search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பூரவல்லி டீ"

    • டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினம்.
    • சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

    புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது.

    தேநீரின் சுவைக்கும், நறுமணத்திற்கும் காரணமான தேயிலையுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மற்ற மூலிகைகளையும் கலந்து பருகலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே...

    தேயிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி டீ தயார். இது குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தேயிலையுடன் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருகவும்.

    இந்த தேநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை இனிப்பு சேர்க்காமல் பருகலாம். தேயிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும், அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீயாக பருகலாம். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது அதிக பலன் தரும்.

     தேயிலை மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கொய்யா இலை டீயாக பருகலாம். கொய்யா இலைக்கு மாற்றாக கொத்தமல்லித்தழை அல்லது புதினா இலையைச் சேர்த்து கொதிக்க வைத்தும் பருகலாம்.

    தேயிலையுடன் தனியா விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து தனியா டீயாக பருகலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தனியா டீ, ரத்த சோகையை தடுப்பதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்தும். தேயிலையுடன் இஞ்சி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் இஞ்சி டீ தயார். இதில் இஞ்சிக்கு மாற்றாக மிளகு சேர்த்தும் தயாரிக்கலாம். இது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

     முருங்கை கீரை மற்றும் எலுமிச்சை இலை இரண்டையும் தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும்.

    செம்பருத்தி பூக்களை தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். செம்பருத்திக்கு பதிலாக ரோஜா இதழ்களை சேர்த்தும் தயாரிக்கலாம். ரோஜாப்பூ டீ இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து தூக்கத்தை சீராக்கும்.

     தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி டீ தயார். செரிமானக் கோளாறு, சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும்.

    ×