என் மலர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி தொகுதி"
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ளது.
இந்த நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது.
புதுவை மாநிலத்திலும் பா.ஜனதா கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அவர்கள் பல்வேறு கூட்டங்கள் நடத்தி பிரதமர் மோடியின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இதற்கிடைய கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. கூட்டணியில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மேல்சபை எம்.பி. பதவியை பா.ஜனதாவிற்கு விட்டுக்கொடுத்தது.
எனவே நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் மீண்டும் போட்டியிட என்.ஆர். காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரியும் பா.ஜனதா புதுவை மாநில பொறுப்பாளருமான எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரி வந்தார். அவர் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி தொகுதியில் போட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது என்றும், தொகுதி வாரியாக பூத் கமிட்டியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா போட்டியிடுகிறது.
புதுச்சேரி பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர், மத்திய மந்திரி, புதுவை எம்.எல்.ஏ.க்கள், காரைக்கால் தொழிலதிபர் என பலரின் பெயர்கள் பேசப்பட்டது.
வேட்பாளரை இறுதி செய்ய பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்.
இதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை வேட்பாளராக கட்சி மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய முடிவானது.
இவர் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.வும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு வரும் சிவசங்கரன் கூறியதாவது:-

பா.ஜனதா ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் தேர்வானார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பா.ஜனதாவில் மாநில தலைமைக்கு பணம் தந்தால்தான் வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கி விட்டனர். மக்கள் செல்வாக்கை பார்ப்பதில்லை. ரூ.50 கோடி பணம் இருந்தால்தான் சீட் என்கிறார்கள்.
நல்ல வேட்பாளரை நிறுத்தினால் வெல்லலாம். கட்சித்தலைமை தெளிவாக இருக்கிறார்கள். உள்ளூர் தலைமை தான் சரியில்லை.
உள்ளூர் தலைமை பணத்தை பார்க்கிறார்கள். இது தவறு என்று கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளோம். உள்துறை அமைச்சர் நின்றால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லி விட்டோம். இறுதி முடிவு கட்சி தலைமை தான் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவசங்கரன் எம்.எல்.ஏ கூறினார்.
- மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
- கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு அபகரிப்பு நடக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இரட்டை எஞ்சின் ஆட்சி இருக்க வேண்டும்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தால் பாலாரும், தேனாறும் ஓடும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் அவரால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையை எடுத்து பார்த்தால், 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ரெஸ்டோ பார்களை திறந்து மதுகுடிக்கும் மாநிலமாக மாற்றிவிட்டனர். கஞ்சா மாநிலமாக ஆக்கி விட்டனர். இவர்கள் ஆட்சியில் நீடித்தால் புதுச்சேரியின் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர் சமுதாயம் வீணாகிவிடும். அதற்கு முன்னோட்டமாக இந்த மக்களவை தேர்தல் இருக்கிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நாம் தொகுதிகளில் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை களைந்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் 4 மாதங்களாக தடுமாறிக் கொண்டிருக்கின்ற என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது.
- தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது.
புதுச்சேரி:
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது.
1962-ல்தான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகு 1963-ம் ஆண்டு முதல் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
சட்டமன்றத்தில் 38 ஆண்டுக்கு பிறகு 2001-ல் முதல்முறையாக பா.ஜனதா நுழைந்தது. தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. ரெட்டியார்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பிறகு 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. 2014-ல் புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பா.ஜனதா மாநில தலைவராக இருந்த விஸ்வேஸ்வரன் புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.வாக நுழைந்தார்.

அதன்பிறகு 2016 தேர்தலில் பா.ஜனதா எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் மத்தியிலிருந்த பா.ஜனதா புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. அப்போது இருந்த கவர்னர் கிரண்பேடி உறுதுணையோடு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், தற்போதைய பா.ஜனதா தலைவரான செல்வகணபதி மற்றும் கட்சியின் பொருளாராக இருந்த சங்கர் ஆகியோர் புதுச்சேரி சட்டசபைக்குள் நுழைந்தனர். இதன்பின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. என்ற கூட்டணி உருவானது. இதில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சியில் பா.ஜனதாவில் இருந்து சபாநாயகர், 2 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுதவிர மத்திய அரசு நேரடியாக 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரிக்கு நியமித்தது. இதனால் புதுச்சேரி சட்டசபையில் தற்போது 9 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இருப்பினும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை பா.ஜனதாவின் தாமரை மலர்ந்ததே இல்லை.
ஆரம்பகால கட்டத்தில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல், பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. அப்போதெல்லாம் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டும்தான் பெற்றது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றது. அப்போது கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் புதுச்சேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004-ல் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவானது. இந்த கூட்டணி சார்பில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். அவர்தான் கணிசமான வாக்குகளை பெற்று டெபாசிட் பெற்றார்.

இதன்பிறகு 2009ல் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டது. பா.ஜனதா வேட்பாளர் விஸ்வேஸ்வரன் 13 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். 2014ல் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் பாஜனதா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் புதுவை தொகுதியில் பா.ம.க. போட்டியிட்டு, தோல்வியடைந்தது. 2019 பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 4,44,981 வாக்குகள் வாங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமி கேசவன் 2,47,956 ஓட்டுகள் பெற்றார். 1,97,025 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தமிழகத்தின் நுழைவு வாயிலாக புதுச்சேரியை பா.ஜனதா கருதுகிறது. இதனால்தான் தற்போது புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதற்கு சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தலைமை உறுதியாக இருந்தது.
உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயம் போட்டியிட மறுப்பு தெரிவித்தாலும், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு, பா.ஜனதா மேலிடம் நேரடியாக தலையிட்டு அவரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.
தற்போது பா.ஜனதாவுக்கு கூட்டணி ஆட்சியும், பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 22 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது.
அதோடு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ஆட்சியின் செல்வாக்கை நிரூபிக்க முதலமைச்சர் ரங்கசாமியும், தீவிரமாக களப்பணியாற்றுவார். இதனால் பா.ஜனதாவின் நீண்ட கால போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து, தாமரை புதுவையில் மலரும் என்று பா.ஜனதாவினர் எதிர்பார்க்கின்றனர். புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு 1963-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்கள் நடந்துள்ளது.
1996-ம் ஆண்டு நடந்த தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வும், த.மா.கா.வும் இணைந்து தேர்தலை சந்தித்தன.
தமிழகத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. புதுவையில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ஜானகிராமன் தலைமையில் அமைந்தது. அமைச்சரவையில் உள்துறை பொறுப்பை ப.கண்ணன் வகித்து வந்தார்.
1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது, தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தமிழகத்தில், தி.மு.க. கூட்டணியிலிருந்து த.மா.கா. வெளியேறியது. அதே நேரத்தில் புதுவையில் கூட்டணி ஆட்சி இருந்தது. உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ப.கண்ணன் த.மா.கா. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்பு 2000-ம் ஆண்டில் த.மா.கா., தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் புதுவை தி.மு.க. அரசு கவிழ்ந்தது.
இதன்பின் 25 ஆண்டுக்கு பிறகு உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாராளுன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது.
- 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
- புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.
புதுச்சேரி:
பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.
பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.
அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.
யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.
வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.

தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.
அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.
அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.
ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.
- அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
- எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர்.
பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார்.
மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.
- தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
- 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரம் செய்த போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து பேசினார்.
இதுதொடர்பாக தேர்தல் துறை கவனத்துக்கு சென்றது. இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அதில் தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டுதலை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது.
எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார்.
இதேபோல பா.ஜனதா சமூகவலைதள விளம்பரம் தொடர்பாக கட்சியின் பொது செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 2 கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.
- இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
- புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.
புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.

ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.
சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.
மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.
நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக ஒரே நாளில் தேர்தல் நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா வேரூன்ற செய்ய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி நேரடியாக பிரசார களத்திற்கு வருகிறார்.
இதுவரை பிரதமர் மோடி 6 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். நேற்று சென்னையில் ரோடு ஷோ சென்றார். இன்று வேலூர் மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அடுத்தபடியாக 13, 14, 15-ந் தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் விடுபட்ட பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுவை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதேநேரத்தில் 2 தேசிய கட்சிகளுக்கும் அகில இந்திய அளவிலான தலைவர்கள் யாரும் புதுவையில் பிரசாரத்துக்கு வரவில்லை. அண்டை மாநிலத்துக்கு பிரதமர் பலமுறை வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் இடத்துக்கு வராதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய மந்திரிகள் என யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. தங்கள் கட்சி சார்பில் பிரசாரத்துக்கு யார், யார் வருவார்கள்? என தேர்தல் துறையிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதியுடன் புதுவையில் பிரசாரம் நிறைவடைகிறது.
இதனால் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இதன்பிறகும் தேசிய தலைவர்கள் யாரும் புதுவைக்கு வந்து பிரசாரம் செய்ய வருவார்களா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
- வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள்.
- தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம் உள்ளனர்.
புதுவை தேர்தல் துறையின் இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் மாநிலம் முழுவதும் இடம் பெற்றுள்ளனர். இதில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் பெண் வாக்காளர்கள்தான் அதிகளவில் உள்ளனர்.
புதுவை பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 28 ஆண்வாக்காளர்களும், 4 லட்சத்து 15 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்களும் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 76 ஆயிரத்து 932 ஆண் வாக்காளர்களும், 89 ஆயிரத்து 258 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
மாகியில் 14 ஆயிரத்து 357 ஆண், 16 ஆயிரத்து 653 பெண், ஏனாமில் 19 ஆயிரத்து 12 ஆண், 20 ஆயிரத்து 343 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தத்தில் புதுவை மாநிலம் முழுவதும் 4லட்சத்து 79 ஆயிரத்து 329 ஆண், 5 லட்சத்து 41 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அதோடு வாக்குப் பதிவிலும் ஆண்களை விட அதிகளவில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பார்கள். இதனால் பெண் வாக்காளர்களை கவர, புதுவை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
பா.ஜனதாவினரும், காங்கிரசாரும் பெண்களை அதிகளவில் பிரசாரத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெண்களும் ஆர்வமாக பிரசாரத்திற்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம், பெண் வாக்காளர்கள், பணத்துக்கு பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தேர்தல் முடிந்தவுடன் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் என ரங்கசாமி வாக்குறுதி அளித்தார்.
அதோடு புதுவை அரசு 64 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், விடுபட்ட 10 ஆயிரம் பெண்கள் கண்டறியப்பட்டு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்.என்றும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என பெண்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பட்டியலிட்டு பேசுகிறார்.
இன்னும் 2 ஆண்டுகள் அரசு தொடரும் என்பதால், மேலும் பல பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என கூறி வருகிறார்.
காங்கிரஸ் தரப்பில் சிறுமி பாலியல் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, பெண்களுக்கு புதுவையில் பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதை எடுத்துகூறி பிரசாரம் செய்கின்றனர்.
அதோடு, பெண்கள் வீட்டு வேலை, குடும்ப பணி செய்தாலும் மதிப்பு, மரியாதை இல்லை. இதனால்தான் ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் கொடுக்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். அவர் சொன்னதை செய்வார் என குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பெண் வாக்காளர்களை கவர 2 கூட்டணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
- ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். நூதன முறையிலும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி தொகுதியில் மாஸ்கோ என்பவர் வாளி சின்னத்தில் தேர்தலில் களம் காண்கிறார். சுயேட்சை வேட்பாளரான மாஸ்கோ பிச்சை கேட்டு வாக்கு சேகரித்து வருவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
- நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.
நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்.