search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய நிதியமைச்சர்"

    • வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் கடன் சுமை குறைவு
    • வர்த்தக நிறுவனங்களின் முடிவெடுக்கும் திறனை பயங்கரவாதம் பாதிக்கிறது

    நாட்டின் பொருளாதார சிந்தனையை வகுக்க உதவும் அமைப்பான "நிதி ஆயோக்", இந்திய நிதித்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவுடில்யா பொருளாதார சந்திப்பு (Kautilya Economic Conclave) எனும் பொருளாதார நிபுணர்களின் சந்திப்பு கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்றது.

    இதில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் மொத்த கடன் தொகையை குறைக்க வழி தேடுகிறோம். கடனை குறைக்க, வளர்ந்து வரும் நாடுகள் கடைபிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். நமது நாட்டு கடன் தொகையை குறைத்தாக வேண்டியது கட்டாயம். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கடன் அதிகம் அல்ல. ஆனாலும் எதிர்கால சந்ததியினர் இதன் தாக்கத்தை அனுபவிக்காத வகையில் பொறுப்புணர்ச்சியுடன் நாம் நடந்து கொள்ள வேண்டும். இந்த திசையில் தற்போது அரசாங்கத்தின் முயற்சிகள் சீராக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இதை குறைத்து விடுவோம் என நம்புகிறேன். ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் செயல்திறனும் பயன்பாடும் குறைந்து வருகிறது. போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சச்சரவு மற்றும் பயங்கரவாதம், நிறுவனங்கள் நீண்ட கால வர்த்தக முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மார்ச் மாத இறுதி வரை உள்ள தரவுகளின்படி, மத்திய அரசாங்கத்தின் கடன் ரூ.155.6 டிரில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கடனும், அதை அடைப்பதற்கான அதிக செலவினங்களும், 'கிரெடிட் ரேட்டிங்' எனப்படும் வாங்கும் கடனை திருப்பி அடைக்கும் திறனுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவை முன்னேற முடியாமல் தடுக்கிறது.

    ×