search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள்"

    • உலகில் பிங்க், டக்டக்கோ என பல தேடுதல் எந்திரங்கள் உள்ளன
    • செலவிடும் தொகைக்கு மேல், கூகுள் வருவாயை ஈட்டுகிறது

    வணிக நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று நேர்வழியில் போட்டியிடவும், முறையற்ற வழியில் ஏகபோக முன்னிடத்தை ஒரு நிறுவனம் பெறுவதை தடுக்கவும், அமெரிக்காவில் "ஆன்டி-டிரஸ்ட்" சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டத்தை மீறியதாக உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஃபாபெட் (Alphabet) மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.

    இணையத்தில் தகவல்களை தேட விரும்புபவர்களுக்கு, அவர்கள் தேடும் தகவல்ளை உள்ளடக்கிய இணைய பக்கங்களை உடனடியாக எடுத்து தருவது "ஸெர்ச் எஞ்சின்" எனப்படும் மென்பொருள். தேடுதல் எந்திரமாக பயன்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்க் (Bing), டக்டக்கோ (DuckDuckGo) உட்பட பல மென்பொருள்கள் இருந்தாலும், பலரும் நாடுவது அமெரிக்காவின் அல்ஃபாபெட் நிறுவனத்தின் கூகுள் (Google) ஆகும்.

    இத்துறையில் உலக சந்தையில் 90 சதவீதம் கூகுளின் வசம் உள்ளது. இதன்மூலம் உலகிலேயே முன்னணி தேடுதல் எஞ்சினாக இருப்பதுடன், அத்தேடுதலின் போது வெளியிடப்படும் விளம்பரங்களினால் தினமும் பல கோடிகளை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால், இந்நிறுவனம் குறுக்கு வழியில் முறையற்று ஏகபோக நிலையை அடைந்ததாக வழக்கு நடக்கிறது.

    "ஆண்ட்ராய்டு (கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது) மற்றும் ஐஓஎஸ் (ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமானது) ஆகியவை எப்போதும் பயனர்களுக்கு கூகுளையே முன்னிறுத்தும் வகையில் ஆல்ஃபாபெட் நிறுவனம் வருடந்தோறும் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் செலவிட்டு வருகிறது.

    இதனால் எளிதாக அந்நிறுவனம் சந்தையில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடிகிறது. இதில் கிடைக்கும் ஏகபோக அந்தஸ்தினால், அது செலவிடும் தொகையை விட பெரும் வருவாயை ஈட்ட முடிகிறது. இது சங்கிலித்தொடர் போல் கூகுள் நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதால் மற்ற நிறுவனங்களின் தேடுதல் எஞ்சின்கள் களத்திலேயே இறங்க முடிவதில்லை," என கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வாதிடும் அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர் கென்னத் டின்சர் தெரிவித்தார்.

    இக்குற்றச்சாட்டுகளை மறுக்கும் கூகுள், "எங்கள் உயர்ந்த தரத்தினாலும், நாங்கள் செய்துள்ள அவசியமான முதலீடுகளினாலும்தான் இத்துறையில் முன்னணியில் உள்ளோம்" என தெரிவித்துள்ளது.

    இவ்வழக்கு விசாரணை முடிய 3 மாதங்களுக்கு மேலாகலாம் என்றும் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் இரு தரப்பினரும் மேல்முறையீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதால் பல வருடங்கள் இவ்வழக்கு தொடரும் என்றும் இணைய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×