என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைபராமரிப்பு"
- குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
களங்கமற்ற உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் `குழந்தைகள்'. அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. எல்லா பெற்றோருமே குழந்தைகளுக்கு எல்லா விஷயத்திலும் சிறந்ததையே வழங்க விரும்புகிறார்கள்.
ஆனால் குழந்தைகள் சேட்டை செய்யும்போதோ, சொல் பேச்சை கேட்காமல் இருக்கும்போதோ அதிக கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அப்படி நடந்து கொள்வது நல்லதல்ல.
குழந்தைகள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான கண்டிப்புகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் நீண்டகால மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான ஆய்வுக்கு, கண்டிப்புக்கு உள்ளான 7 ஆயிரத்து 500 குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கேம்பிரிட்ஜ் மற்றும் டப்ளின் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் அதிக கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஒன்றரை மடங்கு அதிகமாக மனநலம் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் மூன்று, ஐந்து மற்றும் ஒன்பது வயது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தின் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். அதில் 10 சதவீதம் குழந்தைகள் மோசமான மனநலம் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் கீழ்ப்படியாதபோது அவர்களை தனிமைப்படுத்துவது, கடுமையான தண்டனைகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்குகிறது.
பெற்றோர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிக்கும்போது அவர்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
கடுமையாக தண்டிக்கும் பெற்றோரிடத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தம் நிறைந்த சூழலில்தான் வாழ்கிறார்கள்.
இதன் காரணமாக குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, இந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்காக பெற்றோரிடம் இருந்து விலகி செல்ல முடிவு எடுக்கின்றனர்.
வீட்டில் மன இறுக்கமாக இருப்பதால் பொதுவெளியிலும், நண்பர்கள் மத்தியிலும் மன இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்துகின்றனர். கண்டிப்பான பெற்றோர்களால் சுயமரியாதையை இழந்தவர்களாக உணருகிறார்கள்.
அதிக கடுமையான விதிகள் பெற்றோர்-குழந்தை உறவுகளை சீர்குலைத்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை தடுக்கின்றன.
கல்விக்காக பெற்றோர்கள் அதிக அழுத்தம் கொடுக்கும்போது, அது குழந்தைகளின் மன நலனை பாதிக்கிறது. பெற்றோருக்கு பயந்து படிப்பது குழந்தைகளின் கல்வித்திறன் குறைவதற்கு வழிவகுக்கிறது.
கண்டிப்பான பெற்றோர் குழந்தைகளை சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அது அவர்களின் கனவுகளையும், படைப்பாற்றலையும் பாழ்படுத்திவிடும். இதனால் சின்ன பிரச்சனையை சந்தித்தால் கூட எவ்வாறு முடிவு எடுப்பது, எப்படி தீர்வு கண்டுபிடிப்பது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.
அதற்கு பதிலாக குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கனிவுடன் வழி நடத்தி அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக அமையும். மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
அவ்வாறு செய்யும்போது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறிவிடுவர். அதிக கட்டுப்பாடுகளுக்குள் உள்ளாகும் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை கையாள இயலாமல் மன விரக்திக்கு உள்ளாகின்றனர்.
குழந்தைகளின் மூளை செயல்பாடுகள் பெற்றோருடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் உருவாகின்றன. அதனால் பெற்றோர் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்த வேண்டும். அன்பு, அக்கறை, சுதந்திரம் ஆகியவற்றை கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். நம் குழந்தைகள் ஒழுக்கமானவர்களாக வளர வேண்டுமெனில், நாமும் அவ்வாறு இருக்க வேண்டும்.
எதிர்மறையான அணுகுமுறையை மாற்றி ஆதரவு, ஊக்கம் மற்றும் நேர்மறையான தகவல்தொடர்பு ஆகியவற்றுடன் ஒழுக்கம் நிறைந்த சூழலில் குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்.
பெற்றோர்களாகிய நாம், குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் நண்பர்களாக மாறுவோம். குழந்தைகளுடன் பாதுகாப்பான உறவை வளர்ப்பது நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய மதிப்புமிக்க பரிசாகும்.
- தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
- குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம்.
ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவே முனைப்பு காட்டுகிறார்கள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. அது அவர்களை மன ரீதியாக பலவீனமாக்கிவிடும். என்னென்ன வார்த்தைகளை கூறி குழந்தைகளை திட்டக்கூடாது என்று தெரியுமா?
'உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை'
குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அசட்டையாக இருப்பது, அவர்களின் கருத்துக்களை நிராகரிப்பது, தான் குடும்பத்தில் முக்கியமில்லாத நபராக, சுமையாக இருப்பவராக குழந்தைகளை சிந்திக்க வைத்துவிடும். தங்களை ஆதரவற்றவர்களாக எண்ணக்கூடும்.
'நீ புத்திசாலி என்று உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்குரிய தகுதி உனக்கு இல்லை'
உன்னை அதிபுத்திசாலி. எந்த பிரச்சனையையும் எளிதாக சமாளித்துவிடுவாய். அறிவாளி என்று நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி முட்டாளாக இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை.
உன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தையின் தன்னம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
'நீ புத்திசாலி இல்லை'
குழந்தையின் அறிவுத்திறன் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை பாதிக்கக்கூடும்.
'நீ அவரை போன்றவர். எதற்கும் உதவ மாட்டாய்'
குடும்பத்தில் எவருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பப்படி செயல்படும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டு, 'நீயும் அவரை போன்றுதான் எதற்கும் உதவ மாட்டாய்.
நீ வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்தான்' என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் கூறக்கூடாது. அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
'நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்'
குழந்தையை தொந்தரவு செய்பவர், எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் போல் சித்தரித்து பேசுவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தவறான வழிக்கு செல்வதற்கு வழிவகை செய்துவிடும்.
'நீ எதற்கும் தகுதி இல்லாதவன்'
உன்னிடம் எல்லா திறமையும் இருக்கிறது. எதையும் சிறப்பாக செய்துவிடுவாய் என்று எண்ணி இருந்தேன். உன்னால் சின்ன விஷயத்தை கூட எளிதாக கடந்து வர முடியவில்லை.
எதற்கும் தகுதி இல்லாதவன் என்று கூறி திட்டக்கூடாது. அது குழந்தை தன்மீது கொண்டிருக்கும் சுய நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கிவிடும். தான் எந்த தகுதியும் இல்லாதவன் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
'நீ அந்த குழந்தையை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம். அந்த குழந்தையை பார். எப்படி நன்றாக படிக்கிறது. நல்ல திறமைசாலியாகவும் இருக்கிறது.
அந்த குழந்தையை போல் நீயும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என கூறி மன நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அது அவர்களின் சுய மதிப்பை குறைத்துவிடும். தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு எந்த முயற்சியிலும் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிட நேரிடும்.
'உன்னால் ஏன் உன் சகோதர, சகோதரிகள் போல் இருக்க முடியவில்லை'
உடன் பிறந்தவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுவது போட்டி மனப்பான்மையையும், பொறாமை உணர்வையும் உருவாக்கிவிடக்கூடும். எப்போதும் சண்டையிடும் மனோபாவம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடும்.
'அழுவதை நிறுத்து. அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை'
செய்த தவறுக்கு மனம் வருந்தி குழந்தை அழும்போது கடுமையாக பேசக்கூடாது. அது குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாமல் வசைபாடுவது போலாகிவிடும். தன் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்று வேதனைப்படுவார்கள்.
- உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
- எந்த வேலையும் செய்ய முடியாத சோர்களை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.
செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.
நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம்.
- பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாவார்கள்.
பிஸியான வாழ்க்கை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த போதுமான நேரம் கிடைப்பதில்லை. பல நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக பல வகையான உணவுகளை வயிறு நிரம்பினால் போதும் என கொடுக்கிறார்கள்.
இந்த உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர, குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க சில வகை உணவுகளை மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துரித உணவுகள்
இன்றைய குழந்தைகள் பர்கர், பீட்சா, பிரஞ்சு பிரைஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்கின்றனர். இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை நோய், சோர்வு போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்த உணவுகள் குழந்தைகளின் மூளையில் ஆரோக்கியமான உணவை மறக்கடிக்கிறது.
இனிப்பு பானங்கள்
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பானங்களில் இனிப்புச் சுவைக்காக இயற்கையான சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு பல் சிதைவு, எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்நாக்ஸ்
சிறு குழந்தைகள் குக்கீகள், சாக்லேட்கள் மற்றும் இனிப்புகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இந்த விஷயங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குழந்தைகளின் எடையை விரைவாக அதிகரிக்கின்றன. இதுபோன்ற உணவுகள் குழந்தைகளின் செரிமானத்தை மோசமாக பாதிக்கிறது. அதேபோல் இது போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைகளின் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளுக்கு ஒருபோதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உப்பு நிறைந்த உணவுகள்
சந்தையில் பல வகையான தின்பண்டங்கள் கிடைக்கின்றன, அவற்றில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த உணவுகள் குழந்தைகளுக்கு சுவையாகத் தோன்றினாலும், அவற்றை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பன்மடங்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்கு சந்தையில் கிடைக்கும் சிப்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருமுறை என்றுகூட கொடுக்க வேண்டாம், காரணம் இந்த சுவை குழந்தைகளிடம் தொற்றிக் கொண்டால் அதை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.
- இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன.
- அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.
இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன. மொபைல்போன் இல்லாத வாழ்க்கை பலருக்கு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் தம்முடன் எடுத்துச்செல்லும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.
நம்மில் பலர் தூங்கும்போது கூட மொபைல் போன்களை பக்கத்திலேயே வைத்திருப்போம். இந்த ஸ்மார்ட்போன் மோகம் குழந்தைகளையும் விட்டுவைக்க வில்லை. சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களில் சிக்கிக்கொள்ளும் அவலநிலையே இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்பில் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வது, பேஸ்புக்கில் இடுகைகளை இடுவது, யூடியூப்பில் வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் எடுப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்று குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் தான் அவர்களைது நேரத்தை செலவிடுகின்றனர்.
ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அது அதிகம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையே கொண்டுள்ளது.
மொபைல் போன்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது. மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அவர்களது மூளையை பெரிதும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மொபைல் போன்களை அதிகநேரம் பயன்படுத்துவது, தூங்கும் போது அருகில் வைத்திருப்பது ஆகியவற்றால் அவர்களின் மூளை பாதிக்கப்படும்.
மேலும் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அவர்களின் கண்களும் பாதிக்கப்படுகின்றன. மொபைல் போன் திரைகளை நீண்டநேரம் வெளிப்படுத்துவது நம் கண்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடுமையான கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வீடியோ கேம்களை நீண்டநேரம் விளையாடும் போது விழித்திரை பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கண்களில் விரும்பத்தகாத தாக்கங்களை உண்டுபண்ணுகிறது.
உட்கார்ந்த நிலையிலேயே இருந்து செல்போன் கேம் விளையாடுவதால் அவர்களின் முதுகெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விடுவதால், படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது குறைவு. இது அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் டிஜிட்டல் அடையாள மோசடி, சைபர்புல்லிங், ஃபிஷிங், மால்வேர் போன்ற பல்வேறு சைபர் கிரைம்களுக்கு ஆளாகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் குழந்தைகளின் நுட்பமான மனதில் ஆழ்ந்த மன, உடல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.
இணைய உலகம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றது. உலகளவில் பொருளாதாரங்கள் கட்டுப்பாடுகளுடன் வரும் அதே வேளையில், இணையத்தில் உள்ள உள்ளடக்கம் இன்னும் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாகவே உள்ளது. இது குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான வன்முறை, போலிச் செய்திகள், ஆபாசப் படங்கள் மற்றும் பிற பொருத்தமற்ற காட்சிகள் அல்லது செய்தி அனுப்புதல் ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கம் குழந்தைகளின் நுட்பமான ஆன்மாவில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவுகள் அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையில் அழியாத வடுக்களை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் யோசித்து செயல்படுங்கள்.
- புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை.
- சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.
புத்தகங்களை படிக்கும் குழந்தைகள் இயல்பாகவே அறிவுத் திறனையும், கற்பனை ஆற்றலையும், நினைவாற்றலையும் பெற்று விடுகின்றனர். இத்தகைய ஆற்றலால் பள்ளிப் பாடங்கள் படித்தல் கூட எளிதாக வசப்பட்டு விடுகிறது.
படிக்கும் போதே மகிழ்ச்சியைத் தருவது புத்தகங்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் பாத்திரங்களை மனதில் காட்சிப் படுத்தும் போதே கற்பனைத் திறன் விரிவடைகிறது.
மனம் சோர்ந்திருக்கும் போது ஊக்கத்தை தருவதும் புத்தகங்கள் தான். அறம் சார்ந்த சிந்தனைகளையும் சமூகம் சார்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முயல்வதும் புத்தகங்கள் தான்.
ஒரு குழந்தையை நேர்மையான வழியில் நடக்க வைப்பதற்கும், சிறந்த சமூக செயற்பாட்டாளானாக அவனை உருவாக்குவதிலும் புத்தகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
புத்தகங்களைப் போன்ற சிறந்த வழிகாட்டி எதுவும் இல்லை. நல்ல நண்பனாக நம்முடன் பயணிப்பவை புத்தகங்கள். நம் சிந்தனையைத் துாண்டவும், சிந்தனையை புதுப்பிக்கவும் உதவுவது புத்தகங்கள்.
நம் மனதை உழுது, அதில் நல்ல பண்புகளை விதைப்பது புத்தகங்கள். சிறந்த வாசிப்பாளனால் மட்டுமே சிறந்த எழுத்தாளானாக முடியும்.
எனவே பெற்றோர்கள் புத்தகங்களை வாசிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் பற்றி கலந்துரையாடுங்கள். குழந்தைகளின் பிறந்த நாளில் புத்தகங்களை பரிசளியுங்கள். கதைகளை படிக்கும் குழந்தைகளை பின்னர் அந்த கதையை கூறச் செய்யலாம்.
கதை சொல்லிகளாக இருந்த பாட்டிகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை குழந்தைகளைக் கொண்டு நிரப்புங்கள். பின்னாளில் அவர்களை சிறந்த கதை சொல்லிகளாக உருவாக்கும் நல் வாய்ப்பை புத்தகங்கள் வழங்குகின்றன.
முதலில் பெற்றோர் முன்னுதாரணமாக இருந்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அப்பழக்கம் இயல்பாக மாறிவிடும்.
தேடலை உருவாக்கி அவர்களின் சிந்தனைகளைத் துாண்டிவிடும். புத்தகங்களைப் படிக்கும் போது அவை நம்மை அந்த காலத்திற்கே கடத்திச் செல்லும். இயற்கை காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். வரலாற்றுக் காலத்தின் சுவடுகளில் அவர்களை பதிய விடும்.
- குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
- மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.
மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.
பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.
குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.
அறிகுறிகள்:
* மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.
* மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.
* மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.
* மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.
* குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.
* கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.
* கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.
மலச்சிக்கல் உண்டாக காரணம்:
* குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.
* தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.
* திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.
* மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.
- குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது நல்லது.
- குழந்தைகளுக்கு நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பது பெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்புச் சத்தும் குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.
குழந்தைகளிடம் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். மண்பானை தண்ணீருடன் வெட்டிவேர், நன்னாரி வேர், சப்ஜா விதைகளை சேர்த்தால் நீரின் சுவை, மணம் கூடும். இது இயற்கையான முறை தான். தண்ணீர் குளிர்ந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி அருந்துவர். இதன் மூலம் உடல்உஷ்ணத்தை தவிர்க்கலாம்.
உணவில் நீர்சத்து அதிகம் உள்ள சவ்சவ், பீர்க்கங்காய், சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம். வெயில் மதியம் 1 முதல் மாலை 4 மணிவரை அதிக பாதிப்பை தரும். இந்த நேரத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பினால், சூரிய ஒளியுடன் யு.வி., கதிர்கள் கலந்து உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே நிழலில் விளையாடும் கேரம் போர்டு, தாயம், பல்லாங்குழி, டேபிள் டென்னிஸ், செஸ் இவைகளை விளையாடலாம்.
குழந்தைகள் கோடையில் பருத்தி ஆடைகள் உடுத்துவது நல்லது. தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கச்செய்ய வேண்டும். ஆண் குழந்தைகள் வாரம் இரு முறையும், பெண் குழந்தைகள் 2 நாட்களுக்கு ஒரு முறையும் தலைக்கு குளித்து வந்தால், உடல் உஷ்ணத்தை தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் தேவையான அளவு வெந்தயம், வெட்டிவேர் ஊற வைத்து 15 நிமிடம் கழித்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
- மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன.
- கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை.
குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி இது.
மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.
தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. நாம் பார்த்தவை, நமக்குள் நடப்பவை, சில சமயம் நமக்குள் எழுகிற கனவுகள்கூட கதைகளாக மாறுகின்றன.
எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.
ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்? அவர்களையே அந்த புத்தகத்தை படிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத்திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.
தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ உதவி செய்யும் எல்லா உயிர்களையும் நேசிக்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றன. எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.
அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.
உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர் கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
அதில் வாழ்வியல் போதனைகளை வழங்கும் கதைகளை குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் சொல்லலாம். கதைகள் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பக்குவமிக்க மனிதர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
- சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.
இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.
மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.
கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.
ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.
இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.
- சிப்ஸ் குழந்தைகளை அதிகம் கவர்கிறது.
- சிப்ஸ் கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள்.
கவர்ச்சிகரமான 'பேக்கிங்'கில், மொறு மொறு சுவையுடன் வரும் 'சிப்ஸ்',' குழந்தைகளை அதிகம் கவர்கிறது. பிள்ளைகள் நச்சரிக்கிறார்கள் என்று பெற்றோரும் அவர்களுக்கு அடிக்கடி 'சிப்ஸ்' வாங்கி கொடுக்கிறார்கள். இது சரியா? அடிக்கடி 'சிப்ஸ்' கொறிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்று தெரியுமா?
பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரெஷ்சாக இருக்க அதில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும், 'சிப்ஸ்' தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சிப்சில் உள்ள டிரான்ஸ் பேட், கொலஸ்டிராலை அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி சிப்ஸ், உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளின் எடை கூடும். உடல் பருமன் பிரச்சினை உண்டாகும்.
அதுபோல் சிப்சில் கலோரிகள் அதிகம். எனவே இதை குழந்தைகள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதோடு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினைகளை உண்டாக்கலாம், இன்னும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்துக்கு உள்ளாகலாம். அவர்களுக்கு பிற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சினையை உண்டாக்கலாம்.
அதுபோல குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம்.
இவ்வளவு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய சிப்சை நமது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாமா என்று அடுத்தமுறை ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்திடுங்கள்.
- காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம்.
- தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை மதிப்பீடு செய்யாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் ஆசிரியர் அல்ல. நீங்கள் பெற்றோர்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். குறை சொல்லுதல் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டாம். அவர்கள் தானாக வளருவார்கள்.
கடிகாரம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் நாட்கள் நகர்ந்துகொண்டு தான் இருக்கும். அதனால் காலம் சென்ற பின்பு கடமைகளை செய்வது இயலாத காரியம். இவ்வாறாக ஒரு பழமொழி சொல்வார்கள். `கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே'
மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தையும், ஆயுளையும் கண்ணியமாக செய்து முடித்து விட வேண்டும். அப்போது வெற்றி தேடி வரும். இவை அனைத்தும் வரும் போது மிகுந்த நன்றி உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சம் மாணவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து விடும். அகிலம் என்னும் இந்த அண்டத்தில் மாணவர்கள் திறன் நிறைந்த மாணவர்களாக வளர மிகுந்த ஆற்றலும், அறிவும், ஞானமும், தொடர்ச்சியான, செய்முறையும், படித்தலும், எழுதுதலும், பேசுதலும், கேட்டலும், அனைத்து மொழித்திறன் களையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உடல் நலமும், சத்தான உணவு முறையும், நேர்மறையான சிந்தனையும், சமுதாயத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை சூழலோடு இணைந்த பள்ளிக்கூடம், அதனோடு இயற்கை அன்னையை போன்ற அன்பான பாகுபாடின்றி அனைத்து மாணவர்களையும் தங்கள் பிள்ளைகள் போன்று அரவணைக்கும் அறிவும் ஞானமும் நிறைந்த ஆசிரியர்கள் உள்ளனர்.
உள்ளத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் அறிவு பூர்வமாக சிறப்பாக விடை கண்டு உங்களிடம் மறைந்து கிடக்கும் திறன்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து கண்டறிந்து தனித்திறமை கொண்ட ஆசிரியர்கள் உதவியோடு வளர்க்க வேண்டும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
என்று பொது மறை நூலில் ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் உயிரை விட சிறந்ததாக போற்றப்படும் என வள்ளுவர் சொல்கிறார்.
முதல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது பள்ளிக்கூடம். இங்கு சிறப்பான, மேன்மையான, பண்பான ஒழுக்கத்தை காத்து கொள்ளுங்கள். அதனால் தான் உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்