என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா அரசாங்கம்"

    • கேரள கலாச்சாரத்தின் பல கொண்டாட்டங்களில் பம்பை நதிக்கு தனிச்சிறப்பு உண்டு
    • வீடியோவில் தனியார் ஓட்டலின் கழிவு நீர் நேரடியாக பம்பையில் கலப்பது தெரிகிறது

    கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்று 176 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பம்பை.

    பீருமேடு பீடபூமியின் (Peerumedu plateau) புலச்சிமலை (Pulachimalai) பகுதியில் தோன்றும் பம்பை நதி பல பிரிவுகளாக ஓடுகிறது.

    இந்துக்களின் புனிதத்தலமான சபரிமலை இந்த நதிக்கரையில்தான் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை நதியில் குளிப்பதை, புனிதமான செயலாக கொள்வது வழக்கம். கங்கை நதிநீருக்கு ஒப்பான புனித நீராக பம்பையை இந்துக்கள் கருதுகின்றனர்.

    "கேரளத்தின் நெற்களஞ்சியம்" (rice bowl of Kerala) என அழைக்கப்படும் குட்டநாடு பகுதியில் பம்பை ஆற்று நீரினால் நெல் விவசாயம் சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    கேரள கலாச்சார கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய அம்சமாகவும் பம்பை நதி விளங்குகிறது.

    ஆனால், சமீப சில வருடங்களாக பம்பை நதிநீர் அசுத்தமாக்கப்படுவதாகவும் நதி ஓடி வரும் கரைகளில் சில இடங்களில் இருந்து கழிவு நீரும் அதில் கலப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது மட்டுமின்றி கரையில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் நீரில் கலப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    கடந்த 2018 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் பம்பையின் தூய்மையை காக்கும் வகையிலும், சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில், ஒரு தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பம்பை ஆற்றில் தொடர்ந்து கலக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

    குளியலுக்கும், குடிப்பதற்கும் நதிநீரை பயன்படுத்துபவர்களின் ஆரோக்கியத்திற்கு இச்செயல் நீண்டகால உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பம்பையில் நீராடும் சபரிமலை பக்தர்களும், இச்செயலை உடனடியாக கேரள அரசு தலையிட்டு நிறுத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

    ×