி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீதிமன்ற உத்தரவு என்பதால் அமைச்சரோ, மாநகராட்சி நிர்வாகமோ ஒன்றும் செய்ய முடியாது என்றும், உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    எனினும் இதற்கு மாற்று தீர்வாக புதிய வணிக வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த 120 கடைக்காரர்களுக்கு ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் எனப்படும் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காலி இடத்தில் ஜவுளிக்கடைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக சின்ன மார்க்கெட்டில் உள்ள இடங்கள் அளவீடு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தற்போது சின்ன மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அதன் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காய்கறி கடைகள் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    சின்ன மார்க்கெட் பகுதியில் கனி மார்க்கெட் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி வர வரை பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு சின்ன மார்க்கெட் பகுதியில் கடை நடத்த நாங்கள் தயாராக இருப்பதாக கனி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    புதிய வணிக வளாக கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே கடைகள் அமைந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் வணிக வளாகம் திறக்கப்பட்ட பிறகு பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதிகமான வாடகை, வைப்பு தொகை நிர்ணயிக்கப்பட்டதால் எங்களால் கடைகளை வாடகைக்கு எடுக்க முடியவில்லை.

    இந்நிலையில் கடைகளை திடீரென காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். தற்போது எங்களுக்கு மாநகராட்சி சார்பில் சின்ன மார்க்கெட் பகுதியில் கடைகள் ஒதுக்கு வதாக தெரிவித்துள்ளனர்.

    நாங்கள் இதை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் எங்களுக்கு தீபாவளி வரை இதை பழைய இடத்தில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தீபாவளி காரணமாக வியாபாரம் எங்களுக்கு சூடு பிடிக்கும்.

    இதனால் பல ஜவுளி வியாபாரிகள் கடனுக்கு சரக்குகளை வாங்கியுள்ளனர். அதை தீபாவளி வியாபாரம் மூலம் தான் எங்களால் எடுக்க முடியும். தீபாவளி முடிந்ததும் நாங்கள் சின்ன மார்க்கெட் பகுதிக்கு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் மாநகராட்சி சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே இன்று மதியம் மீண்டும் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் எங்களது தரப்பு கோரிக்கையில் கொடுத்து அவரிடம் தெளிவாக எடுத்துரைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் காரணமாக ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் இன்று 3-வது நாளாக கடைகளை அடைத்துள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. அதேநேரம் சாலையோர ஜவுளி கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

    ×