என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் எடை குறைப்பு"

    • சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
    • உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும்.

    உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வது சரியானதுதான்.

    சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சிலரோ சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று அதனை அறவே தவிர்க்கிறார்கள். உடல் எடை குறைவதற்கு அரிசி சாதம் அவசியம் என்பது சிலருடைய கருத்தாக இருக்கிறது.

    சப்பாத்திக்கு பதிலாக தினை, கேழ்வரகு, கம்பு,சோளம், வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் தோசை, இட்லி, ரொட்டி உள்ளிட்டவற்றை உட்கொள்வது நல்லது என்பது சிலருடைய வாதமாக இருக்கிறது. அதனால் எதை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்? சாதம் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? சப்பாத்தியை சாப்பிடலாமா? அல்லது சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது.

    உணவியல் நிபுணர் பூனம் துனேஜாவின் கருத்துப்படி, அரிசி மற்றும் ரொட்டி இவை இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் உடல் எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்கள் சாதம் சாப்பிட வேண்டும் என்கிறார்.

    ``இந்த வழிமுறையை பின்பற்றினால் உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுதானியத்தை உட்கொள்ளலாம். அதிலும் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிடவற்றை கொண்டு தயார் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் என்பதால் இன்சுலின் அளவு வேகமாக அதிகரிக்காது. மேலும் இந்த வகை ரொட்டியில் அதிக நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிரம்பி இருக்கும். அதனால் இந்த ரொட்டி சத்து மிக்கது.

    சீராக உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல் பழுப்பு அரிசியை சாப்பிடலாம். வெள்ளை அரிசியை உட்கொள்வதாக இருந்தால் குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் கொதிக்கவிட்டு வேகவைத்து கஞ்சியை வடிகட்டிய பிறகு சாதத்தை உட்கொள்ளலாம்.

    இருப்பினும் அரிசி, ரொட்டி இரண்டையும் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. ரொட்டியில் குளூட்டன் இருக்கும். அரிசியில் அது இருக்காது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட ரொட்டி அதிகம் சாப்பிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

    அதிலும் நீரிழிவு நோயால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. அதனை சாப்பிட்டு எடை குறையும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது'' என்கிறார்.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அரிசி, ரொட்டி இவை இரண்டையும் உட்கொள்ளலாம்.

    • சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
    • நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது.

    அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் வயது ஏற ஏற உடலில் பல வகையான மாற்றங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். 40 களை கடக்கும் போது மெட்டபாலிச சக்திகளின் மாறுபாடு, ஹார்மோன் மாற்றங்கள் என பலவகையான மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் பல கண்டுபிடித்துள்ளன. இதுபோன்ற மாற்றங்கள் நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்றாலும், வேறு வகையில் இன்னும் பிற உடல் நல பிரச்சினைகளையும் இழுத்து விடும்.

    குறிப்பாக பெண்களுக்கு, 40 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிய தாக்கத்திற்கு ஆளாகிறார்களாம். இங்கு, 40 களை கடக்கும் பெண்கள் தங்களது மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் ஹெல்தியான முறையில் எடையை பராமரிக்கவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

     பெண்களுக்கு வயதாகும்போது, தசைகள் இலகுவானதாக மாறி தளர்வடைய ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு வழக்கமான வலிமையான பயிற்சியை அவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியமானதாகும்.

    எடை தூக்குவது, பேண்டுகளை வைத்து இழுத்து ட்ரெயின் செய்வது போன்ற பயிற்சிகள், உங்கள் தசைகள் வலுவடைய உதவுகிறது. இது மெட்டபாலிச சத்துகள் அதிகமாவதற்கு உதவுவதோடு மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் பலத்திற்கும், எலும்புகளை வலுவாக்குவதற்கும் கூட உதவி புரிகிறது.

     தீவிர உடற்பயிற்சி:

    உயர்-தீவிர இடைவெளி பயிற்சி என்பது கொழுப்பை குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் பயனுள்ள உடற்பயிற்சி முறையாக பார்க்கப்படுகிறது. தீவிர உடற்பயிற்சியின் குறுகிய கால இடைவெளிகளைத் தொடர்ந்து சிறிது ஓய்வு நேரத்தை சேர்த்துக்கொள்வது வொர்க்அவுட்டை முடித்த பின்னரும் கலோரிகளை எரிக்க உதவும். HIIT உடற்பயிற்சிகளை பல்வேறு உடற்பயிற்சி நிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். 40 வயதை கடந்த பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது.

    நல்ல தூக்கம்:

    போதுமான மற்றும் நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதிக உணவுகளை நாம் உட்கொள்வதற்கும் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்கும் செயல்முறைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்காக தினமும் 7-9 மணிநேர தடையற்ற தூக்கத்தை கடைப்பிடிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

     கவனமான உணவு முறை:

    அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைவதால், எந்த உணவை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமன்றி சாப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    உணவின் போது ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து, பொறுமையாக சாப்பிட வேண்டும். மேலும், உணவு கட்டுப்பாட்டு பயிற்சியை செய்வது அதிகப்படியான உணவைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மெல்லிய புரதங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எடை நிர்வாகத்தை நாம் ஆதரிக்க உதவும்.

    நீர்ச்சத்து:

    தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். மேலும், எடையை பராமரிக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இது, முழுமையான உணர்வுக்கும் பங்களிக்கிறது, அதிகப்படியான உணவை உட்கொள்வதை தடுத்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்க, சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.

    • முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும்.
    • அளவாக சத்தான உணவை சாப்பிட்டால் அழகாக இருக்கலாம்.

    கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும், சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, `நான் டயட்டில் இருக்கேன்' அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடுறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க.

    சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட்டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.

    அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸ்லிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

    மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:

    உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற்கேற்ப டயட்டில் இருங்கள்.

     உடற்பயிற்சி செய்யுங்கள்:

    எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம், யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதிதீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:

    ஸ்லிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செ<லுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக்கோமே என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸ்லிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.

    • உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது.
    • மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம்.

    சிகிச்சை முறை தவிர, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    நொறுக்கு தீனியை குறைக்க சுலப வழி:

    சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம்.

    இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம், எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.

     எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருத்தல்:

    `டிவி' நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, `டிவி' நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையை குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.

    தினசரி நடக்க வேண்டும்:

    தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உள்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

    நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். பக்கத்து தெருவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து, அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பேசலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம்.

    மெதுவாக சாப்பிட வேண்டும்:

    உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும்.

    குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும். மேலும், மெதுவாக சாப்பிடுவதால், எளிதில் ஜீரணமாதல், வயிறு உப்புசம் மற்றும் வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படாமல் தவிர்த்தல் போன்ற பயன்களும் உள்ளன.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • உடல் பருமன் பிரச்சினையால் பலரும் அவதிப்படுகிறார்கள்.
    • சில உடற்பயிற்சி செய்வதன் மூலம் இடுப்பில் கொழுப்பு சேருவதை தடுக்கலாம்.

     உடல் பருமன் பிரச்சினையால் பலரும் அவதிப்படுகிறார்கள். அதிலும் இடுப்பை சுற்றி கொழுப்பு சேரும் பிரச்சினையை முதிய பருவத்தை எட்டுபவர்கள் மட்டுமின்றி டீன் ஏஜ் வயதினரும் எதிர்கொள்கிறார்கள். அப்படி இடுப்பை சுற்றி கொழுப்பு அதிகம் சேர்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எளிமையான சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் இடுப்பை சுற்றி கொழுப்பு சேருவதை தடுக்கலாம்.

     வலது கையை தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நேராக நீட்ட வேண்டும். அப்போது இடுப்பை நன்றாக தூக்கியபடி கால்களை நேர்கோட்டில் வைக்க வேண்டும். இடது கையை இடுப்பு மீதோ, முதுகின் மீதோ வைத்தபடி ஒரு நிமிடம் வரை சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல் 10 முறை செய்ய வேண்டும்.

    இரண்டு கைகளை தரையில் ஊன்றியபடியும் பயிற்சி செய்யலாம். அப்போது தலை, இடுப்பு, கால்கள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேன்டும். பின்னர் வலது கையை தலைக்கு பின்னால் வைத்தபடி சில வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் தரையில் ஊன்ற வேண்டும். அதைத்தொடர்ந்து வலது கையை இடது புற தோள்பட்டை மீது வைத்தபடி சில வினாடிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். பின்பு கைகளை தரையில் நன்றாக ஊன்றியபடி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

     தரையில் படுத்த நிலையில் கைகளை ஊன்றாமல் கால்களை மேலே தூக்கியும் பயிற்சி செய்யலாம். முதலில் தரையில் படுத்தபடி இரு கைகளையும் தலையின் பின்பகுதியில் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். மூட்டு பகுதியை செங்குத்தாக வைத்தபடி கால்களை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். பின்னர் தலையை இடது புறமாக திருப்பி, இரு கால்களையும் நேராக நீட்ட வேண்டும். பின்னர் ஒரு காலை மட்டும் நீட்டி மடக்க வேண்டும். பின்பு வலது புறத்தில் தலையை திருப்பிக்கொண்டு மற்றொரு காலை நீட்டி மடக்க வேண்டும்.

    தரையில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டிக்கொண்டு தலையை குனிந்தபடி இரு கைகளால் கால் விரல்களை தொட்டும் பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சிகளை தினமும் தவறாமல் தொடர்ச்சியாக செய்து வந்தால் இடுப்பு தசைகள் குறையத் தொடங்கும். உடற்பயிற்சி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முறையாக பயிற்சி செய்வது விரைவான பலனை தரும்.

    • பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது.
    • ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

    வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை.

     இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாழைத்தண்டிலேயே நிறைய நீர்ச்சத்து இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்தடுத்த ஜூசில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.

     இதேபோல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. நீங்கள் கேட்டிருந்தபடி சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும்.

    சுரைக்காய் ஜூசில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக வயிறு மற்றும் குடல்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அதைத் தவிர்க்கவும்.

    நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூசும் குடிக்கலாம். காய்கறி ஜூஸ் நல்லது என்ற எண்ணத்தில் எல்லா காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. எனவே மேற்குறிப்பிட்ட மூன்று ஜூஸ் மட்டும் குடித்துப் பார்த்து உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கவனியுங்கள். ஏற்றுக்கொண்டால் தொடரலாம். கூடவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றினால் நிச்சயம் எடைக்குறைப்பு முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

    • நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
    • உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    எடை இழப்பு என்று வரும்போது நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதே நேரம் சாப்பிடும் உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களது எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சுவையான குறைந்த கலோரி நிறைந்த தின்பண்டங்கள் பற்றி பார்க்கலாம். இதை எளிதாக நீங்களே வீட்டில் செய்து விட முடியும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, இவற்றை சாப்பிடும்போது, திருப்திகரமாகவே உடல் எடையைக் குறைக்கலாம்.

     முளைக்கட்டிய பச்சைப் பயறு:

    முளைகட்டிய பச்சைப் பயரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை இதில் கலந்து, சாட் போல தயாரித்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

     வேகவைத்த வெஜிடபிள் கட்லட்:

    உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நன்கு வேக வைத்து, பின்னர் அவற்றை கட்டலெட்டுகளாக செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து நன்றாகப் பிசைந்து, தட்டையாக்கி, பிரெட் தூளில் தொட்டு இருபுறமும் வேகும்படி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால், வெஜிடபிள் கட்லெட் ரெடி.

     வறுத்த மசாலா கொண்டைக்கடலை:

    சென்னா என அழைக்கப்படும் கொண்டைக்கடலை ஒரு ஆரோக்கியமான உணவாகும். நன்கு காய்ந்த கொண்டக்கடலையை தண்ணீரில் நனைத்து, கொத்தமல்லி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் போன்ற மசாலாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து சாப்பிட்டால், புரதச்சத்து நிறைந்த சூப்பர் ஸ்னாக் தயார்.

     வெள்ளரிக்காய் ரைத்தா:

    வெள்ளரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ரைத்தா ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தயிர் சார்ந்த சைடு டிஷ் ஆகும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக். இதை செய்வதற்கு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து சீரகத்தூள், புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     சுண்டல்:

    சில குறிப்பிட்ட பருப்பு வகைகளை வேகவைத்து செய்யப்படும் புரதம் நிறைந்த உணவுதான் இந்த சுண்டல். கொண்டைக்கடலை, காராமணி அல்லது பச்சை பயறு போன்ற பயர் வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்தால் சூப்பர் சுவையில் சுண்டல் ரெடி. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே நேரம் கலோரியும் குறைவுதான் என்பதால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     மசாலா பொரி:

    உங்களுக்கு மேலே குறிப்பிட்ட எந்த ஸ்நாக்கும் செய்ய முடியவில்லை என்றால், கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து பொரி வாங்கி சாப்பிடுங்கள். இதை நேரடியாக அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து, சாட் மசாலா தூவி அப்படியே கலந்து மசாலா பொரியாக்கி சாப்பிட்டால், இதைவிட அற்புதமான குறைந்த கலோரி உணவு இருக்கவா போகிறது?.

    இவை அனைத்துமே குறைந்த கலோரியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகும். இதை அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. எனவே இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயலுங்கள்.

    • உடல் எடை குறைக்க உதவும் விதைகள்.
    • உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை.

    பொதுவாக உடல் எடை குறைக்க உதவும் விதைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் உடல் எடை காரணமாக பெரும்பாலானோர் பல்வேறு டயட் உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறார்கள். குறிப்பாக உடலில் தொப்பை வர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை மட்டுமே. எனவே ஆரோக்கியம் தரும் இந்த மூன்று விதைகளை உணவில் சேர்க்கும் போது அது நம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்க உதவுகிறது.

     சியா விதைகள்

    சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது.

    இதனால், குடல் நலன் மேம்படும். தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். குறிப்பாக, ரத்தத்தில் உள்ள டிரிகிளைசைரைடு கொழுப்பை இது கரைக்கிறது. உடல் உள்ளுறுப்புகளின் வீக்கம் குறைவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு அதிகரிக்கும்.

    இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். குறிப்பாக வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுப்படுத்த உதவுகிறது. மிக முக்கியமாக இது உடல்நிலை இருக்கும் கலோரிகளை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

     ஆளி விதைகள்

    ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்து சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

    100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலை சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன. இதை சாப்பிடும் போது இதில் இருக்கும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

     சூரியகாந்தி விதை

    சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.

    இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன. களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.

    சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    சூரியகாந்தி விதையை பயன்படுத்தி நாம் டீ அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. மேலும் இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனைகளை நீக்கி குடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    எனவே ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்து உடலை பிட்டாக வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

    • பலரின் பிரச்சனையாக இருப்பது அதிகமான உடல் எடை.
    • மருத்துவர்கள் முடிவு செய்யும் நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை.

    இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சனையாக இருப்பது அதிகமான உடல் எடை. என்னதான் முறையான டயட் பின்பற்றினாலும், உடற்பயிற்சி செய்தாலும், சாப்பிடாமலே கூட இருந்தாலும் உடல் எடை குறைவதில் முன்னேற்றமே இருக்காது. அதற்கு ஒவ்வொருவரின் உடலமைப்பை பொறுத்து பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

    ஆனால், அவர்களுக்காகவே இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் பேரியாட்ரிக் சர்ஜரி. பேரியாட்ரிக் என்று சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை தெரபி இது. ஆனால், இதுவும் கூட அனைவருக்கும் செய்ய முடியாது. இந்த அறுவை சிகிச்சைக்கென்று ஒரு சில அளவுகோல்கள் உள்ளது. அதற்கு பொருந்தி, இவருக்கு இது உதவும் என்று மருத்துவர்கள் முடிவு செய்யும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

    அப்படி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன? யாருக்கெல்லாம் அதை செய்யலாம்? இந்த அறுவை சிகிச்சையில் என்னென்ன வகைகள் உள்ளது? அறுவை சிகிச்சைக்கு பிறகான குணமாகும் காலம், அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள், பக்கவிளைவுகள் என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

    ஒவ்வொருவருக்கும் தங்கள் எடை குறித்து ஒரு கருத்து உண்டு. அதனால், சரியான எடையில் இருப்பவர்கள் கூட தங்களை அதிக எடை கொண்டவர்களாக நினைத்து கொண்டு அதை குறைக்க ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் அதிக எடையா இல்லையா என்பதை உங்கள் பிஎம்ஐ அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.

    பிஎம்ஐ என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அளவீட்டு விகித நிலை தான். பிஎம்ஐ அளவு 20 முதல் 25 வரை இருப்பது நார்மல். அதற்கு மேல் 26 முதல் 30 வரை செல்வது நார்மலை விட கூடுதல் எடை. இதற்கு மேல் இருப்பவர்கள் அனைவருமே கூடுதல் எடை உடையவர்கள்தான்.

    குறிப்பாக பிஎம்ஐ 40-க்கு மேல் இருப்பவர்கள் அதிக எடை கொண்டவர்கள். இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்கள் இவர்களே. இவர்கள் என்னதான் உடற்பயிற்சி டயட் என்று பின்பற்றியிருந்தாலும் இவர்களின் உடல் எடை குறைந்திருக்காது.

    அதேபோல் பிஎம்ஐ 30 முதல் 40-க்குள் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் சில சிக்கல்கள் ஏற்படும். இவர்களுக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, முடக்கு வாதம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.

    குறிப்பாக இந்த தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பவர்கள் அடிவயிறு எடை அதிகமாக இருப்பதால் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுதல், குறட்டை விடுதல், ஏதோ அடைப்பது போல் உணர்வு ஏற்பட்டு இரவில் விழித்தல் மற்றும் இரவில் தூங்கும்போதே இதயத்துடிப்பும் மூச்சும் நிற்பது போல தோன்றும்.

    இந்த அனைத்து சிக்கல்களும் தனித்தனியாக கவனிக்க பட வேண்டிய பிரச்சனைகள். எனவே, உங்களுக்கு பிஎம்ஐ 40-க்கு மேல் இருந்தாலோ அல்லது 30 முதல் 35-க்குள் இருந்து இந்த சிக்கல்களும் இருந்தாலோ உங்கள் மருத்துவர் இந்த அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

    • அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.
    • ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.

    நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வாய் வழியாக தொண்டைக்குள் இறங்கி உணவுக்குழாய்க்குள் இறங்கும். அங்கு உணவுகள் உடைக்கப்பட்டு அதன் சத்துக்கள் குடல் வழியாக உறிஞ்சப்பட்டு எஞ்சியிருப்பவை மலக்கழிவாக வெளியேறும்.

    எந்த ஒரு சர்ஜரியையும் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நமது உணவுகளின் அளவை குறைக்க வேண்டும். உணவு அளவுகளை குறைக்க வேண்டுமென்றால் வயிறு அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்கு வயிற்றின் அளவை சுருக்க வேண்டும்.

    அப்போதுதான் குறைந்த உணவு எடுத்துகொண்டாலே வயிறால் நிறைந்த உணர்வை பெற முடியும். எளிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையின் கோட்பாடு. இந்த பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகளும் கூட உள்ளன. இந்த மூன்று பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

    பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்

    பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையை பொறுத்தவரை முழுக்க முழுக்க அனஸ்தீஸியா கொடுக்கப்பட்டு மயக்க நிலையில்தான் செய்யப்படும். பெரும்பாலும் லேபராஸ்கோபி முறையில்தான் செய்யப்படுகிறது. காரணம், இதன் மூலம் குணமடையும் காலம் வேகமானதாக இருக்கும். முன்பே சொன்னது போல் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் மூன்று வகைகள் உள்ளன.

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி

    இரைப்பை என்றாலே வயிறு என்று அர்த்தம். எக்டோமி என்றால் ரிமூவ் செய்வது, ஸ்லீவ் என்றால் வெட்டி எடுத்தல் என்ற பொருள்படும். இந்த ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி நிலையில் வயிற்றில் 80 சதவீதம் பகுதியை வெட்டி எடுத்து விட்டு மீதி உள்ள 20 சதவீதம் பகுதியை தையல் போட்டு விடுவார்கள். இதன் அடிப்படையே பெரிதாக இருக்கும் வயிற்றை சிறிதாக மாற்றுதல். அப்படி உங்கள் வயிறு சிறிதாக மாறிவிட்டால் உங்கள் உணவு உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். உங்கள் வயிற்றுப்பகுதியில் சுரக்கும் கிரெலின் என்ற ஹார்மோனும் கூட குறைவாகவே சுரக்கும்.

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி நன்மைகள்

    * அதிக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது

    * மிக குறைந்த நாட்களே மருத்துவமனையில் இருக்க வேண்டிய தேவை வரும்

    * மிக எளிய மற்றும் மற்ற வகைகளோடு ஒப்பிடும் போது இது ஒரு சிறிய அறுவை சிகிச்சையே..

    ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி பக்கவிளைவுகள்

    * ஒருமுறை வயிற்றை வெட்டி எடுத்து விட்டால் மீண்டும் பொருத்தமுடியாது.

    * இந்த அறுவை சிகிச்சையில் வயிறு உறிஞ்சக்கூடிய நியூட்ரிஷன்ஸ், ஜூஸ்கள் அனைத்தும் உறிஞ்சப்படுவதற்குள் வெளியேறி விடும்.

    * இதனால் சிலருக்கு நியூட்ரிஷியன் குறைபாடு ஏற்படலாம்.

    * அமில எதிர்வினை ஏற்படும் வாய்ப்புண்டு.

    • குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    • காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். அதன் மூலம் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்று நம்புகிறார்கள். அப்படி கலோரிகளை வேகமாக எரிப்பதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியாது. உடற்பயிற்சி வழக்கத்தை முறையாக பின்பற்றி வருவதுடன் மேலும் சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை குறித்து பார்ப்போம்.

    1. தண்ணீர்:

    காலையில் எழும்போது பலருக்கும் ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். பல் துலக்கியதும் தண்ணீர் பருகுவதன் மூலம் அதனை விரட்டியடிக்கலாம். ஒரு டம்ளர் சூடான நீருடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். சியா விதை அல்லது ஆளிவிதையை சூடான நீரில் கலந்தும் பருகலாம். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும். வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் காலை வேளையில் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்யலாம். உடல் எடை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

    2. உடற்பயிற்சி:

    தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது முடியாத பட்சத்தில் ஏதாவதொரு யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். அது சுறுசுறுப்பாக உணர வைக்கும். அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு மன ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

    3. புரதம்-நார்ச்சத்து:

    காலை உணவை ஒரு போதும் தவிர்க்கக்கூடாது. அது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவாக அமைந்திருப்பது சிறப்பானது. நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை அவை தரும். மதிய உணவுக்கு இடையே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதையும் தடுக்க உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

    4. நீர்ச்சத்து:

    எல்லா பருவ காலநிலையிலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதிலும் கோடையில் வியர்வை அதிகமாக வெளியேறி எலக்ட்ரோலைட் சம நிலையின்மை மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், புத்துணர்ச்சியூட்டும் பானங்களை அடிக்கடி பருக வேண்டும். அவை உடல் எடையை குறைப்பதற்கும் வித்திடும்.

    5. நீச்சல்:

    நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சியூட்டும். உடலுக்கும் சிறந்த பயிற்சியாகவும் அமையும். கோடையில் ஏற்படும் சோர்வை விரட்டி உற்சாகத்தையும் கொடுக்கும். நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது டோபமைன் வெளியீட்டை தூண்டும். தொப்பை கொழுப்பை எரிப்பதற்கு இது நல்ல பயிற்சியாகவும் அமையும்.

    6. இரவு உணவு:

    கோடை காலத்தில் இரவு உணவை குறைவாகவே சாப்பிட வேண்டும். அவை எளிதில் செரிமானமாகும் விதமாகவும் இருக்க வேண்டும். இரவில் தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    7. தூக்கம்:

    முறையான தூக்கம் முக்கியம். அது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். போதுமான நேரம் தூங்காதது எடை அதிகரிப்பு மற்றும் பசிக்கு வழிவகுக்கும்.

    ×