என் மலர்
நீங்கள் தேடியது "எல்பி ரெகார்டுகள்"
- இங்கிலாந்தில் எல்பி ரெகார்டுகளின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது
- ஹெச்எம்வி (HMV) ஷோரூமில் புதிய தலைமுறையினரும் அதிகம் வாங்குகின்றனர்
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பிரபல பாடகர்களின் ஆல்பங்கள் 1970-80களில் எல்பி ரெகார்ட் (LP Record) எனப்படும் வட்டவடிவ கிராமபோன் தட்டுக்களில் பதிவாகி விற்கப்பட்டு வந்தது. 1990களிலும், பிறகு 2000 தசாப்த தொடக்கங்களிலும் கேசட் (cassette) வடிவிற்கு வரவேற்பு அதிகம் இருந்தது.
அதற்கு பிந்தைய காலகட்டத்தில் இசைப்பிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினி மற்றும் மொபைல் போன்களில், "ஸ்ட்ரீமிங்" செய்யப்பட்ட பாடல்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து கேட்க முடிந்தது.
இதனால் அனைத்து வடிவ இசைத்தட்டுக்களும் விற்பனையாவது குறைய தொடங்கி, அவற்றை தயாரிப்பதும் படிப்படியே நின்று போனது.
இந்நிலையில், இங்கிலாந்தில் சமீப காலங்களில் எல்பி ரெகார்டுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
எல்பி ரெகார்டுகளை விற்பனை செய்பவர்களின் கூட்டமைப்பு (British Phonographic Industry trade group), கடந்த வருடத்தை காட்டிலும் 11.7 சதவீதம் - சுமார் 60 லட்சம் (5.9 மில்லியன்) - எல்பி ரெகார்டுகள் விற்றிருப்பதாக தெரிவித்தது.
அதிக விற்பனையான ரெகார்டுகளில், புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டேலர் ஸ்விஃப்ட்-டின் (Taylor Swift) 1989 ஆல்பம், ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) குழுவினரின் ஹேக்னே டயமண்ட்ஸ் (Hackney Diamonds) ஆல்பம் ஆகியவை முன்னணியில் உள்ளன.
இசை ரசிகர்களின் கேட்கும் முறையில், ஐந்தில் ஒரு பங்கு, கணினி மற்றும் இணையவழியில் இருந்தாலும், "எல்பி", "கேசட்", மற்றும் "சிடி" விற்பனை பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வேகம் பிடித்துள்ளது.
சேகரித்து வைத்து கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கும் வசதி இருப்பதாலும், "ஸ்ட்ரீமிங்" இசையை விட மிக துல்லிய இசை வடிவத்தை கேட்க முடிவதாலும் இசைப்பிரியர்கள் இவற்றில் ஆர்வம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.
லண்டன் நகரின் ஆக்ஸ்போர்டு தெருவில், சுமார் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட ஹெச்எம்வி (HMV) ரெகார்டு ஷோ ரூம், புதிய தலைமுறையினரும் எல்பி மற்றும் கேசட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
விற்பனையில் புது பாடல்கள் மட்டுமின்றி பழைய பாடல்களும் அதிகம் விரும்பப்படுகின்றன.
மென்பொருள் வடிவில் இல்லாமல் எளிதில் கையாளப்பட கூடிய வடிவில் இருப்பதால் இசைப்பிரியர்கள் சிடி போன்றவற்றை அதிகம் வாங்குவது ஒரு வரவேற்கதக்க மாற்றம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாற்றம் பிற நாடுகளுக்கும் பரவலாம் என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.