search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநிலை ஆசிரியர்கள்"

    • ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
    • பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார் .

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

    கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்துக்கள் தெரிவிப்பதனையும் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்றிட வேண்டுமாய் இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனதில் ஆசிரியர்கள் என்றும் நீங்கா இடம் பெற்று இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ.44,042/- கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

    தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட 50,000 ஆசிரியர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் நமது கழக அரசு கால முறை ஊதியத்தினை ஒரே நாளில் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும், நமது கழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பல்வேறு நிலையில் தீர்த்து வைத்து ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    கல்வியாண்டின் இறுதி நிலையில் இருப்பதால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஆயத்தப்படுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு பணியில் கவனம் செலுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பணிபுரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர்கள் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தினைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
    • அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்
    • ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    உடுமலை:

    பதிவு மூப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

    இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அருண்குமார் மற்றும் மனோஜ் கூறியதாவது:-

    ஏற்கனவே, தி.மு.க.,வின், 311வது தேர்தல் வாக்குறுதியான, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் கட்டமாக சென்னையில், கோரிக்கை வெல்ல ஆயத்த மாநாடு நடத்தினோம்.இரண்டாவது கட்டமாக செப்டம்பர் 5-ந்தேதி முதல் வருகிற 27ந் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

    அதிலும், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என செப்டம்பர் 28-ந்தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தோம்.

    இந்நிலையில் கடந்த 14ந் தேதி ஒரு திருமண விழாவில்தமிழக முதல்வர் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மீதம் உள்ள ஒரு சதவீதமான மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்பட உள்ளதாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே உண்ணாவிரத போராட்டத்தை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டும் தனியாக பங்கெடுக்காமல் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×