search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவுத் திட்டம்"

    • பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.
    • நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது,

    கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

    கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.

    விடுதலைப் போராட்டம் மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் - ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்தார்கள்.

    இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது முதலமைச்சர்.

    இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

    கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும் என்று கூறியுள்ளார்.

    • 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர்
    • பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 5 நாள் பயணமாக, 40 பேர் கொண்ட பீகார் மாநில கல்விக்குழு சென்னை வந்தடைந்தனர்.

    இன்று முதல் நாளில், பள்ளிக் கல்வித்துறையின் அமைப்பு அதன் செயல்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    குறிப்பாக கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது, என்னென்ன நிகழ்ச்சிகள் அங்கு தயாரிக்கப்படுகிறது. எவ்வாறு படப்பிடிப்புகள் நடத்தப்படுகிறது குறித்து அவர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அதே போல் பாடப்புத்தகங்கள் வண்ணமயமாக எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    நாளை பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் குறித்து அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

    புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், தகைசால் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

    இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் இருந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து தெலுங்கானாவில் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்’ இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது
    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 6500000 உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

    கனடா நாட்டிலும் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' இந்தியா முழுவதும் வரவேற்பை பெரும் நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக பெருமிதமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "மாண்புமிகு தமிழ்நாடு அவர்களின் கனவுத் திட்டமாக முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110 ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவித்தார்.

    நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.92022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 258.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே தெலுங்கானா மாநிலத்தில் தற்போது உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" என திமுக தெரிவித்துள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்


    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 479 அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்துறை அடுத்த குழுமூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாகத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். இதே போல் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட துளாரங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.ராமலிங்கம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட மாவட்ட மேலாளர் கே.கவிதா , வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், முருகன், வட்டார கல்வி அலுவலர் ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட ஒன்றியத்துக்குள் உள்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தினை அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். ஆக மாவட்டத்தில் 479 அரசுப் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.




    • ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
    • ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    திங்கட்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

    செவ்வாய்க்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி,

    புதன்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்.

    வியாழக்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா.

    வெள்ளிக்கிழமை- காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

    ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.

    மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    • சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள்.
    • 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை சிற்றுண்டி விரிவாக்கம் திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னையில் 358 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் குழந்தைகள் இதன் மூலம் பயனடைகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை சிற்றுண்டியை குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலை உணவு திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. 30 முதல் 40 சதவீதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது. காலை உணவு நன்றாக இருக்கிறதா? என்று குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

    மாணவர்களும் பெற்றோர்களும் இத்திட்டத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த திட்டமும் சிறந்ததாகும். மாணவர்களோடு நானும் ஒரு பயனாளியாக அமர்ந்து சாப்பிட்டேன்.

    இத்திட்டம் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமின்றி உணவு பாது காப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்வார்கள்.

    இதற்கான பிரத்யேக ஆப் மூலம் கண்காணிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடம் முதல் மாணவர்களுக்கு கொண்டு சென்று வழங்கும் வரை கண்காணிக்கப்படுகிறது. எங்காவது குறை இருந்தாலும் சரி செய்யப்படும்.

    உலக செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இது மிகப்பெரிய சாதனையாகும். சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படும். 19 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் பல சாதனைகளை செய்வார்.

    சந்திரயான்-3 வெற்றி எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. 3 தமிழர்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாந்தோப்பு பள்ளியிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர் மடுமாநகரில் உள்ள பள்ளியிலும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மண்டலத் தலைவர்கள் மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×