search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரோட்டீன் பவுடர்"

    • புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம்.
    • பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும்.

    நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின். அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் உணவுகளை தவிர்க்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம்.

    பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும். அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதில் இருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    நெய்- 4 ஸ்பூன்

    நிலக்கடலை- ஒரு கப்

    உலர் திராட்சை- 100 கிராம்

    முந்திரி- 50 கிராம்

    பாதம்- 50 கிராம்

    பிஸ்தா- 50 கிராம்

    பூசணி விதை- 50 கிராம்

    ஏலக்காய்- 6

    பேரிச்சம் பழம்- 150 கிராம்

    செய்முறை:

    முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை காடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடலை வறுபட்டு பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும்.

    பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.

    அதன்பிறகு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள். பின்னர் மீண்டும்பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், பூசணி விதையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு ஏலக்காயையும் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

    நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர அனைத்து பொருட்களை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின்னர் லட்டு போன்று உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான புரோட்டின் லட்டு தயார்.

    • உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும்.
    • புரோட்டீன் பவுடரை அனைவரும் பாலில் கலந்து குடிக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்புகின்றனர்.

    இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்டிஆக்ஸிடன்ட், போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது. எனவே இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம். இந்த புரோட்டீன் பவுடரை 5 வயது முதல் அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாதாம்- 50 கிராம்

    முந்திரி- 50 கிராம்

    கோகோ பவுடர்- 3 ஸ்பூன் (தேவைஎன்றால்)

    அக்ருட் (வால்நட்)- 8-10

    கேழ்வரகுமாவு- 3 ஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று கேழ்வரகு மாவையும் அதே வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு வறுத்த நட்ஸ் கலவைகளை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த கலவையுடன் வறுத்த கேழ்வரகு மாவு, கோகோ பவுடர் (கண்டாயம் இல்லை), நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த ஊட்டச்சத்து நிறைந்த பவுடரை அதன் ஈரத்தன்மை போகிற அளவுக்கு வெளியே வைத்து பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு பருகுவதற்கு கொடுக்கலாம்.

    ×