search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்"

    • உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
    • ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    சென்னை:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. கடந்த 8-ந் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 11-ந் தேதி நடந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், 18-ந்தேதி நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 149 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்தன.

    சேப்பாக்கம் மைதானத்தில் 4-வது போட்டி நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. உலக கோப்பை தொடரின் 22-வது ஆட்டமாகும்.

    இதில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான்-ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது . அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் நெதர்லாந்து (81 ரன்), இலங்கையை (6 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. அதை தொடர்ந்து இந்தியா (7 விக்கெட்) ஆஸ்திரேலியா (62 ரன்) ஆகியவற்றிடம் தோற்று இருந்தது.

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 போட்டியிலும் பாகிஸ்தானே வெற்றிபெற்று இருந்தது. இதனால் அந்த அணி ஆப்கானிஸ்தானை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

    அதே நேரத்தில் சேப்பாக்கம் ஆடுகளத்தில் ரஷீத்கான், முஜிபுர் ரகுமானின் சுழற்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பாகிஸ்தான் வீரர்கள் கவனமுடன் ஆட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த அணி ரன்களை வாரி கொடுத்து இருந்தது.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் (294 ரன்), அப்துல்லா ஷபீக் (197 ரன்) ஆகியோரும் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி (9 விக்கெட்), ஹாரிஸ் ரவூப் (8 விக்கெட்), ஹசன் அலி (7 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் பாபர் ஆசம் எதிர்பார்த்த வகையில் இந்த தொடரில் சிறப்பாக ஆடவில்லை. இனிவரும் போட்டியில் நேர்த்தியாக ஆடுவது அவசியமாகும்.

    தர வரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் 1 வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்ததுபோல பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

    அந்த அணி இங்கிலாந்தை 69 ரன்னில் வென்றது. வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்திடம் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ரகுமத்துல்லா குர்பாஸ் (159 ரன்), ஓம்ராசி (130 ரன்) ஆகியோரும் பந்து வீச்சில் ரஷீத்கான் (6 விக்கெட்), நவீன் உல்-ஹக் முஜிபுர் ரகுமான் (தலா 4 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 8-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 7 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றுள்ளது.

    ×