search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனைத்தொழிலாளர்கள்"

    • ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.
    • 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், வேடப்பட்டி, விருசம்பட்டி, புளியங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.

    அதன்படி, தற்போது பனங்கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பனை மரத்திலிருந்து பனங்கொட்டைகளை வெட்டி மண்ணில் புதைத்து பனங்கிழங்கு அறுவடை செய்து வருகின்றனர்.

    ஆனால் விளாத்திகுளம் பகுதிகளில் பனை மரத்திலிருந்து விழும் பனங்கொட்டைகளை எடுத்து மண்ணில் புதைத்து அதன் மூலம் பனங்கிழங்கு அறுவடை செய்வதால், அதிக ருசித்தன்மையுடனும், மருத்துவகுணத்துடனும் இருப்பதாக இப்பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி - இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதைப் போல இந்தாண்டு பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    அதேபோல் பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×