என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சைனஸ் பிரச்சினை"
- ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
- சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.
நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.
எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.
சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்
சளி வந்தால் செய்ய வேண்டியவை:
* சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.
சளியுடன் வரும் இருமலுக்கு:
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.
* அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.
சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:
* திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.
* தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.
மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:
* தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.
பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.
கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.
மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:
* நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.
* படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.
சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:
* சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.
* அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.
* கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.
* தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.
- சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
- மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.
உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.
மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.
மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.
நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.
காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.
முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.
அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்
இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.
இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.
மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.
மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.
ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.
- சைனஸ் என்பது மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும்.
- அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
சைனஸ் என்பது நம் மூக்கின் பின்புறத்தில் இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதில் அலர்ஜி பிரச்சினை உண்டானால் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சைனஸ் இருக்கிறது. இது பெரும்பாலும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் ஒன்றாகும்.
மேலும் அதிகப்படியான குளிர்பானங்கள், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகிறது. முகத்தில் வலி, அதிகப்படியான சளி, சுவாசப் பிரச்சினை போன்றவை சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள்.
நீங்களும் சைனஸ் பிரச்சினையால் அவதிப்படும் நபராக இருந்தால், எளிதான வீட்டு வைத்திய முறையிலேயே அதை சரி செய்ய முடியும். அதற்கு உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி. இந்த மூன்றையும் பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஆடாதோடை, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு காய வைத்து, பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு வேறு ஒரு கிளாசில் வடிகட்டினால், சைனஸ் பாதிப்பை குணமாக்கும் அற்புத பானம் தயார்.
இந்த கசாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். நிச்சயமாக சைனஸ் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.
அதேநேரம் மூலிகைப் பொடியை அதிகமாக கலந்து கஷாயம் தயாரிக்க வேண்டாம். ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி பயன்படுத்துவது நல்லது. அதிகமாகக் குடித்தால் வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த மருத்துவ முறையைப் பின்பற்றுவதற்கு முன் தகுந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
- எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
- அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.
* அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
* புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.
* அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.
* அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.
* அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.
* அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.
* குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.
* அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.
* சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.
* சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.
* அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.
* பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.
* அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.
* அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.
* வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்