search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெத்தை அம்மன் திருவிழா"

    • காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.
    • ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி ஹெத்தையம்மன் திருவிழா கடந்த 27-ந் தேதி கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகர் இனமக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசிக்க கூடிய பகுதிகளில் 6 கிராமம், 8 கிராமம், 10 கிராமம் என கிராமங்களாக சேர்ந்து ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி குன்னூர் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் 8 கிராம மக்கள் இணைந்து திருவிழாவை விமரிசையாக கொண்டாடினர்.

    இதில் மல்லிக்கொறை, காரக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்ளிட்ட 8 கிராம படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருவிழாவையொட்டி காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.

    ஊர்வலத்தில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய வெண்ணிற ஆடை அணிந்து, பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து கொண்டு, நடனமாடிய படி ஹெத்தையம்மன் குடையுடன் செங்கொல் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    காரக்கொரையில் தொடங்கிய ஊர்வலமா னது, ஜெகதளா வந்து, மல்லிக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்பட 8 கிராமத்திற்கும் சென்று, மீண்டும் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலை அடைந்தது.

    இதனை தொடர்ந்து, படுகர் இன மக்கள் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்னர் கோவிலில் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமும் ஆடினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த திருவிழாவில் 8 கிராம படுகர் இன மக்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இருந்தும் படுகர் இன மக்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதுதவிர வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    ×