search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நபி"

    • அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?
    • மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை.

    ஏக இறைவன் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்ட நல்லடியார்களின் விருப்பம் எதுவாக இருக்கும்?

    "இந்த உலக வாழ்க்கையின் நன்மைகளை விட மறுமை வாழ்க்கையில் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்று சொர்க்கத்தில் வாழ வேண்டும்" என்பது தான்.

    மனிதர்கள் விரும்பும் அந்த சொர்க்கத்தின் பாதை எளிதாக இருப்பதில்லை. இறைவனின் சோதனையுடன், உலக வாழ்வில் காணப்படும் தற்காலிக இன்பங்களின் சோதனைகளும் நிறைந்தது.

    அதே நேரத்தில் திருக்குர்ஆன் (2:286) குறிப்பிடுகின்றது: 'அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளை சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே'.

    இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், இறைவனிடம் இருந்து நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அவை நமது சக்திக்கு மீறியதாக இருக்காது என்பது இறைவனின் உறுதிமொழியாகும். எனவே நமக்கு இறைவன் தரப்பில் இருந்து வரும் சோதனைகளைக் கண்டு நாம் கலங்காமல் அந்த இறைவனிடமே சரண் அடைந்து அந்த சோதனைகளில் வெற்றி பெற வேண்டும்.

    திருக்குர்ஆன் வசனத்திலே, `யார் என்ன நன்மை சம்பாதித்தார்களோ அதன் பலன் அவருக்கே, அது போல அவர் தீமைகளை சாம்பாதித்திருந்தால் அதன் விளைவும் அவருக்கே' என்று அல்லாஹ் விளக்குகின்றான்.

    இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் நன்மைகள் செய்திருந்தால் அதன் பலனைக்கொண்டு நமக்கு வரும் சோதனைகளில் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் நாம் தீமைகள் செய்திருந்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளையாகும்.

    இறைவனின் தரப்பில் இருந்து வரும் சோதனைகளை வென்று வாழ்வில் முன்னேற விரும்பும் மனிதன், அந்த இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றது.

    "எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை குற்றம் பிடிக்காதே. எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தை சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றிகொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!".

    பாவம் செய்த மனிதர்கள் இறைவனிடம் சரண் அடைந்து வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தனது கருணை உள்ளத்துடன் மனிதர்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்று பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு விளக்குகின்றது:

    "நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலை செய்துவிட்டாலும், உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:17).

    மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 3:135).

    பாவமன்னிப்பு கேட்பவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்கின்றான். அதோடு அவர்களுக்கு சிறந்த நற்கூலியையும் அளிக்கின்றான். அது என்ன தெரியுமா? சொர்க்கம்.

    "இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் இருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது" (திருக்குர்ஆன் 3:136).

    'நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை விட்டு மீளுபவர்களை நேசிக்கிறான்'. (திருக்குர்ஆன் 2:222)

    'எல்லோரும் பாவம் செய்பவர்கள் தான். அவர்களில் சிறந்தவர் யார் எனில், தனது பாவத்திற்கு பரிகாரம் தேடுபவர்கள்தான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இறைவனின் நல்லடியார்களே, நாம் அல்லாஹ் காட்டிய வழியில், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். பாவங்களில் இருந்து விலகி நன்மைகளை செய்வோம். அறிந்தும் அறியாமலும் பாவம் செய்துவிட்டால், அதற்காக வருந்தி உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்போம். இதன் மூலம் நாம் சொர்க்கத்தின் பாதையில் நடைபோட முடியும்.

    • இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்.
    • ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம். உலக மக்களிடையே அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மார்க்கம் ஆகும்.

    உலக மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அநீதியுடன் நடப்பவர்களுக்கு மறுமை உலகில் காத்திருக்கும் தண்டனைகள் குறித்தும் திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக எச்சரித்துள்ளன.

    ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடம் நீதியாக நடக்க வேண்டும், அநீதியாக நடக்கக் கூடாது, பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றன.

    இதையே திருக்குர்ஆன் (5:2) 'இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்' எனக்கூறுகிறது.

    உனக்கு அநீதி இளைத்தவனுக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டவர் நபிகள் பெருமான். அவரது நபி மொழி இதோ:

    'உனது சகோதரன், அவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், அநீதி இளைத்தவனாக இருந்தாலும் சரியே அவனுக்கு நீ உதவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! பாதிக்கப்பட்டவனுக்கு உதவிபுரிவது சரி! ஆனால், அநீதி இளைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது?' என்று கேட்டனர். 'ஆம்! அநீதி புரிந்தவனை அதில் இருந்து தடுப்பதும் அவனுக்கு செய்யப்படும் உதவியாகும்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    பாதிக்கப்பட்டவனுக்கு நீதியை பெற்றுத் தருவது எப்படி உதவியோ, அதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தியவனை அந்த பாவத்தில் இருந்து நல் வழிப்படுத்துவதும் உதவியே என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக அநீதி இளைப்பவனுக்கு மேலும் அவன் அநீதிக்கு துணை புரிவது, உதவி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என இஸ்லாம் கூறுகிறது.

    'அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் அநியாயத்திற்கு எவன் துணை புரிகின்றானோ அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நபிமொழி)

    இந்த உலக வாழ்க்கையிலே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வியாபாரங்களில் அதிக அளவு ஏமாற்றுத்தனமும், அநீதியும் இழைக்கப்படுகிறது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரித்து கண்டிக்கிறது:

    "ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

    இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் இறைவனை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;

    இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;

    ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் இருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

    அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;

    ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282).

    மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் மூலம் வியாபாரத்திலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் நாம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். இதை நமது வாழ்வில் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீதியுடன் நடந்து இறையருள் பெறுவோம், வாருங்கள்.

    • நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்.
    • நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

    மனிதன் தன்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுவதை விட அடுத்தவர்களைப்பற்றி அறிந்து கொள்வதில்தான் அதிக நேரத்தை செலவளிக்கின்றான், அடுத்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது தவறல்ல ஆனால் அது நல்லுறவுக்காக இருந்தால் தான் நல்லது, அடுத்தவர்களின் ரகசியங்களை தெரிந்து கொண்டு புறம் பேசுவதற்காக இருந்தால் அது நல்லதல்ல.

    'யாரைப்பற்றியும் தவறான செய்திகளை என்னிடம் சொல்லாதீர்கள், நான் மன நிம்மதியுடன் இருக்கவே விரும்புகிறேன்' என்று நபிகள் நாயகம் சொன்னது அந்த அர்த்தத்தில் தான்.

    அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகின்றான்: 'விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களில்இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்; மேலும், உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள் பவன்; மிக்க கிருபை செய்பவன்' (திருக்குர்ஆன் 49:12).

    மேற்கண்ட இறை வசனம் சகமனிதர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு தெள்ளத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை பார்க்கத் தொடங்கும் போது தான் நம்மை அது புறம் பேசத்தூண்டுகிறது. எனவே அடுத்தவர்களின் நிறைகளை காண்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

    இதனால் தான் நபிகள் நாயகம் இப்படி சொன்னார்கள்: 'யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது அவர் வாய் மூடி இருக்கட்டும்' (நூல்: புகாரி, முஸ்லிம்).

    எனவே அடுத்தவர்களைப் பற்றி அவர் என்ன செய்கிறார், இவர் எங்கே போகிறார் என்று தேவையில்லாமல் துருவித்துருவி ஆராய்வது இறைவிசுவாசிக்கு நல்ல பழக்கமல்ல. சுப்யான் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் நபி களாரிடம், 'இறைத் தூதரே! நான் எதற்கு அதிகம் பயப்பட வேண்டும்? என்று கேட்ட போது, தமது நாவை பிடித்துக் காட்டி 'இதைத் தான்' என்று நபிகளார் சொன்னார்கள்'. (நூல்: திர்மிதி)

    பின்வரும் நபிமொழி உண்மையில் புறம் என்பது என்ன என்பதைப் பற்றி கூறுகிறது.

    அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:

    புறம் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, `அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் நன்கு அறிவார்கள்' என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபிகளார், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் `புறம்' என்றார்கள். நான் கூறுவது எனது சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார் 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லை என்றால் நீ அவனைப் பற்றி அவதூறு கூறுகிறாய்' என்றார்கள். (நூல்: முஸ்லிம்)

    எனவே நமது நண்பர்களிடம் குற்றங் குறைகள் இருந்தால் அவற்றை யாரோ ஒருவரிம் சொல்லிக் கொண்டிருக்காமல் குறையுடன் சம்பந்தப்பட்டவரையே நேரில் சந்தித்து அவரிடமுள்ள குறைகளை பக்குவமாக எடுத்துச் சொன்னால் நிச்சயம் அவர் ஏற்றுக்கொள்ளத் தான் செய்வார்.

    அந்தக் குறைகளை வேறு ஒருவரிடம் பேசும் போது அது தெரியாதவர்களுக்கும் தெரிய வருகிறது, நாளடைவில் அது வீட்டுச் சண்டையாகவும் சில நேரங்களில் ஊர்ச் சண்டையாகவும் கூடமாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தான் வாயை திறக்கும் விஷயத்தில் நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும், ஏன் நமது மண்ணறையிலும் கூட தொடரும் என்பதை பின்வரும் நிகழ்வு உணர்த்திக்காட்டுகிறது...

    இப்னு அப்பாஸ் (ரலி) சொன்னார்கள்: "நபிகளார் இரண்டு மண்ணறைகளைக் கடந்துசென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய பாவத்திற்காக இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது (மர்ம உறுப்புக்களை) மறைப்பதில்லை. மற்றொருவர், புறம் பேசித்திரிந்தார்" என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபிகளாரிடம் 'இறைத் தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்ட போது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் மண்ணறை வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று நபிகளார் கூறினார்கள்" (நூல்: புகாரி)

    புறம் பேசுவது என்பது எவ்வளவு கொடியது என்று இதன் மூலம் நாம் விளங்க முடிகிறது, ஆகவே தான் நபிகள் நாயகம் 'புறம் பேசுபவன் சுவனத்தில் நுழையமாட்டான்' என்று சொன்னார்கள். எனவே இனியேனும் நாம் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்த்து அறம் பேசுவோம். அது தான் இன்றைய அவசரத் தேவையும் கூட.

    வாருங்கள் புறம் பேசுவதை தடுப்போம்...! அறம் பேசுவதை தொடுப்போம்...!!

    • காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்.
    • அருட்பாக்கியங்களை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பெற வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்; இறைவனை துதித்த பிறகு காலையிலும், மாலையிலும் நாம் பெற வேண்டிய 6 அருட்பாக்கியங்களை பிரார்த்தனையின் மூலம் இறைவனிடம் கேட்டுப்பெற வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    `இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மாலைப்பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்'. (திருக்குர்ஆன் 30:17)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் காலைப்பொழுதை அடையும்போது, (இறைவனின் கிருபையால்) நாம் காலைப்பொழுதை அடைந்து விட்டோம். காலைப்பொழுது ஆட்சியும் அல்லாஹ்விற்கே. அவன் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். இறைவா, நான் உன்னிடம் இந்த நாளின் நன்மைகள் யாவையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் வெற்றியையும் வேண்டுகிறேன்.

    மேலும், இந்த நாளின் உதவியையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் அபிவிருத்தியையும் வேண்டுகிறேன். மேலும் இந்தநாளின் நேர்வழியையும் வேண்டுகிறேன்' என அவர் பிரார்த்திக்கட்டும். மேலும், 'இறைவா! இந்த நாளில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த நாளுக்கு பிறகு வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், அவர் மாலைப்பொழுதை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திக்கட்டும்'. (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்:அபூதாவூத்)

    ஒருவர் மாலைப்பொழுதை அடையும் போது, அவர் தமது மாலை நேரப் பிரார்த்தனையில், காலை என்பதற்குப் பதிலாக மாலை என்ற வார்த்தையை மொழிந்து கொள்ள வேண்டும்.

    `இறைவனின் கிருபையால் நாம் மாலைப்பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சியும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் அகிலங்களைப் படைத்து பராமரிப்பவன். இறைவா! நான் உன்னிடம் இந்த இரவின் நன்மைகள் யாவையும், இரவின் வெற்றியையும், இரவின் உதவியையும், இரவின் பிரகாசத்தையும், இரவின் அபிவிருத்தியையும், இரவின் நேர்வழியையும் வேண்டு கிறேன்.

    மேலும், இறைவா! இந்த இரவில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த இரவுக்கு பின்னால் வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என பிரார்த்திக்க வேண்டும்.

    இறைநம்பிக்கையாளரின் காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் நன்றாக அமைய வேண்டுமானால் அவர் இவ்வாறு இறைவனிடம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பிரார்த்திக்க வேண்டும்.

    வெற்றி: வெற்றி என்பது நமது நோக்கங்கள், நமது எண்ணங்கள், நமது எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியாகும்.

    வெற்றியும் - தோல்வியும் வாழ்வின் இருபக்கங்கள். எனினும் வெற்றி என்பது இனிமையானது.

    "நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் (2:189) குறிப்பிடுகிறது.

    உதவி: உதவி என்பது எதிரிகளுக்கு எதிராக நமக்கு சாதகமாக அமைந்து விடுவது. அநியாயக்காரன், அட்டூழியம் புரிபவன், அடக்குமுறை செலுத்துபவன், ஆதிக்க வெறியுடன் நடப்பவன், வரம்பு மீறி நடப்பவன் போன்றோருக்கு எதிராக நமக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி என்பது எதிரியின் சூழ்ச்சியை விட்டும், எதிரியின் சதியை விட்டும் நம்மைக் காப்பாற்றும். இதையே, "இறைவா!

    உன்னையே நாங்கள் வணங்கு கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்" என்று திருக்குர்ஆன் (1:5) கூறுகின்றது.

    பிரகாசம்: நமது அன்றாட வாழ்வு பிரகாசமாக, ஒளிமயமாக அமைய வேண்டுமானால் அந்நாளின் செயல்பாடும், அந்நாளின் அறிவும் சீராக அமைய வேண்டும்.

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பு வோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழி களைக் காண்பிக்கின்றான்.

    மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்" என்று திருக்குர்ஆன் (5:16) குறிப்பிடுகின்றது.

    அபிவிருத்தி: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வாதாரம் அபிவிருத்தியாக அமைந்துவிட்டால், நாம் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. அபிவிருத்தி என்பது பொருள் குறைவாக இருப்பினும் அதனால் ஏற்படும் பயன் அளப்பெரியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது நன்மை இருப்பது, அந்த நன்மை உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருப்பதாகும்.

    நேர்வழி: நேரான பாதையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வது, மனோ இச்சைகளை விட்டுவிடுவது பாக்கியமுள்ளதாகும். மேலும், இறைவனிடம் அனைத்து விதமான தீமைகள், தீங்குகள், சோதனைகள், குழப்பங்கள், நோய் நொடிகள், மனஅழுத்தங்கள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாவல் தேடி, அவற்றிலிருந்து விடுதலை கிடைத்தால் அந்நாளும் என்னாளும் பொன்னாளாகும்.

    இதையே திருக்குர்ஆன் (2:5) "இவர்கள் தான் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்" என்று குறிப்பிடுகிறது.

    நாமும் இறைவனின் வழியில் தினமும் காலையிலும், மாலையிலும் நடந்து, முறையாக இறைவனை வழிபட்டு, நன்மைகளைச்செய்து இறைவனின் அருட்கொடைகளை பெறுவோம்.

    • உறவுகள்-நட்பில் விரிசலுக்கு கோபமே காரணமாக அமைகிறது.
    • ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்.

    எப்போதும் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக இந்த உலக வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே மனிதர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. நினைத்தது நடக்க வேண்டும், விரும்பியது கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் பாதையாக இருக்கின்றது. அதேபோல இன்றைய மனிதன் தனது வெற்றிக்காக, மகிழ்ச்சிக்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எளிதில் கோபம் கொள்கிறான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட உணராமல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றான்.

    கோபம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக எடுத்துக்கூறி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களில் பிரிவு, உறவுகள்-நட்பில் விரிசல் போன்றவற்றுக்கு கோபமே காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே தான் கோபம் கொள்ளுதலை தவிர்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வற்புறுத்துகின்றன. அவற்றை காண்போம்:

    `இறை நம்பிக்கையாளர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்' (திருக்குர்ஆன் 42:37)

    `பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்'. (திருக்குர்ஆன் 3:134)

    கோபம் குறித்து நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய இந்த தகவல்கள் புகாரி நூலில் இடம்பெற்றுள்ளது. அவை:

    `மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அறிவுரை கூறினார்கள். அவர் 'அறிவுரை கூறுங்கள்' எனப் பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்'.

    கோபம் ஏற்படும் போது நாம் என்ன செய்யவேண்டும்

    `சுலைமான் இப்னு ஸுரத் (ரலி), நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், 'நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா?' என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். (நூல்: ஸஹீஹ் புகாரி)

    கோபத்தினால் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் அடியார்களே! அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று". (நூல்: ஸஹீஹ் புகாரி)

    கோபத்தில் இருந்து வெளியேறுங்கள்

    இறைத்தூதர் (ஸல்) "ஒருவர் தம் சகோதரரிடம் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். இவ்வாறு செய்யலாகாது. ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவர் ஆவார்". அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி).

    கோபம் ஏற்படும் போது செய்ய வேண்டியது:

    உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: ஸுனன் அபூதாவூத்)

    "நிச்சயமாக கோபம் ஷைத்தானின் குணம். ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி) நூல்: ஸுனன் அபூதாவூத்).

    இறைவனின் நல்லடியார்களே, கோபத்தை கைவிடுவோம், சாந்தியையும், சமாதானத்தையும் பரப்புவோம்.

    • இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம்.
    • மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன.

    இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம். உலகில் பல்வேறு சிந்தனையோட்டங்கள், சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிகள் இருந்தாலும் அத்தனையும் மனிதர்களால் இயற்றப்பட்ட அல்லது மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் அருளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தீர்க்கமான, தெளிவான, துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வாழ்வியல் நெறி ஏக இறைவன் அல்லாஹ்வால் அருளப்பட்டது.

    ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பதை இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் போதித்ததோடு மட்டுமின்றி அத்தகைய ஒரு சமுதாயத்தையும் உருவாக்கிக் காட்டினார்கள்.

    `பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்' என்று மக்களிடம் உபதேசம் செய்ததுடன் அத்தகைய வாழ்வை வாழ்ந்துகாட்டி `உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே, உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவன்' என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.

    பெண்களின் மானம், மரியாதைக்கு இஸ்லாம் மிக முக்கியத்துவம் வழங்குகிறது. இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றதல்ல. இஸ்லாம் இயல்பாகவே இந்த உரிமைகளை, சலுகைகளாக வழங்காமல் கடமையாகவே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சிறிய பெரிய பிரச்சினை களுக்குக் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதை நபிகளாரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு மூலம் அறியலாம்.

    மதீனாவில் இருந்து மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் சென்றனர். அப்போது அவர்களை தடுத்து எதிர்த்த குறைஷிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் `இந்த ஆண்டு உம்ரா செய்ய அனுமதி இல்லை' என்று மறுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையைப் பேணும் விதத்தில் உம்ரா செய்யாமலேயே திரும்பிவிட முடிவு செய்தார்கள். தோழர்கள் உம்ரா செல்லாமல் மதீனா திரும்பி செல்ல தயங்கினார்கள்.

    இந்த சூழலில் நபி (ஸல்) அவர்கள், தம் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசித்தார்கள். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் தமது பலிப்பிராணியை முதலில் அறுத்துவிட்டு தலை முடியை மழித்தபோது, அதுவரை தயங்கி நின்ற தோழர்கள் மறு விநாடியே தாங்களும் அவ்வாறே செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள். பெண்களின் ஆலோசனைக்கும், அறிவுக்கும், கருத்துக்கும் இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    பெண் பாதுகாப்பு

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் இஸ்லாம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக, அநீதியாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது. எவர்கள் கற்பில் சிறந்த பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும் (இதன்பின்) ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள் தான் பாவிகள். (திருக்குர்ஆன் 24:4)

    `நிச்சயமாக எவர்கள் இறை நம்பிக்கையாளர்களான களங்கமற்ற கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுவிட்டனர். அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு". (திருக்குர்ஆன் 24:23)

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது: 'இன்னும் திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவருடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்கள் சம்பாதித்தவைக்கான கூலியாக, மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவுள்ளோனும் ஆவான்'. (திருக்குர்ஆன் 5:38)

    பொருளீட்டுரிமை

    சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.

    `பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. அவ்வாறே, பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு' என்று திருக்குர்ஆன் (4:7) குறிப்பிடுகிறது.

    அன்னை கதீஜா (ரலி) அவர்கள் சிறப்புக்குரிய பெரும் வணிகராகத் திகழ்ந்தார். தோலை பதனிட்டு அவற்றில் வண்ணங்களை ஏற்றித்தரும் தொழில் செய்தார். கிடைத்த வருவாயில் பெரும்பகுதியை இறைவனின் பாதையில் செலவிட்டார். இதன் மூலம் பெண்களும் பொருளாதாரத்தை ஈட்டவும் செலவழிக்கவும் உரிமை படைத்தவர்கள் என இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி.
    • நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே

    ஓய்வு என்பது, தற்காலிக ஓய்வு, நிரந்தரமான ஓய்வு என இரு வகைப்படும். ஓய்வு என்பதன் பொருள்: 'தொடர்ச்சியான, ஒரு செயலில் இருந்து விடுபடுவது' என்பதாகும். இந்த விடுபடுதல் என்பது தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.

    நாம் ஈடுபடும் செயலில் இருந்து சிறிது நேரம் நம்மை விடுவித்து களைப்பாறுதல். நமது அன்றாட பணியின் வேலைப்பளு தாக்கத்தில் இருந்து தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள இளைப்பாறுதல். ஒருநாள் தொடர் வேலையில் மத்தியப்பகுதியில் சற்றுநேரம் அவகாசம் எடுத்துக் கொண்டு தளர்வை போக்க ஓய்வு பெறுதல். நோயில் இருந்து உடல் விடுபட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமுறை ஓய்வு, இவையாவும் தற்காலிக ஓய்வுகளாகும்.

    இன்னும், சில ஓய்வுகள் நிரந்தரமானதாக அமைந்துவிடுகிறது. அது, பணிநிறைவு எனும் ஓய்வு. அடுத்தது, வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விடுபட்டு, இயற்கை எய்தி இறைவனடி நிழலில் இளைப்பாறுதலாகும்.

    'நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது இவர் பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்' என்றார்கள்.

    மக்கள் 'இறைத்தூர் அவர்களே, ஓய்வு பெற்றவர், அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும்போது இவ்வுலகத்தின் துன்பத்தில் இருந்தும், தொல்லையில் இருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார்.

    பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடம் இருந்து மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: புகாரி)

    'ஒருமுறை, ஒரு பிரேதத்தை கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றி மக்கள் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள். மற்றொருமுறை வேறொரு பிரேதத்தை கடந்து சென்றபோது, மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசினார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது' என்றார்கள்.

    உடனே உமர் (ரலி), 'எது உறுதியாகி விட்டது?' என்று கேட்டதும், நபி (ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறி புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. மற்றவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள், எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் இறைவனின் சாட்சிகளாவீர்கள்' என்று கூறினார்கள்.

    (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி) மக்களிடம் நல்லவிதமாக நடந்து, நல்லதை செய்து, இவர் நல்லவர் என்று மக்களிடம் நற்பெயர் பெற்றால் போதும், அவருக்கு சொர்க்கம் உறுதி. மக்களிடம் மோசமாக நடந்து, மோசடி செய்து, கெட்டபெயர் பெற்று, கெட்டவன் என்று மக்கள் இகழ்ந்தாலே போதும், அவருக்கு நரகம் உறுதி.

    ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அநியாயத்திலும், அட்டூழியத்திலும், கொடுமைப்படுத்துவதிலும் பிரபலமாகத் திகழ்ந்தான். அப்துல்லாஹ் பின் சுபைர், ஸயீத் பின் சுபைர் போன்றோரை ஈவு இரக்கமின்றி கொன்றான். இறுதியில் அவன் நோய்வாய்ப்பட்டான். நோயின் வேதனை தாங்கமுடியாமல் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் உதவியும், நிவாரணமும் வேண்டினான். அதற்கு ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் 'நல்லவர்களுக்கு நீ கெடுதல் செய்யாதே, என நான் உன்னைத் தடுத்தேன்.

    இப்போது நீ கடும் சிரமத்தில் மாட்டிக்கொண்டாய்' என்றார். அதற்கு ஹஜ்ஜாஜ் பின் யூசுப் 'ஹஸனே! என்னிடமிருந்து கடும் சிரமம் நீங்கிவிட இறைவனிடம் பிரார்த்திக்கும்படி நான் உம்மை வேண்டிக் கொள்ளவில்லை. மாறாக, எனது உயிர் சீக்கிரமாக கைப்பற்றப்பட வேண்டும் எனவும், எனக்கு ஏற்படும் வேதனை நீடிக்கக்கூடாது எனவும் தான் நான் உம்மை வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

    ஹஜ்ஜாஜ் இறந்தபோது, அந்த செய்தியை அறிந்த மக்கள் வீதிக்கு வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மஃமூன் இறந்தபோது இமாம் அஹ்மது (ரஹ்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். தன்னை நபி என்று வாதிட்ட பொய்யன் முஸைலமா கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) இறைவனுக்கு தலைவணங்கி, சிரம் தாழ்த்தி நன்றி கூறி மகிழ்ந்தார்.

    நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும். நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்.

    ×