search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்க்கை பாடம்"

    • பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம்.
    • வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள்.

    குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் உண்டு. அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் ஆழமாக பதிந்துவிடும். சில விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகலாம்.

    தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக பெற்றோரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட. சில கேள்விகளுக்கான பதில் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

    அதனை தெரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர குழந்தைகளுக்கு தவறான தகவல் கொடுக்கக்கூடாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அந்த கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    பெற்றோருக்கு தெரியாத சில விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கலாம். அவர்களிடம் இருந்து அந்த விஷயத்தை பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் அதுபற்றி விவாதியுங்கள். நிறை, குறைகளை அவர்களுடைய மனம் நோகாமல் தெரியப்படுத்துங்கள்.

    எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள், நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் விமர்சன கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக வளர்வார்கள். எதையுமே அலசி ஆராய்ந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள பழகிவிடுவார்கள்.

    பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம். அப்படி மனதில் உதிக்கும் சந்தேகங்களை நோட்டில் எழுதச் சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை அவர்களையே தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது சாத்தியம் என்பதால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். செல்போனை இதுபோன்ற பயனுள்ள தேடலுக்கு பயன்படுத்த கொடுங்கள்.

    வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள். தினமும் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். அன்று படித்த பக்கங்களில் இருந்து கேள்வி கேளுங்கள். சரியாக பதில் அளித்தால் பரிசு வழங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இது குழந்தைகளிடத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி செயல்படும் ஆர்வத்தை மேலோங்கச் செய்யும்.

    எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் தாங்கள் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    ×