search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாண் பேனர்ஜி"

    • வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • இதுவரை இரு அவைகளிலிருந்தும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
    • எம்.பி.க்கள் வெளியேற்றம் ஏன் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் நடந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்றும் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, அவையில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் இதுவரை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கையை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வெளியே வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்றத்தின் "மகர் த்வார்" வாயிலில் உள்ள படிக்கட்டுகளில் அவர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது மேற்கு வங்க செரம்போரே (Serampore) தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) மக்களவை உறுப்பினர் கல்யாண் பேனர்ஜி (Kalyan Banerjee) மாநிங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் (Vice president Jagdeep Dhankhar) பேசுவதை போல் மிமிக்ரி செய்து நடித்து காண்பித்தார். அத்துடன் அவர், "எனது முதுகெலும்பு நேராக உள்ளது. நான் மிக உயர்ந்து இருக்கிறேன்" என கூறினார். உடலசைவகளையும் துணை ஜனாதிபதியை போலவே செய்து காட்டினார்.

    நகைச்சுவையாக அவர் மிமிக்ரி செய்ததை பல எம்.பி.க்கள் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவும் செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியும் இதனை தனது போனில் பதிவு செய்தார்.

    இச்சம்பவம் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.

    மீண்டும் பாராளுமன்றம் மதியம் கூடிய போது ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து, "மாநிலங்களவை தலைவர் பதவியும் சபாநாயகர் பதவியும் வெவ்வேறானவை. அரசியல் கட்சிகளுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சியின் (காங்கிரஸ்) மூத்த தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரின் நடத்தையை வீடியோ எடுக்கிறார். மக்களவை தலைவரை மிமிக்ரி செய்வது எவ்வளவு அபத்தமானது? எவ்வளவு வெட்கக்கேடானது? இதை ஒருக்காலும் ஒப்பு கொள்ள முடியாது" என ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் நடவடிக்கையையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் விமர்சித்து, "எம்.பி.க்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொள்வார்கள்" என பதிவிட்டுள்ளது.


    ×