என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர்"

    • காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கிய பங்கு வகித்துள்ளார்.
    • ராமர் கோயில் திறப்பதற்கு நல்ல நாள் குறித்தவர், தமிழரான ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ந்தேதி திறக்கப்படுகிறது. இதில் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். ராமர் கோயில் அமைக்கும் பணியில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

    ஜெயேந்திரர், தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ராமர் கோயில் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். இதனால் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரும் அயோத்தி ராமர் கோயில் அமைப்பதில் பல ஆலோசனைகள் அளித்து முக்கிய பங்கு வகித்துள்ளார். கோயில் கட்டுவதற்காக பூமி பூஜையன்று கருங்காலி மரத்தில் நவரத்தினங்கள் பதித்த சங்கு, காஞ்சியிலிருந்து 2 செங்கற்கள், 5 தங்க காசுகள், தாமரை பட்டயம் அனுப்பியிருந்தார்.

    விஜயேந்திரர் கூறியபடியே நல்ல நாள் குறிக்கவும், ராமர் சிலை அமைக்கும் பிராண் பிரதிஷ்ட சமாரோஹம் செய்யவும் பண்டிதர்கள் அமர்த்தப்பட்டனர். ராமர் கோயில் திறப்பதற்கு நல்ல நாள் குறித்தவர், தமிழரான ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார். இவர் ஏற்கெனவே ராமர் கோயில் பூமி பூஜைக்காக, விஜயேந்திரர் வழிகாட்டுதலின் பேரில் நல்ல நாள் குறித்திருந்தார்.

    வாரணாசியில் பிரதமர் மோடியால் புனரமைத்து திறக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இவரே தான் நாள் குறித்தார். இவர் ஜோதிட சாஸ்திர நிபுணர் ஆவார். வாரணாசியின் ஹனுமர் படித்துறையில் தமிழக பிராமணர்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே உள்ள திருவிசைநல்லூர் கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்களில் ஒருவரான ராஜேஷ்வர சாஸ்திரி திராவிட், காசி ராஜாவிற்கு ராஜகுருவாக இருந்தார். இவரது 3-வது மகன்தான் ஸ்ரீகணேஷ்வர சாஸ்திரி திராவிட் ஆவார். சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கூறியதன் பேரில் ராமர் சிலை உயிர்ப்பித்தல் பணிக்கு வாரணாசியின் பிரபல பண்டிதர் லஷ்மிகாந்த் மதுரநாத் தீட்சித் (86) தலைமை வகிக்கிறார். இவர், 17-ம் நூற்றாண்டில் வாரணாசியில் வாழ்ந்த பண்டிதரான கங்கா பட் என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத அறிஞரின் பரம்பரையில் வந்தவர்.

    ராமர் சிலையை அமைக்கும் பணியை ஏற்றுள்ள லட்சுமிகாந்த் தீட்சித்தின் கீழ், 150 பண்டிதர்கள் ஓதுவார்களாக இருப்பார்கள். இவர்கள் ஜனவரி 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்களுக்கு, ராமர் சிலை அமைக்க வேதங்களை ஓதி பிரதிஷ்டை செய்கிறார்கள்.

    ×