search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறப்பு"

    • விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் மேம்படுத்தி வருகிறார்.
    • அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    தாராபுரம் : 

    தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சப்பட்டியில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசன் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

    வேளாண்மைத்துறையில் விவசாயிகளுக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கட்டணம் இல்லாத மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை முதல்-அமைச்சர் மேம்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின் குறுக்கீடு இன்றி நியாயமான விலைக்கு விற்றுப்பயன்பெறுவதற்காகவும் விலை வீழ்ச்சி காலங்களில் விளைபொருட்களைக் கிட்டங்கியில் வைத்து பொருளீட்டுக்கடன் பெற்றுப்பயன்பெறுவதற்காகவும் அரசால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    இதுவரை 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லுக்கு கூடுதல் விலையை அறிவித்து மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் அரசை வழிநடத்துகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தாராபுரம் பகுதியில் கிட்டங்கி, பரிவர்த்தனைக் கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் தனியார் கிட்டங்கியில் இருப்பு வைத்து வந்தனர். மேலும் அந்த கிட்டங்கிகள் தொலைவில் உள்ளதால் போக்குவரத்து செலவு மற்றும் அதிக வாடகை காரணமாக பொருளாதார இழப்பைச் சந்தித்து வந்தனர். இதனால் முதல்-அமைச்சரால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். 20 விவசாயிகளுக்கு பவர்டில்லர்களை அமைச்சர் வழங்கினார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன், நகரச் செயலாளர் எஸ்.முருகானந்தம், வி.சி.மகாதேவன், வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், பொறியியல்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், முதுநிலை செயலாளர் (பொறுப்பு) இரா.சுரேஷ்பாபு. மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, கவுண்டச்சிபுதூர் ஊராட்சி துணைத்தலைவர் நாச்சிமுத்து, 3-வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன், நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×