search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசுரம்-8"

    • நாராயணனைப் பாடித் துதித்தால் வேண்டுபவை எல்லாம் தருவான்.
    • சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா?

    திருப்பாவை

    பாடல்:

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்

    போவான் போகின்றாரைப் போகாமல்

    காத்துன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

    பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு

    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

    ஆவாவென் றாராயந் தருளேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவளே! கிழக்கு வெளுத்து விட்டது. எருமைகள் பனிப் புல்லை மேயச் சென்றுவிட்டன. பாவை நோன்பிற்காக நீராடச் சென்றவர்களை போகவிடாமல் தடுத்து, உன்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறோம். குதிரை வடிவில் வந்த அரக்கனையும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களையும் அழித்தவனும், தேவாதி தேவனுமாகிய நாராயணனைப் பாடித் துதித்தால், அவன் நோன்பிற்குரிய அருளாசி மற்றும் நாம் வேண்டுபவை எல்லாம் தருவான். எழுந்திடுவாய்!

    திருவெம்பாவை

    பாடல்:

    கோழிச் சிலம்ப சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்

    கேட்டிலையோ?

    வாழீயீ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழி கூவுகிறது. நீர்ப் பறவைகளும் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் வெண்சங்கு முழங்கும் ஒலியும் கேட்கிறது. ஏழில் என்னும் இசைப் பாமாலையில் ஒப்பற்ற பரஞ்சோதியாகவும், எல்லா உலகங்களும் அழிந்துபடும் ஊழிக்காலத்திலும் கூட, முதல்வராக விளங்கும் சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா? அதுவே அவன் அன்பைப் பெறும் வழிமுறையாகும். உன் உறக்கம் என்ன உறக்கமோ? எழுந்திடுவாய்.

    • எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம்.
    • சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம்.

    திருப்பாவை

    பாடல்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம் கோதுகுலம் உடைய

    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

    மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. ஆயர்குல பெண்கள் பாவை நோன்பிற்காக நீராட புறப்பட்டு விட்டனர். உன்னையும் நீராட அழைத்துச் செல்ல வேண்டி, அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது உன்னை எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம். குதிரை வடிவில் வந்த அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன், மல்யுத்தம் செய்ய வந்தவர்களை வென்றவன், தேவர்களுக்கு தலைவனான கிருஷ்ணனைப் பாடி வணங்கினால் நாம் விரும்பிய அனைத்தையும் கேட்டு அவன் நிறை வேற்றுவான். நாங்கள் சொல்வதை ஏற்று புறப்படு!

    திருவெம்பாவை

    பாடல்

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. வீடுகளில் ஏழிசை கருவிகள் முழங்குகின்றன. எங்கும் வெண் சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற பேரருளைக் கொண்ட சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம். இத்தனையும் உனக்கு கேட்கவில்லையா? இதற்குப் பிறகும் தெளியாத உன் உறக்கம் என்ன உறக்கமோ? வாய் திறந்து பேச மாட்டாயா? திருமால், தன் கண்ணை பறித்து சிவபெருமானுக்கு சாத்தி சக்கரத்தை பரிசாகப் பெற்றார். அதேபோன்று இறைவனிடம் அன்பு கொண்டு பெருவாழ்வு பெறுவோம். உலகம் எல்லாம் ஒடுங்கக்கூடிய பிரளய காலத்தில் இறுதியில் தான் ஒருவ னாக நின்று காத்தருளும் தலைவனாகிய சிவனைப் பாடுவோம்.

    ×