search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்"

    • லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் லாரிகள் மிக்ஜம் புயலால் சென்னைக்குள் செல்ல முடியால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பால், ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள், ஜவுளிகள் உள்பட பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு சரக்குகள் அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது சென்னையில் புயல் வெள்ளம் வடியாத நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல முடியாத நிலையால் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரிகளுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72 கோடிக்கும் மேல் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், முட்டைகள், மளிகை பொருட்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

    லாரி தொழிலை நம்பியுள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இது தவிர நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டைகள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட்டைகள் கடந்த 4 நாட்களாக நாமக்கல்லில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    ×