search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம்"

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×