search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் விசாரணை"

    • ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
    • சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    பீஜிங்:

    சீன ராணுவ மந்திரியாக இருப்பவர் லீஷாங்பூ. இவர் கடந்த இரண்டு வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக வாங்யீ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே சீன ராணுவ மந்திரி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணுவ மந்திரி லீஷாங்பு எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அவர் ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராணுவ உபகரணங்களை வாங்கியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை லீஷாங்பு தலைமையிலான சீன ராணுவத்தின் கொள் முதல் பிரிவை சேர்ந்த 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் ராணுவ மந்திரியாக நியமிக்கப் பட்ட லீஷாங்பு மற்றும் 8 அதிகாரிகள் மீதான விசாரணை ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஒழுங்குமுறை ஆய்வு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. சீன ராணுவ மந்திரி லீஷாங்பு, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

    லீ ஷாங்பு, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். கடந்த மாத தொடக்கத்தில் ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×