search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கிட் திவாரிலஞ்ச ஒழிப்புத்துறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
    • மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டாக்டர் சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 29.10.2023-ந்தேதி ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து டாக்டர் சுரேஷ்பாபுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தனக்கு தமிழ் தெரியாது. எனவே ஆங்கிலத்தில் உரையாடவும் என கூறிவிட்டு மறுநாள் 30.10.2023-ந்தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டார்.

    தன் மீதான வழக்கு முடிந்துவிட்டதாக கூறியபோதும், உங்கள் மீதான புகாரில் உண்மை உள்ளது. எனவே நீங்கள் விசாரணைக்கு வராவிட்டால் சம்மன் அனுப்பி அதனை விசாரிக்க நேரிடும் என மிரட்டினார்.

    அதன்பிறகு பல நாட்களில் வாட்ஸ்ஆப் மூலமும், தொலைபேசி மூலமும் போன் செய்து தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். மேலும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி பணம் தரவேண்டும் என கூறினார்.

    அதற்கு டாக்டர் சுரேஷ்பாபு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறியபோது வேறு ஒரு நபரை பேசவைத்து ரூ.51 லட்சம் கொடுத்தால்போதும் உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்கவேண்டி உள்ளது. தீபாவளி செலவுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறினார். அதன்படி கடந்த 1.11.2023-ந்தேதி நத்தம் அருகே மதுரை செல்லும் வழியில் ரூ.20 லட்சம் பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த பணத்தைதான் கையில் வாங்காமல் டிக்கியில் வைத்துவிடுமாறு கூறினார்.

    எனது கார் டிரைவர் அவரது டிக்கியில் பணம் வைத்தபோது அதனை வீடியோ பதிவு செய்து கொண்டேன். ஆனால் மீதி பணத்தை ஒரு வாரத்தில் தர வேண்டும் என கண்டிப்பாக கூறினார். அவ்வாறு தராவிட்டால் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் அமலாக்கத்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என மிரட்டினார்.

    உங்கள் ஊரிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறோம். அது உங்களுக்கு தெரியும் எனவும் கூறினார். இதனையடுத்து மீண்டும் ரூ.20 லட்சத்தை தயார் செய்து அங்கிட் திவாரியை தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை. தான் காவிரிஆற்று மணல் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு முக்கிய பணிகளுக்காக சென்னைக்கும், டெல்லிக்கும் சென்றுவருவதாகவும் தெரிவித்தார். இதனால் தன்னால் அங்கு வர வாய்ப்பில்லை என கூறிவிட்டார்.

    மேலும் உங்களுக்கு ஹவாலா பணம் பரிமாற்றம் செய்பவர்கள் யாரும் தெரியாதா என கேட்டார். அவர்களை பற்றி எல்லாம் தனக்கு தெரியாது என டாக்டர் சுரேஷ்பாபு கூறியுள்ளார். தான் ஊருக்கு வந்து பணத்தை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் மட்டும் அனுப்பி வந்தார். டிசம்பர் 1-ந்தேதி காலையில் வாங்கி கொள்வதாக கூறியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கொண்டனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரிந்துவரும் ஹர்த்திக் என்பவரும் திவாரிக்கு ஆதரவாக தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அங்கிட் திவாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    ×