search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரளயம் காத்த விநாயகர்"

    • வருகிற 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி.
    • பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 7-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் கும்பகோணம் செல்பவர்கள் அருமையான சில விநாயகர் தலங்களை தரிசனம் செய்து வரலாம்.

    நமது நற்காரியங்கள் நல்லபடியாக நிறைவேற விநாயகரை வழிபடச் சொல்கின்றன புராணங்கள். காரியங்கள் சித்தி பெற அருளும் தெய்வம் அவர். உள்ளத்தில் நல்லதையே நினைக்கச் செய்து அந்த நற்செயல்களை ஒரு குறையும் இன்றி திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றலை நல்குவதால் பிள்ளையாரை ஸ்ரீசித்தி விநாயகர் என அழைப்பார்கள்.

    அந்த வகையில் கும்பகோணத்துக்கு வட மேற்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார்.

    கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்த தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

    ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் கடல் பொங்கி எழுந்து உலகை அழிக்கும் காலமே 'ஊழி' எனப்படும். இதை, 'யுகப்பிரளய' காலம் என்றும் அழைப்பார்கள். அப்போது தோன்றும் பெரும் ஊழிக் காற்றாலும், தீயாலும் உலகம் அழிக்கப்படும்.

    பின்னர், உலகத் தோற்றத்துக்கான தாண்டவத்தை மேற்கொள்வார் இறைவன். இவ்வாறு ஒரு யுகம் முடிந்து புதிய யுகம் துவங்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவபெருமான் ஆடுவது பிரளய தாண்டவம் எனப்படும்.


    சிவபெருமானைப் போலவே விநாயகரும் பிரளயத்தில் இருந்து மக்கள் அனைவரையும் காத்தருள்கிறார். இவரை பிரளயம் காத்த விநாயகர் என்பார்கள். இதே பெயருடன் இவர் அருளும் இடம்தான் திருப்புறம்பியம்.

    புறம் வெளி; பயம்- நீர்; பிரளய வெள்ளம் ஊரில் புகாமல் நின்றமையால் புறம்பயம். அந்த பெயர் புறம்பியம் என்று மருவி விட்டது. அதாவது பிரளயத்துக்கு புறம்பாய் இருந்ததால் இப்பெயர் வந்தது.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்புறம்பியப் போரில் முதலாம் ஆதித்த சோழன் வெற்றி பெற்று சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவினான். இந்த தலத்தில் அவன் திருப்பணி செய்த கோவிலுக்கு ஆதித்தேச்வரம் என்று பெயர்.

    செட்டிப் பெண் ஒருத்திக்காக இந்த தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடப்பள்ளி அனைத்தும் மதுரையில் சாட்சி சொன்னதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

    எனவே, இறைவன் பெயர் ஸ்ரீசாட்சி நாதர் எனும் சாட்சீஸ்வரர். அம்பிகை பெயர் கரும்படு சொல்லி.

    ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் அந்த பிரளயத்தை அடக்கிக் காத்தாராம்.

    அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டார். பிரளயத்தில் இருந்து ஊரை காத்ததால் இங்குள்ள கணபதிக்கு ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் என்று பெயர்.

    கோவிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயம் காத்த விநாயகர் கோவில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.

    அடுத்த வாரம் (செப்டம்பர் 7-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சி விடுவார். இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.


    மற்ற நாட்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுவதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் நடக்கிறது.

    அரசமர விநாயகர் என்ற பெயரில் ஆனைமுகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

    ஆரம்பத்தில் வெட்டவெளியில் பின்னிப்பிணைந்து வளர்ந்திருந்த ஆல, அரசமரங்களுக்கு அடியில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த விநாயகருக்கு காலப்போக்கில் கிழக்கு நோக்கி ஆலயம் உருவானது.

    உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை நுழைவாயிலின் இடதுபுறம் சுவாமிநாத சுவாமியும், வலதுபுறம் ஐயப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.

    அழகான பிரகாரத்தில் நாகர்கள் மற்றும் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, திருக்குளத்தைப் பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட காட்சி அபூர்வம் என்கின்றனர் பக்தர்கள்.

    பிரகாரத்தில் மேல்புறம் சனீஸ்வரரும், வடபுறம் துர்க்கை அம்மனும் அருள்கின்றனர். தலவிருட்சமான ஆல, அரச மரத்தை சுற்றி ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.

    நவகன்னியருக்கும் இந்த ஆலயத்திற்கும் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உண்டு.

    ஒருசமயம், நவகன்னியருக்கு ஓர் ஆசை வந்தது. தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் யாவும் தங்களை விட்டு விலகி, தாங்கள் தூய தேவதைகளாக விளங்க வேண்டும் என்பதுதான் அது.

    சிவபெருமானிடம் சென்று "பிரபோ, நாங்கள் செய்த பாவங்கள் யாவும் விலக வேண்டும். இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.

    'கும்பகோணம் செல்லுங்கள். அங்குள்ள குளத்தில் நீராடி, குளத்தின் வடகரையில் இருக்கும் அரசரடி விநாயகரை வழிபடுங்கள். உங்கள் பாவம் யாவும் விலகும் என்றார் பரமன்.

    அதன்படியே நவ கன்னியர் பூலோகம் வந்தனர். மகாமக குளத்தில் நீராடினர். அருகே வடக்கு திசையில் அரச மரத்தடியில் அருள்பாலிக்கும் விநாயகரை வழிபட்டனர். பாவ விமோசனம் பெற்றனர். இது செவிவழிக்கதை.

    விநாயகர் சதுர்த்தியின்போது இங்கே 10 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று வீதியுலாவும் உண்டு.

    நவராத்திரி நாட்களில் இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். விஜயதசமி அன்று துர்க்கை அம்மன் வீதியுலா வருவதுண்டு. சித்திரையில் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று இங்கு விசேஷ ஹோமம் நடைபெறுவது உண்டு. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கு பெறுவர்.

    தன்னை வணங்கும் பக்தர்களின் சகல பாவங்களையும் போக்கி, அவர்களுக்கு நற்பேறு அருள்கிறார் இங்குள்ள அரசமர விநாயகர்.

    கும்பகோணம் அருகே பாபநாசத்தில் இருக்கும் இரட்டை பிள்ளையாரும் சக்தி வாய்ந்தவர்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர்கள் தங்களை தாங்களே வெளிப் படுத்திய அற்பு தம் நடந்தது.

    ஒரு நாள் இரவு தன் பக்தரான முதியவர் ஒருவரின் கனவில் தோன்றினார் பிள்ளையார். குடமுருட்டி ஆற்று வெள்ளம் மூலம் நான் உங்கள் ஊருக்கு வந்துள்ளேன். என்னை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யவும், நான் இந்த ஊரையும், என்னை வழிபடும் மக்களையும் காப்பேன்! என்றார்.

    திடுக்கிட்டு எழுந்தார் பெரியவர். 'தான் கண்டது ' கனவா? உண்மையா? புரியவில்லை.

    பொழுது விடிந்ததும் ஊர் மக்களிடம் தான் கண்ட கனவை சொன்னார். பின் ஊர் மக்களை அழைத்துக்கொண்டு ஆற்றுக்குச் சென்றார்.

    இரவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடிந்திருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஓரிடத்தில் ஒன்றல்ல, இரண்டு பிள்ளையார் சிலைகள் இருந்தன. அனைவருக்கும் ஆச்சரியம்!

    ஊர் மக்கள் உதவியுடன் அந்தச் சிலைகள் எடுத்து வரப்பட்டு ஓர் அரச மரத்தடியில் நிறுவப்பட்டது. காலப்போக்கில் அங்கு கருவறையுடன் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு, அதில் இரட்டைப் பிள்ளையார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.

    அந்த தலம், பாபநாசம். தற்போது ஊரின் மேல வீதியும், வடக்கு வீதியும் சந்திக்கும் இடம். வடமேற்கு மூலை லட்சுமி குடியிருக்கும் இடம் என்பார்கள். அந்த இடத்தில்தான் இரட்டைப் பிள்ளையார் தரிசனம் கிடைக்கிறது.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென் திசையிலும் ஒரு வாயில் உள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் இந்த வாயிலையே பயன்படுத்துகின்றனர்.

    ஆலய முகப்பைத் தாண்டியதும் மகா மண்டபம், பலிபீடம், மூஞ்சூறு ஆகியவை உள்ளன, அர்த்த மண்டப நுழைவாயிலின் இடது புறம் வள்ளி, தெய்வானையுடன் தனி சன்னதியில் முருகன் அருள்பாலிக்க, எதிரே மயிலும் பலி பீடமும் உள்ளன.

    வலதுபுறம் ஆதி கும்பேஸ்வரரின் தனிச்சன்னதி உள்ளது. இவர் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். வடக்கில் மங்கம்மாளும், வடகிழக்கு மூலையில் நவகிரகங்களும் அருள்கின்றன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அது சமயம் ஹோமம் சிறப்பு ஆராதனை, விநாயகர் வீதியுலா எல்லாம் உண்டு. சங்கடஹர சதுர்த்தியின் போதும், வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் வேண்டி காத்திருப்போர் இங்குள்ள இரட்டை பிள்ளையாருக்கு 9 வகை தானியங்களால் அர்ச்சனை செய்தால் அவர்களுக்கு விரைந்து திருமணம் நடக்கிறது என்பது நம்பிக்கை. தவிர இங்கு நடைபெறும் ராகு கால பூஜை யில் கலந்துகொண்டால் கடன் தொல்லை களில் இருந்தும், பில்லி சூனிய பாதிப்புகளில் இருந்தும் மீண்டு நலம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
    • திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும்.

    கபிஸ்தலம்:

    திருப்புறம்பயம் சாட்சிநாதசாமி கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடியதேன்அபிஷேகம் நடந்தது.

    சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் சாட்சிநாதசாமி கோவில் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் விடிய,விடிய தேன் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய,விடிய தேன் அபிஷேகம் நடந்தது.

    இரவு முழுவதும் நடந்த தேன் அபிஷேகத்தில் தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் ஊற்றப்பட்டது. தேன் அபிஷேக முடிவில் இந்த திருமேனி செம்பவள நிறத்தில் காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.

    முன்னதாக சூரிய நாராயணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும், மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவது ஆன்மிகமே, அறிவியலே பட்டிமன்றம் ஆகியவை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×