search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி"

    • வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை தீபத் திருவிழா கொடியேற்றம்.
    • துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வருகிற 17-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை நடக்கிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும்.

    அதன்படி இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதனை தொடர்ந்து 17-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.

    அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    நவம்பர் 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள ஆண்டுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி வந்த பின்பு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×