search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயாமொழி"

    • குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வம்.
    • 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், முண்டன்சாமி. செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா என்ற மன்னன். தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி, ரிஷிகளும், முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்த நிலையில், ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தைப் பெற்றான்.

    இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும். அந்த குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மாறாக அந்த குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.

    இதற்கிடையே கர்ப்பவதியான வல்லராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால், அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன், தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான்.

    அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள். அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன். அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை, நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும்` என்றாள். மன்னனும் கேட்டதைத் தருவ தாக வாக்களித்தான்.

    அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன். அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார். ஒரு நாள் முடிந்ததும், மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல், அவரை கொல்ல முயன்றான்.

    ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன், மன்னனையும் அவன் மனைவியையும், வம்சாவளியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள். இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பித் தொழுதனர்.

    இதையடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள். பின்னர், 'நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால், நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன், அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன்' என்று உறுதியளித்தாள் என்கிறது தல வரலாறு.

    21 பந்தி தெய்வங்கள்

    21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறார். சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை. ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுகிறார். ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால். பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்.

    உருண்ட கண்களும், நீண்ட நாக்கும். விரித்த சடையும். தலையில் அக்னி கிரீடமும் கொண்டு பேச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், இவரது கையில் திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டை ஓடு, சாட்டை இருக்கும்.

    21 பந்தியில் உள்ள மற்ற தெய்வங்கள் இந்த பேச்சி அம்மனின் உத்தரவை ஏற்று நடப்பார்கள். சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்குச் செல்வார். பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன். பல கோவில்களில் வனப்பேச்சி அம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும் தான் இருக்கிறார்கள்.

    குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறார். எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனமுருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.

    ×