என் மலர்
நீங்கள் தேடியது "அபர்ணா நாயர்"
- நடிகை அபர்ணா நாயர் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
- தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எதுவும் நடக்கும் என்ற படத்திலும், தெலுங்கில் சின்னி சின்ன ஆசா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி சந்தனமாலை, ஆத்மசகி, மைதிலியும் வரும், தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
தற்சமயம் திருவனந்தபுரம் கரமனாதலா பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் நடிகை அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனைப்பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரி அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நடிகையை கொண்டு சென்றனர். அங்கு நடிகையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கரமனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், நடிகையின் உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை அபர்ணா நாயர் வீட்டில் இருந்த ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியிருக்கிறார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் நடந்ததா? என்பது மர்மமாக உள்ளது. இதனால் நடிகை சாவு சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிவில் நடிகை எப்படி இறந்தார்? என்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர். இருந்தபோதிலும் நடிகை சம்பந்தப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபர்ணா நாயர் தூக்கில் பிணமாக தொங்கியபோது அவரது தாய் மற்றும் சகோதரியே வீட்டில் இருந்துள்ளனர். ஆகவே நடிகை அபர்ணா நாயருக்கு பிரச்சினை எதுவும் இருந்ததா? என்று அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை அபர்ணா நாயருக்கு திருமணமாகி சஞ்சித் என்ற கணவரும், திராயா மற்றும் கிருத்திகா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் நடிகை தூக்கில் தொங்கியபோது வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை மர்மமாக இறந்திருப்பது மலையாள திரைத்துறை யினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.