என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீட்டு உணவுகள்"
- உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும்.
- வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள்.
மழைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், சளி-இருமல் தொல்லையும், காய்ச்சல் நோய் பாதிப்புகளும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. தொண்டையில் உண்டாகும் மாற்றத்தை கண்டு சளி பிடிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அடிக்கடி மருந்து மாத்திரைகள் என்று பயன்படுத்துவதை விட காய்ச்சலின் ஆரம்பத்திலேயே, சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதனால், சளி-காய்ச்சல் தொல்லையின் வீரியத்தை குறைத்துவிடலாம். இதற்கென பிரத்தியேகமான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை. அதிக மெனக்கெடலும் தேவையில்லை. உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும். சாதாரண காய்ச்சல், சளி, தலைவலியாக இருந்தால் இந்த உணவு வகைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது சீரகம் போட்ட நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இதனால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நாள் முழுக்க அரை மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் நீரை குடிப்பதன் மூலம் உடலில் நச்சு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அதோடு காய்ச்சலின் போது உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வைரஸ், பாக்டீரியா கிருமித்தொற்று வேகமாக பரவக்கூடும்.
காலை உணவு
காய்ச்சல் காலங்களில் பிரட் உணவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆவியில் வேக வைத்த இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த துவையல், தாளிப்பு தேவையெனில் நல்லெண்ணெய்யில் தாளித்து தொட்டு கொள்ளலாம். இதனால் வாய் கசப்பு நீங்கும். காரத்துக்கேற்ப புளி, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.
வயிறார சாப்பிடக்கூடாது. வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு இட்லிகள் வரை சாப்பிட வேண்டும். அரை வயிறாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாந்தி, குமட்டல் இருக்காது. அதேபோன்று இளஞ்சூட்டில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இளஞ்சூட்டில் நீர் குடிக்க வேண்டும்.
மதிய உணவு
புழுங்கலரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ரவை போன்று பொடியாக மாற்றவும். இரண்டு டம்ளர் நீருக்கு கால் டம்ளர் அரிசி ரவை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதில் சீரகப்பொடி, பெருங்காயம் சிட்டிகை, உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். தேவையெனில் தொட்டுகொள்ள புதினா சட்னி எடுத்துகொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரக நீரை குடிக்க வேண்டும். பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்.
அரிசி சாதத்துடன் கூடிய மிளகு ரசம் என்பது நிச்சயம் நன்மையே என்றாலும் சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் முதல் இரண்டு நாட்கள் இதை தவிர்க்க வேண்டும்.
மாலை நேரத்தில்
அரை வயிறு உணவு என்பதால் வயிற்றில் பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். மாலையில் இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் 5 உலர் திராட்சை, 2 ஏலக்காய், 3 மிளகு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும். பாகுக்கு முந்தைய பதம் வரும் போது அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
இரவு உணவு
ஆவியில் வேகவைத்த உணவு அல்லது கஞ்சி போதுமானது. அதிக காய்ச்சல் இல்லையெனில் எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். இரவு நேரத்தில் துவையல் சேர்க்க வேண்டாம். பால், காபி, தேநீர் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இடையில் பசி எடுத்தாலும் இளஞ்சூடான சுக்கு மல்லி காபி அல்லது வெந்நீர் மட்டும் அருந்துங்கள். பகல் வேளையில் 4 அல்லது 5 உலர் திராட்சையுடன் மிளகு 3 சேர்த்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாறை விழுங்குங்கள். தொண்டை கரகரப்பு, இருமல் வேகமாக குறையும்.
மேற்கண்ட இந்த உணவு பட்டியல் தான் ஒரு நாளுக்கான உணவாக இருக்க வேண்டும். இந்த உணவு உங்களின் சளி, அதனால் உண்டான இருமல், காய்ச்சலின் தீவிரத்தை வெகுவிரைவாக குறைத்துவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் திட உணவுகள் அதிலும் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.
அதிகப்படியான சளி, காய்ச்சல் பிரச்சினை இருக்கும் போது நாள் முழுக்க இதை கடைப்பிடித்தால் அடுத்த நாள் தூங்கி எழும்போது உடல் சோர்வு நீங்கியிருப்பதை உணர்வீர்கள். ஏனெனில் இவை எல்லாமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியவை. பெரும்பாலும் தொற்று தீவிரமாகாமல் தடுத்துவிடும் என்பதால் நிச்சயம் இது கைகொடுக்கும்.
சூப் வகை
சளி, இருமலின் போது சூடாக குடிக்கும் காபி, தேநீரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து காபி குடிக்கலாம். சிறுவர்களுக்கு சூப் கொடுக்க வேண்டும்.
முருங்கைக்கீரை காம்புகளை வேகவைத்து மசித்து வடிகட்டி அதில் சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சிட்டிகை சேர்த்து கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை சேர்த்து தாளித்து கொடுக்கவும். சிறு குழந்தைகளாக இருந்தால் கொத்தமல்லி, புதினாவின் சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த நேரத்தில் காய்கறிகள் சூப்பை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சளியை முறிக்கும் முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.
கூடுதல் கவனம்
தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் மிக அவசியம். காலையும், மாலையும் கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தலையை உயரமாக தலையணையில் வைத்து படுக்க வேண்டும். அதிக தலைபாரம், சளி, காய்ச்சல் மூன்றும் இருக்கும் போது மூச்சுவிடுவதிலும் சிரமம் இருக்கும். படுக்கை அறையில் மண்சட்டியில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி என அருகில் கிடைக்கும் மூலிகைகளை கைப்பிடி சேர்த்து அதிக சூட்டில் அருகில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் சூடான ஆவியை மூக்கினுள் நன்றாக இழுக்க வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்ய வேண்டும்.
படுக்கையிலேயே கிடக்காமல் அறைக்குள் நடக்க வேண்டும். தூங்கும் போதும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சில துளி யூகலிப்டஸ் தைலம் விட்டு, சுத்தமான துணியை நனைத்து பிழிந்து மூக்கின் மேல் பற்று போல் போட்டால் மூக்கடைப்பு இருக்காது. சளி அடர்த்தியாக இருந்தால் கரைந்து வெளியேறும். அதேநேரம் சுகாதாரம் பேணுவதும் அவசியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்