search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்பு வகைகள்"

    • விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது.
    • பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் 30 விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாதந்தோறும் சராசரியாக 2.8 லட்சம் பயணிகள் பயணம் சென்று வருகின்றனர்.

    இந்த விமான நிலையத்தில் இருந்து பெரும்பாலும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தான் அதிகமாக கையாளப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் 936 டன் சரக்குகள் கையாளப்பட்டன. அதேபோல ஜூலையில் 1079 டன், ஆகஸ்டு மாதத்தில் 1239 டன் என்ற அளவில் சரக்குகள் கையாளப்பட்டன. அதாவது கோவை விமான நிலையத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 100 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கோவையில் இருந்து விமானம் வாயிலாக 3 டன் இனிப்பு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 டன்களுக்கும் அதிகமான இனிப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக உணவுப்பொருட்கள்தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. பண்டிகை என்பதால் உள்நாட்டு பிரிவில் இருந்து இனிப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
    • கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும்.

    இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலும் பண்டிகை தினங்களில் மட்டுமே இந்த கும்மாயம் செய்யப்படும். இந்த கும்மாயம் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் ஒரு பாரம்பரிய செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு உணவு.

    கும்மாயம் என்பதற்கு குழைய சமைத்த பருப்பி என்று பொருள். உளுந்து, பாசிப் பருப்பு, நெய், பனங்கருப்பட்டி, ஆகியவை சேர்த்து வேகவைத்து செய்யப்படும் இனிப்பு பலகாரம் ஆகும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் செய்துவிடலாம். இந்த தீபாவளிக்கு நீங்களும் உங்களது வீட்டில் கும்மாயம் செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    உளுந்து- 100 கிராம்

    பச்சரிசி- 50 கிராம்

    பாசிப்பருப்பு- 25 கிராம்

    நெய்- 150 கிராம்

    வெல்லம் அல்லது கருப்பட்டி- 150 கிராம்


    செய்முறை:

    முதலில் பாசிப்பருப்பு, உளுந்து, பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியாக கடாயில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வறுத்து வைத்துள்ள ஒவ்வொன்றையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதனை வடிகட்டி பாகு காய்ச்ச வேண்டும்.

    நெய்யில் வறுத்து வைத்துள்ள மாவை தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கடைத்துக்கொள்ள வேண்டும். கரைத்து வைத்திருக்கும் மாவை கொதிக்கும் வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும்.

    கிண்டும் போது கட்டியாகாமல் இருக்க இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவு நன்றாக வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்க வேண்டும்.

    சுவையான கும்மாயம் ரெடி. வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடிவிடும். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் புடிக்கும்.

    • இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    வட்டலப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் பால், வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.

    இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    தேங்காய்ப்பால்- 1 டம்ளர்

    முட்டை- 10

    ஏலக்காய்ப்பொடி- சிறிது

    முந்திரிப்பருப்பு- 15

    பாதாம் பருப்பு- 10

    உலர் திராட்சை- 15

    சர்க்கரை- 400 கிராம்

    நெய்- 1 தேக்கரண்டி

    செய்முறை

    முதலில் 10 முட்டைகளை மிக்சியில் அடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி, பொடித்துவைத்துள்ள சர்க்கரை மற்றும் தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவிவிட்டு அதில், இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி, அதினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நெய் தடவி வைத்த பாத்திரத்தை குக்கருக்குள் மூடி போடாமல் வைக்க வேண்டும். குக்கரை மூடி 30 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை மேலே தூவி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.

    • பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள்.

    பண்டிகையில் இனிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி மகிழ்வார்கள். பண்டிகை நாட்களை தித்திக்க வைக்கும்படி, பரவலாக ருசிக்கப்படும் இனிப்பு பலகாரங்கள் உங்கள் பார்வைக்கு...

    குலாப் ஜாமூன்:

    சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு பலகாரம் இது. பாலை மிதமான சூட்டில் நீண்ட நேரம் கொதிக்கவிட்டு, அதனை சுண்ட வைத்து அதில் மைதா மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும். பின்பு அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து ருசிப்பர். இப்போது குலாப் ஜாமூன் மாவு கடைகளில் கிடைக்கிறது. அதனை கொண்டு சுலபமாக தயாரித்து ருசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பால் பேடா:

    பால், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் இது பண்டிகை காலங்களில் ருசிக்கப்படும் பலகாரங்களில் தனித்துவமானது. வட்ட வடிவில் இருக்கும் இதனை சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பால் பேடா செய்வதற்கு சுமார் 2 மணி நேரமாகும். ஒரு லிட்டர் பாலை பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    பால் பாதியாக குறைந்ததும் 100 கிராம் சர்க்கரை, அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் சேர்க்கவும். பால் நன்றாக சுண்டி, பாத்திரத்திலேயே தனியாக திரண்டு வரும். அப்போது மிக குறைந்த தீயில் வைத்து இறக்கவும். கோவா கையில் ஒட்டாத பதத்தில் இருக்க வேண்டும். அதனை சிறு உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவத்தில் அலங்கரித்து ருசிக்கலாம்.

    காஜு கத்லி:

    முந்திரி பர்பி என்றும் அழைக்கப்படும் இது முகலாய காலத்தை சேர்ந்தது. காஜு என்றால் முந்திரி என்றும், பர்பி என்பது பாலுடன் சர்க்கரை, குங்குமப்பூ போன்ற மசாலா பொருட்கள் கலந்து கொதிக்கவைத்து கெட்டி பதத்துக்கு மாற்றுவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இது வைரத்தை போன்று வெட்டி பரிமாறப்படுவதால் வைர வடிவ இனிப்பு பலகாரமாகவும் காட்சி அளிக்கிறது.

    ஜிலேபி:

    மைதா, கடலை மாவு, சர்க்கரை, நெய், குங்குமப்பூபோன்றவை கொண்டு தயாரிக்கப்படும் ஜிலேபி சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி ருசிக்கும் பலகாரமாக இருக்கிறது. முறுக்கு போன்று சுருள் வடிவில் தயாரிக்கபப்டும் இது சர்க்கரை பாகில் ஊறவைத்து ருசிக்கப்படுகிறது.

    தேங்காய் பர்பி:

    தேங்காய் துருவல், முந்திரி, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் கொண்டு தயார் செய்யப்படும் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் இனிப்பு பலகாரமாகும். இதனை தயார் செய்வதும் எளிதானது.

    தேவையானவை:

    தேங்காய் துருவல் - 1 கப்

    சர்க்கரை - 1 கப்

    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    முந்திரி, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:
    முதலில் தேங்காய்த் துருவலை வாணலியில் கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனை இறக்கியதும் மற்றொரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். அந்த பதத்துக்கு வந்ததும் தேங்காய் துருவலைக் கொட்டி கிளறவும். இடைவிடாமல் தொடர்ச்சியாக கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். கெட்டி பதத்துடன் வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தேங்காய் கலவையில் கொட்டி லேசாக கிளறவும். ஓரளவுக்கு சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி ருசிக்கலாம்.

    • நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது.
    • இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள்.

    நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உணவுப்பழக்கம் மாறுபடுகிறது. காரசாரமான உணவுகளை விட நாவிற்கு தித்திப்பூட்டும் இனிப்பு வகைகளை ருசிப்பதற்குத்தான் பலரும் விரும்புவார்கள். தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் நாட்டின் மற்ற பகுதியில் வசிப்பவர்களும் சுவைக்க தூண்டும் அளவிற்கு ருசி மிகுந்தவை. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

    கொழுக்கட்டை:

    அரிசி மாவு, வெல்லம், தேங்காய் கலந்து நீராவில் வேகவைக்கப்படும் இது அனைத்து தரப்பினரும் விரும்பும் இனிப்பு பலகாரமாக உள்ளது. கொழுக்கட்டையில் பல வகைகள் இருக்கின்றன. இனிப்பு மட்டுமின்றி காரமாகவும் இதனை தயார் செய்து ருசிக்கலாம்.

    மைசூர் பாக்:

    கர்நாடக மாநிலம் மைசூருவில் தயாராகும் இது அதன் பெயரையும் தாங்கி நிற்கிறது. உளுந்தம் பருப்பு, நெய், சர்க்கரை போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இது நாவில் பட்டவுடன் கரைந்துவிடும் தன்மையுடையது. கர்நாடகா மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் அறிந்திருக்கும் இனிப்பு வகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அரசர் காலத்தில் இருந்தே அதன் தரம், ருசி மாறாமல் இன்றளவும் சுவைக்கப்படுகிறது.

    உன்னியப்பம்:

    கேரளாவில் பிரபலமான இனிப்பு வகையாக விளங்குகிறது. அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லம், வறுத்த எள், தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இது ஒவ்வொரு வீடுகளிலும் ருசிக்கப்படும் சிற்றுண்டியாக விளங்குகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு பரிமாறப்படும் இனிப்பு வகையாக கருதப்படுகிறது.

    ஒப்பாட்டு:

    கர்நாடகாவில் தயாரிக்கப்படும் இது பூரான் போளி என்றும் அழைக்கப்படுகிறது. கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போன்றவற்றின் கலவையில் இது உருவாகிறது. போளி வகையிலேயே மாறுபட்ட சுவை கொண்டது. இதனை இனிப்பு பிரெட் என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் திரு விழாக்கள், வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளின்போது இது பரிமாறப்படுகிறது.

    ஜாங்கிரி:

    உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை இது. அதனை நன்றாக வறுத்து பொடித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது. மெல்லிய இழைகளாக அச்சுக்களில் வார்க்கப்படும் இது ஆரஞ்சு நிற சாயலில் காட்சி அளிக்கும். தித்திக்கும் இனிப்பு பண்டங்களை விரும்புபவர்கள் ஜாங்கிரியை தவிர்க்கமாட்டார்கள்.

    கடலை மிட்டாய்:

    தமிழ்நாட்டின் பிரபலமான தின்பண்டமாக விளங்கும் கடலை மிட்டாய், வறுத்த வேர்க் கடலை, வெல்லம் சேர்த்து செய்யப்படுகிறது. மொறுமொறுப்பான, மிதமான இனிப்பு சுவை கொண்டது.

    கேசரி:

    ரவை, நெய், சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ருசிப்பார்கள்.

    பூதரெகுலு:

    ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இது, அரிசி மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. காகித இழை போல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் உலர் பழங்களும் சேர்க்கப்படும். உலர் பழங்கள் சேர்க்கப்படுவதால் இது சத்தான இனிப்பு பொருளாக அறியப்படுகிறது.

    ×